தமிழிலும் எழுதலாம் வாங்கோ!
இன்று ஒருங்குறி (unicode) பயன்பாடு அதிகரித்த பின், தமிழைக் கணனிகளில் பயன்படுத்துவது என்பது மிக மிக எளிதாக மாறிவிட்டது என்றே சொல்லவேண்டும். முன்பொரு காலத்தில், தமிழ் இணையத்தளங்களைப் பார்வை இடுவதற்கே அந்தத் தளத்தில் இருந்து எழுத்துருவை பதிவிறக்க வேண்டிய நிலை இருந்தது. பின்பு இந்தத் தமிழ் ஒருங்குறியின் பயன்பாடு அதிகரித்த பின்னர், எல்லாத் தமிழ் தளங்களும் ஒருங்குறி எழுத்துருக்களைப் பயன்படுத்த தொடங்கியவுடனும், இயங்கு முறைமைகளும், தமிழ் ஒருங்குறியை இயல்பாக ஆதரித்ததாலும் இந்தப் பிரச்சினை தீர்ந்தது.
வாசிக்க முடிந்தாலும், என்னைப் போன்றவர்களுக்குத் தமிழில் எழுதுவது என்பது எட்டாக் கனியாகவே இருந்தது என்றால் அது மிகையில்லை. ஆங்கில விசைப்பலகையில், தமிழில் எழுதுவதற்கு நிச்சயம் பயிற்சி வேண்டும். ஒரு அளவு வேகமாக ஆங்கிலத்தில் தட்டச்சுச் செய்யப் பழகியபின்னர், மீண்டும் தமிழில் ஸ்லோவாகத் தட்டச்சுச் செய்யப் பழகுவது என்பது மிகச் சிரமமான காரியம்! நான் அந்த முயற்ச்சியை கைவிட்டு விட்டேன்!