விசித்திரமான பிறவிண்மீன் தொகுதியின் பாறைகள்

சூரியனைப் போன்றே வேறு விண்மீன்களை சுற்றிவரும் பல கோள்களை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் எப்படியான பொருட்களால் இந்தக் கோள்கள் உருவாகியிருகின்றன என்பதைக் கண்டறிவது இன்றுவரை சவாலான விடையமாகத்தான் இருக்கிறது. ‘வெள்ளைக் குள்ளன்’ வகை விண்மீன்களைச் சுற்றியிருக்கும் கோள்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் இக்கோள்களை உருவாக்கியிருக்கும் பாறைகள் நமது சூரியத்தொகுதியிலேயே இல்லாத வேறு விதமான பாறைகளாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

நமது சூரியன் போன்ற ஒரு விண்மீனின் வாழ்வின் இறுதியில் உருவாகும் விண்மீன் எச்சமே வெள்ளைக் குள்ளன் ஆகும். விண்மீன் ஒன்று இறக்கும் போது அதனிடம் இருக்கும் வாயுக்கள் பெரும் வெடிப்பில் சிதறி எறியப்பட மிகவும் அடர்த்தியான விண்மீனின் உட்பகுதி மட்டுமே எஞ்சும் – இதுவே வெள்ளைக் குள்ளன் விண்மீன். இதில் பெரும்பாலும் ஹைட்ரோஜன் மற்றும் ஹீலியம் அணுக்களே காணப்படும். சில வெள்ளைக் குள்ளர்களைச் சுற்றி பாறைகள், தூசுகள் என்பனவும் சுற்றிவரும் – இவை முன்னைய விண்மீனைச் சுற்றிவந்த கோள்கள், விண்கற்கள் என்பவற்றின் எச்சமாகும்.

விண்ணியலாளர் Siyi Xu மற்றும் புவியியலாளர் Keith Putirka இருவரும் சூரியனில் இருந்து 650 ஒளியாண்டுகளுக்குள் இருக்கும் 23 தூசு துணிக்கைகள் சுற்றிவரும் வெள்ளைக் குள்ளன் வகை விண்மீன்களை ஆய்வு செய்துள்ளனர். ஹைட்ரோஜன் மற்றும் ஹீலியம் ஆகிய மூலகங்களைத் தவிர்த்து இவ்வெள்ளைக் குள்ளர்களைச் சுற்றி இருக்கும் பிரதேசத்தில் காணப்படும் மூலகங்களை கண்டறிவதன் மூலம் எப்படிப்பட்ட கனிமங்கள் இம் மூலகங்களில் இருந்து உருவாகக்கூடும் என்று கண்டறியலாம், அதனைக் கொண்டு அந்தப் பகுதியில் இருந்த பாறைகள் எப்படியான கனிமங்களைக் கொண்டு உருவாகியிருக்கும் என்று அறிந்துகொள்ளமுடியும்.

ஆய்வாளர்களை ஆச்சரியப்பட வைத்த விடையம் என்னவென்றால் கல்சியம், மக்னீசியம், இரும்பு போன்ற நமக்கு பரிச்சியமான கனிமங்களைத் தாண்டி நமது சூரியத்தொகுதியிலேயே இல்லாத சில கனிமங்களும் அங்கே இருப்பதுதான். இதுவரை நாம் கண்டறியாத கனிமங்கள் என்பதால் ஆய்வாளகள் இக்கனிமங்களுக்கு புதிய பெயர்களை வைத்து இவற்றை வகைப்படுத்தவேண்டும்.

உதாரணமாக, பூமியில் நாம் periclase (மக்னீசியக் கனிமம், அதிகளவான வெப்பம் மற்றும் உயர் அழுத்தத்தால் உருவானது), pyroxene (எரிமலைக் கற்களில் காணப்படும் சிலிக்கனால் ஆன கனிமம்), quartz (படிகக் கனிமம்) என்பவற்றை காணலாம். ஆனால் quartz pyroxenites மற்றும் periclase dunites ஆகிய கனிமங்களை பூமியில் ஆய்வாளர்கள் ஒரு போதும் கண்டுபிடிக்க மாட்டார்கள்.

ஆனால் முன்னொரு காலத்தில் அந்த வெள்ளைக் குள்ளர்களைச் சுற்றி கோள்கள் இப்படியாக விசித்திரமான கனிமங்களால் உருவாகியிருந்தது. இக் கனிமங்களால் உருவான பாறைகளில் சில நீரில் எளிதாக கரையக்கூடியதுடன், சில மிக மிகக் குறைந்த வெப்பநிலையிலேயே உருகக்கூடும். இப்படியான பண்புகள் அங்கே சமுத்திரங்கள் தோன்றுவதிலும் பாறை அசைவுகளிலும் எப்படி செல்வாக்கு செலுத்தியிருக்கும்? இந்தக் கேள்விகளுக்கு பதில் கண்டறிவது பிறவிண்மீன் கோள்களைப் பற்றி அறிவதில் அடுத்த படியாகும்.

எல்லாப் பாறைக் கோள்களும் பூமியின் பாறைகளைப் போன்றே இருக்கும் என்று நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு.

Image: in this illustration, rocky debris surround a white dwarf.
Image credit: NOIRLab/NSF/AURA/J. da Silva
Image processing: M. Zamani and M. Kosari (NSF’s NOIRLab)

மேலதிக தகவல்

ஆய்வு செய்யப்பட்ட வெள்ளைக் குள்ளர்களைச் சுற்றிய பிரதேசத்தில் அதிகளவில் காணப்படுவது மக்னீசியம் ஆகும். சிலிக்கன் மிக மிகக் குறைந்தளவே காணப்படுகிறது. எனவே இந்தத் தூசுகளும் பாறைகளும் கோள்களின் உட்பகுதியில் இருந்து வந்திருக்கவேண்டும். பெரும்பாலும் கோள்களின் மேற்பரப்பிலேயே சிலிக்கன் கனிமங்கள் நிறைந்து காணப்படும்.