கோள்கள்: ஒரு அறிமுகம்
எழுதியது: சிறி சரவணா
அறிவியல் என்பது ஒரு தொடர்ச்சியான மாறுதல்களுக்கு உட்பட்ட ஒரு செயன்முறை. அதில் கேள்வி கேட்டல், முன்கருத்தை உருவாக்குதல், கண்டறிதல், முன்னைய கருத்துக்களை புதுக்கண்டுபிடிப்புக்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல் என்று இந்தச் செயன்முறை தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும். அறிவியல் கண்டுபிடிப்புக்களே, தர்க்கரீதியாக கண்டறிந்து அதனைப் பரிசோதனை செய்து அதிலிருந்து முடிவிகளைப் பெற்றே உருவாக்கப்படுகின்றன.
இப்போது விடயத்திற்கு வருவோம். இந்தப் பிரபஞ்சம் பற்றியும் அதனது தோற்றம் பற்றியும் நமது கருத்துக்கள், ஆதிகாலத்திலிருந்தே பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. புதிய உத்திகளைப் பயன்படுத்தி நாம் சேகரிக்கும் தரவுகள், எம்மைப் புதிய பாதையில் சிந்திக்கத் தூண்டுகின்றன. இப்படியான புதிய தரவுகள், நாம் பொருட்களை எப்படி வகைப்படுத்தியுள்ளோம் என்பதை மீண்டும் ஒரு முறை சிந்திக்கத் தூண்டுகிறது. புதிய கருத்துக்கள், அல்லது ஒரு பொருளை நாம் பார்க்கும் கோணம், ஒரு கோட்பாட்டை ஆராய்வதன் மூலம் உருவாகிறது.