சூரியனைப் போல 300 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான விண்மீன் பேரடை

எழுதியது: சிறி சரவணா

விண்மீன் பேரடைகள் பொதுவாக பில்லியன் கணக்கான விண்மீன்களை கொண்டிருக்கும், நமது பால்வீதியிலேயே அண்ணளவாக 200 பில்லியன் சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் இருக்கின்றன, ஆனாலும் நமது பால்வீதி ஒன்றும் அப்படி பெரிய விண்மீன் பேரடை அல்ல. ஒவ்வொரு விண்மீன் பேரடைக்கும் ஒவ்வொரு பிரகாசம் உண்டு, அது அந்தப் பேரடையில் உள்ள விண்மீன்களின் எண்ணிக்கை மற்றும் சக்தியைப் பொறுத்து வேறுபாடும். உதாரணமாக, அதிகளவான விண்மீன்கள் குறித்த பேரடையில் இருந்தால், அதன் பிரகாசம் அதிகமாக இருக்கும்.

WISE தொலைக்காட்டியைப் பயன்படுத்தி நாசா விஞ்ஞானிகள் தற்போது, இதுவரை நாம் கண்டறிந்த விண்மீன் பேரடைகளிலேயே மிகவும் பிரகாசமான பேரடையைக் கண்டறிந்துள்ளனர். இந்த WISE தொலைக்காட்டி, சாதாரண தொலைக்காட்டிகளைப் போல கட்புலனாகும் ஒளிக்கற்றை வீச்சைப் (visible light) பயன்படுத்தாமல், அகச்சிவப்பு கற்றை வீச்சில் (infrared spectrum) படம்பிடிக்கும் ஒரு தொலைக்காட்டியாகும்.

இந்தத் தொலைக்கட்டியைப் பயன்படுத்தி ஆய்வாளர்கள் 20 “மிகப்பிரகாசமான அகச்சிவப்பு விண்மீன் பேரடைகள்” (ELIRG) கண்டறிந்துள்ளனர், இதில் ஒன்று மட்டும் மற்றவையை விட மிக மிகப் பிரகாசமாக இருகின்றது. இந்த விண்மீன் பேரடைக்கு WISE J224607.57-052635.0 என்று பெயரிட்டுள்ளனர் (பொதுவாக இப்படியான பெயர்கள், கண்டறிந்த தினம் மற்றும் அதன் அமைவிடம் என்பனவற்றை சார்ந்து வைப்பதால் இப்படியான சிக்கலான இலக்கங்களில் இருக்கும் – ஆனாலும் இப்படி இலக்கங்களில் பெயர் வைப்பதால், இவற்றை வகைப்படுத்துவது இலகுவான ஒரு விடயம்)

இந்த விண்மீன் பேரடை அண்ணளவாக 300 ட்ரில்லியன் (300, 000, 000, 000, 000) சூரியன்கள் இருந்தால் எவ்வளவு பிரகாசமாக இருக்குமோ அவ்வளவு பிரகாசமாக இருகின்றது!

இந்த பிரகாசமான விண்மீன் பேரடையின் மையத்தில் மிக மிக சக்திவாய்ந்த பாரிய கருந்துளை இருக்கலாம் என இந்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அநேகமான எல்லா விண்மீன் பேரடைகளின் மத்தியிலும் பாரிய கருந்துளை காணப்படுகின்றது.

பொதுவாக விண்மீன் பேரடைகளின் மையத்தில் காணப்படும் கருந்துளைகள், தண்ணி நோக்கி பாரியளவு வாயுக்கள் மற்றும் தூசுக்களை ஈர்த்து, தன்னை சுற்றிவர வைக்கின்றது. இப்படி சுற்றிவரும் தூசும் வாயுவும் அதிகளவான வெப்பநிலையை அடைகின்றது, அதாவது பல மில்லியன் பாகை செல்சியஸ் வெப்பநிலை! இந்த வெப்பநிலையால்இவற்றில் இருந்து மின்காந்தக் கதிர்வீச்சுக்கள் பல்வேறு அலைக்கற்றைவீச்சுக்களில் வெளிப்படுகின்றன.

இந்த விண்மீன் பேரடையையும் அதன் மத்தியில் இருக்கும் கருந்துளையையும் ஆய்வு செய்த விஞ்ஞானிகள், இந்தக் கருந்துளை பிறக்கும் போதே மிகப்பெரிதாக பிறந்திருக்கவேண்டும் எனவும், அல்லது இவை அளவுக்கு அதிகமான வேகத்தில் வாயு மற்றும் தூசியை உருஞ்சி பெரிதாகி இருக்கவேண்டும் என கருதுகின்றனர். ஆனாலும் இப்படி இவ்வளவு பெரிதாவதற்கு அது உட்கொள்ளவேண்டிய திணிவின் அளவு மிக மிக அதிகமாகும் இது கருந்துளையைப் பற்றி நாம் கொண்டுள்ள கருத்திற்கு முரண்பாடாக இருப்பதாக இந்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதாவது “எடிங்க்டன் எல்லை” எனப்படும் ஒரு விதி, ஒரு குறித்த கருந்துளை எவ்வளவு பருப்பொருளை (matter), அதாவது வாயு மற்றும் தூசுக்களை உருஞ்சக்கூடும் என கூறுகிறது, அதாவது வெளியில் இருந்து வாயு மற்றும் தூசுக்களை விழுங்கி பெரிதாகும் கருந்துளை பெரிதாகும் விகிதத்தில் கதிர்வீச்சையும் (ஒளி மற்றும் வெப்பம்) வெளியிடும், இந்த கதிர்வீச்சு, அருகில் உள்ள தூசுகளையும் வாயுக்களையும் வெளி நோக்கி தள்ளுவதால், கருந்துளையால் மேற்கொண்டு மேலும் தூசுகளை விழுங்கி பெரிதாக முடிவதில்லை.

ஆனாலும் இந்த எல்லையை விட்டு ஒரு கருந்துளை பெரிதாகிவிட்டால் (தெரியாத காரணங்கள்…) பின்பு இந்தக் கருந்துளையின் அளவை கட்டுப்படுத்தத் எந்தவொரு சக்தியாலும் முடிவதில்லை.

இப்படியான ELIRGக்களில் இருக்கும் கருந்துளைகள் எப்படி இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கலாம் என மேலும் ஆய்வுகள் செய்ய இருப்பதாக இந்த ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

புதிய புதிய ஆய்வுகள் மூலம் தினமும் நாம், விசித்திரமான பிரபஞ்ச அமைப்புக்களைப் பற்றி அறிகிறோம். என்றாவது ஒரு நாள் நாம் இந்த இயற்கையின் அடிப்படைத் தத்துவத்தை இந்த விஞ்ஞான ஆய்வுகளில் இருந்து விளங்கிக்கொள்ளலாம்.

நன்றி sciencealert, nasa