எழுதியது: சிறி சரவணா
இந்தப் புகைப்படத்தை எடுத்த புகைப்படக்கருவி (கமெரா – camera), நாம் கடைகளில் வாங்கக்கூடியதாக இருக்கும் டிஜிட்டல் கமெராக்களை வெறும் விளையாட்டுப் பொருளாக நினைக்கும் அளவிற்கு துல்லியத்தன்மை வாய்ந்தது!
நாம் டிஜிட்டல் கமெராக்களை (digital camera) வாங்கும் போது, பொதுவாக அதன் தரத்தை “மெகாபிக்ஸல்” மூலம் அளப்போம். அதாவது “மெகாபிக்ஸல்” அதிகரிக்க அதிகரிக்க, கமெராவின் மூலம் எடுக்கப்படும் படத்தின் தரமும் அதிகரிக்கும். பொதுவாக நாம் கடைகளில் வாங்கக்கூடியதாக இருக்கும் கமெராக்களின் சராசரி மெகாபிக்ஸல் அளவு அண்ணளவாக 10 மெகாபிக்ஸல்கள். ஆனால் இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கும் புகைப்படத்தை எடுத்த, அந்தத் தொலைக்காட்டியில் இணைக்கப்பட்டிருந்த கமெராவில் 9000 மெகாபிக்ஸல்கள் இருந்தது! அப்படியென்றால் அது எவ்வளவு துல்லியமாக அந்தப் படத்தை எடுத்திருக்கும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.
மேலும், இந்தப் பாரிய உயர்தரமான புகைப்படத்தில், கிட்டத்தட்ட 173 மில்லியன் (அதாவது 173,000,000) விண்பொருட்கள் இருப்பதை வானவியலாளர்கள் (astronomers) கணக்கிட்டுள்ளனர். அதில் 84 மில்லியன் விண்மீன்களும் உள்ளடங்கும்! இதில் இருக்கும் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், இதற்கு முன்னர் எடுத்த பால்வீதியின் (Milky Way Galaxy) மையப்பகுதியின் புகைப்படங்களில் இருந்த விண்மீன்களின் எண்ணிக்கையைவிட இந்தப் புதிய உயர்தரமான புகைப்படத்தில், பத்து மடங்கிற்கும் அதிகமான விண்மீன்கள் உள்ளன. ஆக இந்தப் புதிய புகைப்படம் மிக மிக துல்லியமானது என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
இந்தப் புகைப்படத்தைப் பற்றி வானவியலாளர் டாண்டே மின்னிட்டி (Dante Minniti) கூறுகையில், “இந்தப் படத்தில் உள்ள புதிய தகவல்கள், எமக்கு ஒரே தடவையில், குறித்த பால்வீதியின் பகுதியில் உள்ள விண்மீன்கள் எல்லாவற்றையும் பார்க்கவும், அவற்றைப் பற்றி கணக்காய்வு செய்யவும் இலகுவாக வழிவகுக்கும்” என்றார்.
இந்தப் புகைப்படத்தைப் பயன்படுத்தி ஏற்கனவே பல்வேறு ஆய்வுகளை வானவியலாளர்கள் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக இந்த 84 மில்லியன் விண்மீன்களில் அதிகளவு “மங்கிய சிவப்புக் குள்ளன்” (faint red dwarf stars) வகை விண்மீன்கள் இருப்பதை இவர்கள் கண்டறிந்துள்ளனர். இதிலும் ஒரு முக்கியவிடயம், இந்த மங்கிய சிவப்புக் குள்ள வகை விண்மீன்கள், சூரியத் தொகுதிக்கு அப்பால் இருக்கும் கோள்களை கண்டறிவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதாவது இந்த மங்கிய சிவப்புக் குள்ளன் வகை விண்மீன்கள், பிரகாசம் குறைவாக இருப்பதனால், இவற்றை சுற்றிவரும் கோள்களை இலகுவில் கண்டறியமுடியும், ஆகவேதான், சூரியத் தொகுதிக்கு அப்பால் வேறு விண்மீன்களை சுற்றிவரும் கோள்களை தேடும் ஆய்வாளர்களுக்கு, இந்த சிவப்புக் குள்ளன் வகை விண்மீன்கள் ஒரு எளிய இலக்காக இருக்கின்றது.
இந்தப் புகைப்படம் மிகப்பெரியது, ஆக இதனை அச்சிட்டால், இந்தப் புகைப்படம் 9 மீட்டார் நீளமும், 7 மீட்டார் அகலமும் கொண்டிருக்கும். அதனால் இதனை நீங்கள் ESO வின் இணையத் தளத்தில் இருக்கும் உருப்பெருக்கிச் செயலியின் (zoom tool) துணைகொண்டு பார்க்கலாம்.
முழுப்படம் அண்ணளவாக 24.6GB அளவு கொண்டது, அதனால் அதனை தரவிறக்கி பார்ப்பதை தவிர்த்து, zoom tool துணைகொண்டு பார்க்கலாம். இங்கே கிளிக் செய்து 84 மில்லியன் விண்மீன்கள் கொண்ட படத்தைப் பாருங்கள்!
Content Credit: ESO/VISTA
Image Credit: ESO/VVV Survey/D. Minniti
Acknowledgement: Ignacio Toledo, Martin Kornmesser