சூரியனைப் போல 300 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான விண்மீன் பேரடை
எழுதியது: சிறி சரவணா
விண்மீன் பேரடைகள் பொதுவாக பில்லியன் கணக்கான விண்மீன்களை கொண்டிருக்கும், நமது பால்வீதியிலேயே அண்ணளவாக 200 பில்லியன் சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் இருக்கின்றன, ஆனாலும் நமது பால்வீதி ஒன்றும் அப்படி பெரிய விண்மீன் பேரடை அல்ல. ஒவ்வொரு விண்மீன் பேரடைக்கும் ஒவ்வொரு பிரகாசம் உண்டு, அது அந்தப் பேரடையில் உள்ள விண்மீன்களின் எண்ணிக்கை மற்றும் சக்தியைப் பொறுத்து வேறுபாடும். உதாரணமாக, அதிகளவான விண்மீன்கள் குறித்த பேரடையில் இருந்தால், அதன் பிரகாசம் அதிகமாக இருக்கும்.
WISE தொலைக்காட்டியைப் பயன்படுத்தி நாசா விஞ்ஞானிகள் தற்போது, இதுவரை நாம் கண்டறிந்த விண்மீன் பேரடைகளிலேயே மிகவும் பிரகாசமான பேரடையைக் கண்டறிந்துள்ளனர். இந்த WISE தொலைக்காட்டி, சாதாரண தொலைக்காட்டிகளைப் போல கட்புலனாகும் ஒளிக்கற்றை வீச்சைப் (visible light) பயன்படுத்தாமல், அகச்சிவப்பு கற்றை வீச்சில் (infrared spectrum) படம்பிடிக்கும் ஒரு தொலைக்காட்டியாகும்.