உயிரின் அடிப்படைக் கட்டமைப்பு

உயிரின் அடிப்படைக் கட்டமைப்பு

எழுதியது: சிறி சரவணா

நீங்கள் லெகோ கட்டிகளை வைத்துப் பல சிறிய பொருட்களை உருவாக்கியிருப்பீர்கள். உதாரணமாக சிறிய வீடு, பாலம், கார் என்பன. சிலர் முழு அளவுகொண்ட வீடுகள், ராக்கெட்கள், அதையும் தாண்டி முழுஅளவிலான கப்பல்கள் என்பனவற்றையும் உருவாக்கியுள்ளனர். இப்படியான வியக்கத்தக்க லெகோ கட்டமைப்புகளைப்போலவே, மனிதனும், நுண்ணிய பகுதிகள் பல சேர்ந்தே உருவாக்கப்பட்டிருக்கிறான். மனிதனின் இந்த அடிப்படைக் கட்டமைப்பு சேதன மூலக்கூறுகள் (organic molecules) எனப்படுகின்றன.

லெகோ கட்டிகளைப் போலல்லாமல், மூலக்கூறுகள் மிக மிகச் சிறியவை. அவற்றை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. மிகச் சக்திவாய்ந்த நுணுக்குக்காட்டிகளைக் கொண்டு மட்டுமே அவற்றைப் பார்க்க முடியும். இந்த சேதன மூலக்கூறுகள், கார்பன், ஹைட்ரோஜன், மற்றும் ஒக்சீசன் போன்ற மூலகங்களால் ஆக்கப்பட்டுள்ளது. இப்படியான சேதன மூலக்கூறுகள் பிரபஞ்சத்தின் எல்லாப்பகுதிகளிலும் காணப்படுகின்றன.