தமிழிலும் எழுதலாம் வாங்கோ!

இன்று ஒருங்குறி (unicode) பயன்பாடு அதிகரித்த பின், தமிழைக் கணனிகளில் பயன்படுத்துவது என்பது மிக மிக எளிதாக மாறிவிட்டது என்றே சொல்லவேண்டும். முன்பொரு காலத்தில், தமிழ் இணையத்தளங்களைப் பார்வை இடுவதற்கே அந்தத் தளத்தில் இருந்து எழுத்துருவை பதிவிறக்க வேண்டிய நிலை இருந்தது. பின்பு இந்தத் தமிழ் ஒருங்குறியின் பயன்பாடு அதிகரித்த பின்னர், எல்லாத் தமிழ் தளங்களும் ஒருங்குறி எழுத்துருக்களைப் பயன்படுத்த தொடங்கியவுடனும், இயங்கு முறைமைகளும், தமிழ் ஒருங்குறியை இயல்பாக ஆதரித்ததாலும் இந்தப் பிரச்சினை தீர்ந்தது.

வாசிக்க முடிந்தாலும், என்னைப் போன்றவர்களுக்குத் தமிழில் எழுதுவது என்பது எட்டாக் கனியாகவே இருந்தது என்றால் அது மிகையில்லை. ஆங்கில விசைப்பலகையில், தமிழில் எழுதுவதற்கு நிச்சயம் பயிற்சி வேண்டும். ஒரு அளவு வேகமாக ஆங்கிலத்தில் தட்டச்சுச் செய்யப் பழகியபின்னர், மீண்டும் தமிழில் ஸ்லோவாகத் தட்டச்சுச் செய்யப் பழகுவது என்பது மிகச் சிரமமான காரியம்! நான் அந்த முயற்ச்சியை கைவிட்டு விட்டேன்!

அது ஒரு பிரச்சினை என்றால், தமிழில் எனக்கு இருக்கும் இன்னொரு பிரச்சினை, சின்ன ‘ர’ பெரிய ‘ற’, மற்றும் ‘ன’, ‘ண’ போன்ற எழுத்துக்களுக்கு இடையில் இருக்கும் வித்தியாசங்களைக் கண்டறிதல்.

இன்று இருக்கும் சில பல ப்ரோக்ராம்கள் என்னைப் போன்றவர்களையும் தமிழில் எழுத ஊக்குவிக்கின்றன. நான் மேற்குறிபிட்ட பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க இவை உதவி செய்கின்றன. அப்படி நான் பயன்படுத்தும் சில பல ப்ரோக்ராம்களை நான் உங்களுக்கு இந்தப் பதிவில் உங்களுக்காகச் சொல்கிறேன்.

விண்டோஸிற்கான கூகிள் உள்ளீட்டுக் கருவி (Google Input Tools for Windows)

நான் தமிழைத் தட்டச்சுச் செய்யப் பயன்படுத்தும் கருவி இதுதான். அதாவது ஒலி உச்சரிப்பு முறை மூலம் ஆங்கில எழுத்துக்குக்குத் தமிழ் வடிவம் கொடுக்கும் இந்தக் கருவி, எனக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லவேண்டும்!

ஆங்கிலத்தில் ‘ammaa’ என்று தட்டச்சுச் செய்ய, இந்தக் கருவி அதை ‘அம்மா’ என்று தமிழ் ஒருங்குறியில் மாற்றுகிறது! ஆக எனக்கு, இந்தத் தமிழ் எழுத்துக்கள், ஆங்கில விசைப்பலகையில் எங்கு இருக்கிறது என்று தேடித் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை.

ginta

இந்த வேலையைச் செய்ய வேறு சில ப்ரோக்ராம்கள் இருந்தாலும், எனக்கு இந்தக் கூகிள் கருவி பிடித்ததற்குக் காரணம், இது வெறுமனே நான் எழுதும் ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் வார்த்தைகளைக் காட்டாமல், அதனோடு த்டர்பு பட்ட சில சொற்களையும் காட்டும். ஆக ‘ர’, ‘ற’ மற்றும் ‘ன’, ‘ண’ போன்ற சிக்கலில் இருந்து தப்பித்து விடலாம்.

அதுமல்லாது, பூரணமாகச் சொற்களைத் தட்டச்சு செய்யமுன்னரே இந்தக் கருவி, பொருத்தமான சொற்களைப் பரிந்துரைக்கிறது. இதுவும் இந்தக் கருவியின் மிக முக்கிய அம்சம். அதுமட்டுமல்லாது, நாம் பாவிக்கும் சொற்களின் அமைப்பை இது ஞாபகம் வைத்திருந்து மீண்டும் உபயோகிக்கும் போது அந்தச் சொற்களை முதலாவதாகப் பரிந்துரைப்பதால், இந்தக் கருவியைத் தொடர்ந்து பயன்படுத்திவர, அதன் பரிந்துரைக்கும் துல்லியத்தன்மையும் அதிகரிக்கிறது.

