பெரும் அரக்கர்களின் மோதல்

படத்தின் கீழ் இடது மூலையில் இருக்கும் மேகம் போன்ற அமைப்பை அவதானியுங்கள். அதுதான் NGC 1427A என பெயரிடப்பட்டுள்ள ஒழுங்கற்ற விண்மீன் பேரடை. தற்போது இந்தப் பேரடை மணிக்கு 2.2 மில்லியன் கிமீ வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது.

எதிர்காலத்தில் இந்தப் பேரடை படத்தின் மையத்தில் பிரகாசமாகத் தெரியும் இரண்டு விண்மீன் பேரடைகளான NGC 1399 மற்றும் NGC 1404 ஆகியவற்றுடன் நேரடியாக மோதும். NGC 1399(மேலே உள்ள பிரகாசமான புள்ளி), NGC 1404 (கீழே உள்ள பிரகாசமான புள்ளி) இரண்டும் Fornax கொத்தைச் சேர்ந்த விண்மீன் பேரடைகள். இவை இரண்டும் பூமிக்கு அருகில் வெறும் 60 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பவைதான்.

Fornax கொத்தில் இருக்கும் பிரகாசமான பேரடைகளில் NGC 1399, NGC 1404 அடங்கும். இவற்றின் ஈர்ப்புவிசை காரணமாக இவை ஒன்றையொன்று வேகமாக நெருங்கிக்கொண்டிருக்கின்றன. இரண்டும் அருகில் நெருங்க நெருங்க, ஈர்ப்புவிசை அதிகரித்து NGC 1404 விண்மீன் பேரடையில் இருக்கும் வாயுக்களை மற்றைய விண்மீன் பேரடை உருஞ்சுகிறது.

படத்தில் பார்க்கும் போது இந்த விண்மீன் பேரடைகள் சிறிதாக நமக்குத் தெரியலாம். ஆனால் இவை ஒவ்வொன்றிலும் பில்லியன் கணக்கான விண்மீன்கள் இருக்கின்றன.

உலகில் இருக்கும் மிகச் சக்திவாய்ந்த கமேராக்களில் ஒன்றான கரும்சக்தி கமெரா (Dark Energy Camera – DECam) மூலம் இந்தப் படம் எடுக்கப்பட்டது. கரும்சக்தி கணக்கெடுப்பின் ஒரு அங்கமாக இருக்கும் இந்த கமெரா 570 மெகாபிக்சல் திறன் கொண்டது. இந்தக் கமெராவைப் பயன்படுத்தி Fornax கொத்தில் இருக்கும் 300 இற்கும் மேற்பட்ட குறள் விண்மீன் பேரைகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

படவுதவி: CTIO/NOIRLab/DOE/NSF/AURA Acknowledgment: Image processing: T.A. Rector (University of Alaska Anchorage/NSF’s NOIRLab), J. Miller (Gemini Observatory/NSF’s NOIRLab), M. Zamani (NSF’s NOIRLab) & D. de Martin (NSF’s NOIRLab)

மேலதிக தகவல்

DECam ஒரு கணக்கெடுப்பு கருவியாக கருதப்படுகிறது. அதாவது இதைப் பயன்படுத்தி இரவு வானின் பெரும் பகுதியை படமெடுக்கமுடியும். எனவே ஆய்வாளர்களால் பிரபஞ்சத்தின் பெரும் கட்டமைப்புகளை இந்தப் படங்களில் இருந்து கண்டறிந்து படிக்கமுடியும். கணக்கெடுப்பு கருவிகள் மூலம் கண்டறியப்படும் விண்வெளிப் பொருட்கள் பின்னர் தொலைநோக்கிகள் கொண்டு மேலும் ஆவுகள் செய்யப்படும்.