விண்மீன்களின் நாட்டியம்

மூன்று வருடங்களாக (2015, 2016, 2017) அட்டகாமாவில் உள்ள ALMA ரேடியோ தொலைநோக்கி சேகரித்த XY Tauri இரட்டை விண்மீன் குழுவின் தரவுகளை ஜப்பானைச் சேர்ந்த விண்ணியலாளர்கள் ஆய்வுசெய்துள்ளனர். இந்த தரவுகளைக் கொண்டு முதன்முறையாக ALMA அனிமேஷன் ஒன்றை இவ் விண்ணியலாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது XY Tauri இல் இருக்கும் இரண்டு விண்மீன்களும் ஒன்றையொன்று சுற்றிவருவதைக் காட்டுகிறது.

இந்த விண்மீன் நாட்டியத்தை பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் எவ்வாறு இரட்டை விண்மீன் தொகுதிகள் உருவாகின்றன என்றும் அவற்றைச் சுற்றி எப்படி கோள்கள் தோன்றுகின்றன என்றும் எம்மால் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

ரேடியோ தொலைநோக்கி மூலம் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு அசையும் அனிமேஷன் படங்களை உருவாக்கி ஆய்வு செய்வது விண்ணியலில் பல புதிய பக்கங்களை திறக்கும் என குறித்த ஆய்வின் மூத்த விஞ்ஞானி டக்கானோரி இச்சிக்கவா கருதுகிறார்.

பொதுவாக இரட்டை விண்மீன் தொகுதிகளின் ஆரம்ப பருவத்தில் அவற்றைச் சுற்றி மூலக்கூற்று வாயுக்கள் மற்றும் தூசுகள் பாரிய வட்டு வடிவத்தில் காணப்படும். இவற்றை மூலக்கோள் வட்டு (protoplanetrary disk) என அழைக்கின்றனர். இந்த மாதிரியான வட்டில்த்தான் கோள்கள் உருவாகும். பல இரட்டை விண்மீன் தொகுதிகளில் கோள்கள் இருப்பதை விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர். ஆனால் எப்படி இந்த விண்மீன்களைச் சுற்றி மூலக்கோள் வட்டு உருவாகின்றன என்றும் அவற்றில் இருந்து கோள்கள் எப்படி தோன்றுகின்றன என்பதும் இன்றுவரை புதிராகவே இருக்கிறது.

இரட்டை விண்மீன் தொகுதி தோன்றுவதைப் பற்றி விண்ணியலாளர்கள் இரண்டு விதமான கருதுகோள்களை கொண்டுள்ளனர். முதலாவது, பெரிய மூலக்கோள் வட்டு உடைந்து இரண்டு சிறிய வட்டுகளாக மாற்றமடைவது. அடுத்தது மூலக்கூற்று வாயுக்கள் பிரபஞ்சக் கொந்தளிப்பில் சிக்ககுன்று துண்டுகளாக உடைவது.

இரட்டை விண்மீன் தொகுதிகளைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு விண்மீனைச் சுற்றியிருக்கும் மூலக்கோள் வட்டின் அமைவிடம் எமக்கு முக்கியமான கதையைச் சொல்லக்கூடும். அவற்றின் சாய்வுக் கோணம் மற்றும் சுற்றிவரும் பாதையைப் பொறுத்து அவற்றின் அர்த்தம் மாறுபடும். XY Tauri இல் இருக்கும் இரண்டு விண்மீன்களின் அமைவிடத்தையும் அவதானிக்கும் போது இந்த இரண்டு விண்மீன்களும் மூலக்கூறு வாயுக்கள் உடைந்ததால் உருவாக்கியிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. ஆனாலும் இவற்றைப் பற்றி அறிந்துகொள்ள இன்னும் நிறைய விடையங்கள் இருக்கின்றன என்பதும் கண்கூடு.

படவுதவி: ALMA (ESO/NAOJ/NRAO)

மேலதிக தகவல்

நமது சூரியன் தனி விண்மீன் ஆகும். ஆனாலும் பிரபஞ்சத்தில் அதிகளவான விண்மீன்கள் இரட்டை விண்மீன் தொகுதிகளாகவே இருக்கின்றன. இரட்டை விண்மீன் தொகுதிகளில் இருக்கும் விண்மீன்கள் ஒன்றையொன்று சுற்றிவரும்.