நன்றி கூகிள்! இப்படி ஒரு அற்புதமான கருவியை உருவாக்கியதற்காக. நீங்களும் இந்தக் கருவியை முயற்சித்துப் பாருங்கள்.

அடுத்தது நல்ல அகராதி இது கொஞ்சம் சிக்கலுக்குரிய விடயம்தான், நான் தேடியவரை, ஒரு மிகப் பூரணமான தமிழ் மின்அகராதி இல்லை என்றே சொல்லவேண்டும். பல்வேறுபட்ட தமிழ் மின் அகராதிகள் இருப்பினும், சிலவற்றில் இருக்கும் சொற்கள், சிலவற்றில் இருப்பதில்லை. பெரும்பாலும் புதிய தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கலைச்சொற்கள் இந்த அகராதிகளில் இருப்பதே இல்லை.

பெரும்பாலும் நான் அறிவியல் சார்ந்த விடயங்களைப் பற்றி எழுதுவதால், பல்வேறு இடங்களில் இருந்து குறிப்பிட்ட ஆங்கிலச் சொல்லிற்கு உரிய தமிழ் சொற்களை ஆராயவேண்டியுள்ளது.

பெரும்பாலும் நான் முதலில் செல்வது விக்கிபீடியாதான். குறிப்பிட்ட ஆங்கில விடயத்திற்குத் தமிழில் கட்டுரை இருக்கிறதா என்று பார்ப்பேன். அப்படி இல்லாவிடில், tamillexicon.com மிகச் சிறப்பான அகராதியைக் கொண்டுள்ளது. அங்குத் தேடிப்பார்ப்பேன். அப்படியும் இல்லாவிடில், கூகிள் மொழிமாற்றியை உபயோகித்து, ஆங்கிலப் பதத்தைத் தமிழுக்கு மாற்றிப் பார்ப்பேன். பெரும்பாலும் நல்ல சில சொற்கள் அங்குக் கிடைக்கும், சிலவேளை இறைவன் விட்ட வழி என்றும் ஆகிவிடும்.

Tamillexicon.com – தமிழ் மின்அகராதி

இதைப் பற்றி நிச்சயம் சொல்லியாகவேண்டும். நான் பயன்படுத்தியவரை, அதிகளவாகச் சொற்களைக் கொண்டிருப்பதுடன், ஆங்கிலச் சொல்லிற்குத் தமிழ் விளக்கம் பார்க்கவோ, தமிழ் சொல்லிற்கு ஆங்கில விளக்கம் பார்க்கவோ இது ஒரு மிகச்சிறந்த மின்அகரமுதலி. அதுமட்டுமல்லாது அவர்களது தளத்திற்குச் சென்றால் வெறி பல நல்ல தமிழ் சார்ந்த தொழில்நுட்பக் கருவிகளும் உண்டு.

அவர்களது எழுதி என்ற கருவி, பாமினி எழுத்துருவில் தட்டச்சு செய்ததை ஒருங்குறிக்கு மாற்றவும், ஒருங்குறியில் எழுதியதை பாமினிக்கு மாற்றவும், மற்றும் TSCII இல் எழுதியதை ஒருங்குறிக்கு மாற்றவும் உதவுகிறது.

நாவி – தமிழ் சந்திப் பிழைதிருத்தி

சில நாட்களுக்கு முன்னர்தான் நான் இந்தக் கருவியைக் கண்டறிந்தேன். அருமையான கருவி. தமிழ் இரண்டு சொற்களுக்கு இடையில் வரும் சந்திப் பிழைகளை இலகுவாக இது திருத்துவதுடன், மரபுப் பிழைகள் இருந்தாலும் அதையும் சுட்டிக் காட்டுகிறது. அருமையான படைப்பு!

வாணி – தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

இதுவும் மிக மிக அருமையான கருவி. நாவி கருவியை உருவாக்கியவரே இதையும் உருவாகியுள்ளார். எழுத்துப் பிழைகளை இது சுட்டிக்காட்டுவது மட்டுமல்லாது, அவற்றைத் திருத்துவதற்கும் சந்தர்ப்பம் அளிக்கிறது.

நீங்களும் என்னைப்போலத் தமிழ் எழுதுவதற்குப் புதிது என்றால், நிச்சயம் இந்தக் கருவிகள் உங்களுக்கு உதவி செய்யும்.