மில்லியன் சூரியன்களின் ஒளி
ஆதிகால விண்மீன் பேரடைகளைச் சூழ்ந்த வாயுமண்டலம்
எழுதியது: சிறி சரவணா
நீங்கள் சூரிய உதயத்திற்கு முன்னர் எழுந்திருந்து வெளியில் சென்று பார்த்ததுண்டா? அப்படியே புகை மண்டலமாகத் தெரியும் அல்லவா? மூடுபனி (fog) அப்படித் தெரிகிறது. பின்னர் மெல்ல மெல்ல சூரியன் உதிக்கத் தொடங்கியவுடன் இந்த மூடுபனி அப்படியே காணாமல் போய்விடும்! இந்தப் பிரபஞ்சத்திலும் இப்படியான ஒரு செயற்பாடு நடந்துள்ளது – இந்தப் பிரபஞ்சம் இளமையாக இருக்கும்போது.
பேராசை கொண்ட விண்மீன்பேரடைகள்
விண்மீன்பேரடைகள் பல பில்லியன் விண்மீன்களின் தொகுதியாகும். இவை பல அளவுகளில் இருக்கின்றன. உங்களுக்குத் தெரியுமா? சில விண்மீன்பேரடைகள், அருகில் இருக்கும் சிறிய விண்மீன்பேரடைகளை விழுங்கித் தானே பெரிதாக வளர்ந்துவிடும்!
இப்படியாக சிறிய விண்மீன்பேரடைகளை தன்னோடு இணைத்துக்கொள்ளும் பாரிய விண்மீன்பேரடைகளைப் பற்றி வானியலாளர்களுக்குத் தெரிந்திருந்தாலும், இதுவரை அவற்றை நிருபிப்பது என்பது மிகக்கடினமாக இருந்தது. பெரிய விண்மீன்பேரடை, சிறிய விண்மீன்பேரடையை தன்னுள் இணைத்துக்கொண்ட பின்பு, சிறிய விண்மீன்பேரடையை அடையாளம் காண்பதென்பது முடியாத காரியம். இது ஒரு நீர்த் தடாகத்தில் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றிவிட்டு அந்தத் தடாகத்தில் இருக்கும் நீரில், இந்த வாளித் தண்ணீரைத் தேடுவதுபோலாகும்.
84 மில்லியன் விண்மீன்களைக் கொண்ட புகைப்படம்
எழுதியது: சிறி சரவணா
இந்தப் புகைப்படத்தை எடுத்த புகைப்படக்கருவி (கமெரா – camera), நாம் கடைகளில் வாங்கக்கூடியதாக இருக்கும் டிஜிட்டல் கமெராக்களை வெறும் விளையாட்டுப் பொருளாக நினைக்கும் அளவிற்கு துல்லியத்தன்மை வாய்ந்தது!
நாம் டிஜிட்டல் கமெராக்களை (digital camera) வாங்கும் போது, பொதுவாக அதன் தரத்தை “மெகாபிக்ஸல்” மூலம் அளப்போம். அதாவது “மெகாபிக்ஸல்” அதிகரிக்க அதிகரிக்க, கமெராவின் மூலம் எடுக்கப்படும் படத்தின் தரமும் அதிகரிக்கும். பொதுவாக நாம் கடைகளில் வாங்கக்கூடியதாக இருக்கும் கமெராக்களின் சராசரி மெகாபிக்ஸல் அளவு அண்ணளவாக 10 மெகாபிக்ஸல்கள். ஆனால் இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கும் புகைப்படத்தை எடுத்த, அந்தத் தொலைக்காட்டியில் இணைக்கப்பட்டிருந்த கமெராவில் 9000 மெகாபிக்ஸல்கள் இருந்தது! அப்படியென்றால் அது எவ்வளவு துல்லியமாக அந்தப் படத்தை எடுத்திருக்கும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.
சூரியனைப் போல 300 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான விண்மீன் பேரடை
எழுதியது: சிறி சரவணா
விண்மீன் பேரடைகள் பொதுவாக பில்லியன் கணக்கான விண்மீன்களை கொண்டிருக்கும், நமது பால்வீதியிலேயே அண்ணளவாக 200 பில்லியன் சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் இருக்கின்றன, ஆனாலும் நமது பால்வீதி ஒன்றும் அப்படி பெரிய விண்மீன் பேரடை அல்ல. ஒவ்வொரு விண்மீன் பேரடைக்கும் ஒவ்வொரு பிரகாசம் உண்டு, அது அந்தப் பேரடையில் உள்ள விண்மீன்களின் எண்ணிக்கை மற்றும் சக்தியைப் பொறுத்து வேறுபாடும். உதாரணமாக, அதிகளவான விண்மீன்கள் குறித்த பேரடையில் இருந்தால், அதன் பிரகாசம் அதிகமாக இருக்கும்.
WISE தொலைக்காட்டியைப் பயன்படுத்தி நாசா விஞ்ஞானிகள் தற்போது, இதுவரை நாம் கண்டறிந்த விண்மீன் பேரடைகளிலேயே மிகவும் பிரகாசமான பேரடையைக் கண்டறிந்துள்ளனர். இந்த WISE தொலைக்காட்டி, சாதாரண தொலைக்காட்டிகளைப் போல கட்புலனாகும் ஒளிக்கற்றை வீச்சைப் (visible light) பயன்படுத்தாமல், அகச்சிவப்பு கற்றை வீச்சில் (infrared spectrum) படம்பிடிக்கும் ஒரு தொலைக்காட்டியாகும்.
100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்
எழுதியது: சிறி சரவணா
விண்ணியல் ஆய்வாளர்கள், வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான அடையாளம் உண்டா என அண்ணளவாக 100,000 விண்மீன்பேரடைகளில் தேடியுள்ளனர். இதுவரை “எதிர்பார்த்த” முடிவு கிடைக்கவில்லை. அதாவது வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான எந்தவொரு தடயமும் இன்னும் கிடைக்கவில்லை. நாசாவின் வைஸ் (WISE) என்ற செயற்கைக்கோளைப் பயன்படுத்தியே இந்த ஆய்வாளர்கள் இந்த 100,000 பேரடைகளை ஆய்வுசெய்துள்ளனர்.
இந்த ஆய்வாளர்களின் கருத்துப்படி, ஒரு விண்மீன் பேரடையில் உள்ள விண்மீன்கள் வேற்றுலகவாசிகளால் குடியேற்றப்பட்டிருந்தால், அந்த சமுதாயத்தின் தொழில்நுட்ப பாவனையினால் வெளியிடப்படும் விரயமான சக்தி, அகச்சிவப்பு கதிர்வீச்சாக வெளியிடப்படும், இந்தக் கதிர்வீச்சை கண்டறியும் வண்ணமே வைஸ் செய்மதி உருவாக்கப்பட்டுள்ளது.