பிரபஞ்சத்தின் எல்லையில் ஒரு புகைப்படம்
எழுதியது: சிறி சரவணா
இரவு நேர வானை நீங்கள் அவதானித்து இருந்தால், பல உடுக்களை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள். ஒரு தெளிவான இரவு வானில், உங்களால் அண்ணளவாக 3000 தொடக்கம் 4000 வரையான உடுக்களை பார்க்கலாம். இந்த உடுக்கள் எல்லாம் எமது பால்வீதியில் இருப்பவைதான். கொஞ்சம் உன்னிப்பாக அவதானித்தால் அன்றோமீடா உடுப்பேரடையையும் வெறும் கண்ணால் பார்க்கலாமாம். அன்றோமீடா உடுப்பேரடை நமது பால்வீதியில் இருந்து கிட்டத்தட்ட 2.5 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறது. இதுதான் நமது பால்வீதிக்கு மிக அருகில் இருக்கும் உடுப்பேரடை.
இந்த இரவு வானம் ஒரு அற்புதமான விடயம், நீங்கள் இரவு வானில் பார்ப்பது வெறும் உடுக்கள் அல்லது பொருட்கள் மட்டுமல்ல, நேரத்தையும் தான். உண்மையிலேயே நீங்கள் பார்ப்பது ஒரு இறந்தகால வானத்தை. நமக்கு மிக அருகில் இருக்கும் புரோக்சிமா சென்ட்டரி என்னும் உடு, அண்ணளவாக 4.2 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறது. அப்படியென்றால் இன்று நாம் பூமியில் இருந்து பார்க்கும் போது தெரியும் ப்ரோக்சிமா சென்ட்டரி உடு, 4.2 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதைத்தான் இன்று நாம் பார்க்கிறோம். ஏனென்றால் அங்கிருந்து ஒளி வந்தடைய 4.2 ஆண்டுகள் எடுக்கிறது.