கோள்விண்மீன் படலங்கள்

சூரியனைப் போன்ற விண்மீன்கள், தங்கள் எரிபொருளான ஹைட்ரோஜனை முடித்துவிட்டால், அதன் பின்னர் அவற்றால் தமது அமைப்பைப் பேண முடிவதில்லை, இவை சிவப்பு அரக்கனாக (red giant) மாறி பல நூறு மடங்கு பெரிதாகும், இந்த நிலையில் விண்மீன்கள், தங்கள் வெளிப்புற படலத்தை அப்படியே வெளி நோக்கி வீசி விடும், எஞ்சிய அடர்த்தியான மையப்பகுதி இறுதியில் வெள்ளைக்குள்ளனாக (white dwarf) மாறிவிடும். இதுதான் நமது சூரியனது எதிர்காலமும்.

இப்படி வீசி எறியப்பட்ட வெளிப் படலம், பல்வேறுபட்ட வடிவங்களையும் நிறங்களையும் பெற்றுக்கொள்ளும். மையப்பகுதியில் இருக்கும் அடத்தியான மற்றும் வெப்பமான வெள்ளைக்குள்ளனில் இருந்து வெளிவரும் வேகமான கதிர்வீச்சுப் புயல், இந்த வெளிப் படலத்தை தொடர்ந்து வெளிநோக்கி தள்ளிக்கொண்டே இருக்கும்.  இவையே கோள்விண்மீன் படலம் (planetary nebula) எனப்படுகிறது.

இதுவரை 21 கோள்விண்மீன் படலங்கள், பூமியில் இருந்து 5000 ஒளியாண்டுகள் தூரத்தினுள் நாம் கண்டறிந்துள்ளோம். இதுபோக மேலும் அண்ணளவாக 3000 கோள்விண்மீன் படலங்கள் நம் பால்வீதியில் இருப்பதை ஆய்வாளர்கள் அவதானித்துள்ளனர். நமது பால்வீதியில் 200 பில்லியனுக்கும் அதிகமான விண்மீன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நமது பால்வீதியில் இருக்கும் விண்மீன்களில் 95% கோள்விண்மீன் படலமாகவே தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ளும். மீதி 5% விண்மீன் பெருவெடிப்பில் (supernova) தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ளும்.

This gallery shows four planetary nebulas from the first systematic survey of such objects in the solar neighborhood made with Chandra X-ray Observatory.

சிறய ஆனால் முக்கிய விடயம், ஏன் இந்த நெபுலாக்களுக்கு “கோள்”விண்மீன் படலம் அல்லது planetary nebula என பெயர் வந்தது என்று கூறியாகவேண்டும். இது ஒரு தவறான வழிச்சொல்தான், காரணம், கோள்களுக்கும், இந்தப் படலங்களுக்கும் (nebula) எந்த சம்பந்தமும் இல்லை. மாறாக, ஆரம்பக் காலங்களில் (நூற்றாண்டுக்கு முன்னர்) சிறிய, தெளிவற்ற தொலைக்காட்டிகளைப் பயன்படுத்தி வானை அவதானித்த வானியலாளர்கள், வட்டவடிவமான நீலம்/பச்சை கலந்த நிறமுள்ள பொருட்களைக் கண்டனர், இவை பார்க்க யுரேனஸ் போல தென்பட்டன. ஆக இதற்கு “கோள்விண்மீன் படலம்” அல்லது planetary nebula என பெயரிட்டனர்.

சூரியனது எதிர்காலம்

சூரியனது சக்தி, அதன் மையப்பகுதியில் தான் உருவாகிறது. இந்த வெப்பசக்தி தான், சூரியன் தனது சொந்த ஈர்ப்புவிசையால் சுருங்கிவிடாமல் தடுத்து சூரியனை ஒரு ஸ்திரமான நிலையில் பேண உதவுகிறது. சூரியனது இந்த வெப்ப சக்திக்கு காரணம் ஹைட்ரோஜன் ஆகும், இது சூரியனது மையப்பகுதியில் ஹீலியமாக மாற்றமடைகின்றது, இந்த மாற்றமே வெப்பசக்தியையும் உருவாக்குகின்றது.

ஆனால், இன்னும் ஐந்து பில்லியன் வருடத்தில் சூரியன் தனது ஹைட்ரோஜனை ஹீலியமாக மாற்றி முடித்துவிடும், அதன் பின்னர் தனது அளவை தக்கவைக்க முடியாமல் சூரியன் சுருங்கத் தொடங்கும், இப்படி சுருங்கும் சூரியனின் வெப்பநிலை அதிகரிக்கும், இது அங்கே மிகுதியாக இருக்கும் ஹெலியத்தையும் வெப்பப்படுத்தி அதனை கார்பனாக மற்றும், இப்படி தொடர்ச்சியான செயற்பாடுமூலம் சூரியன் தொடர்ந்து சிறிதாக அதன் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே வரும். ஹைட்ரோஜனில் இருந்து ஹெலியத்திற்கு மாறும்போது அதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் வெளிச்சம் மிகக் மிக உக்கிரமாக இருக்கும். இது சூரியனது அகப்புரத்தைச் சுருக்கினாலும்,  வெளிப்புறப் படலத்தை மிகப்பெரிதாக விரித்துவிடும். இந்த நிலையில் எமது சூரியன், “சிவப்பு அரக்கன்” எனப்படுவார்!

இப்படி சிவப்பு அரக்கனாக சூரியன் விரிவடையும் போது, வெள்ளி மற்றும் புதன் ஆகிய கோள்கள், சூரியனுக்கு உள்ளே தான் சுற்றவேண்டும்! அந்தளவிற்கு சூரியன் பெரிதாகி விடும். (சூரியனுக்குள் அப்படி கோள்கள் சுற்றமுடியாது, அவை உருகி அழிந்துவிடும், சூரியன் அவ்வளவு பெரிதாகிவிடும் என்பதனை கூறவே இந்த உவமை!).

இப்படிப்பட்ட நிலையில் பூமியில் எந்த உயிரினமும் வாழமுடியாது, பெரும்பாலும் பூமி, நெருப்பு நிலம் போலவே இருக்கும்! மதியவேளையில், வானின் பாதியளவை சூரியன் நிரப்பிவிடும் அளவுக்கு சூரியன் பெருத்திருக்கும். சமுத்திரங்கள், மற்றும் வளிமண்டலம் எல்லாம் ஆவியாகிவிடும்.

ஹீலியத்தை எரித்துக்கொண்ருக்கும் சூரியன் அதனையும் சிலபல நூறு மில்லியன் வருடங்களில் முடித்துவிடும், இங்கு கவனிக்கவேண்டிய முக்கியவிடயம், சூரியன் ஹைட்ரோஜனை எரிக்க எடுத்துக்கொண்ட காலம் அண்ணளவாக 10 பில்லியன் அல்லது 10000 மில்லியன் வருடங்கள், ஆனால் சில நூறு மில்லியன் வருடங்களிலேயே இது ஹீலியத்தை எரித்து முடித்துவிடும்! ஹீலியம் எரிக்கப்பட்டு மிஞ்சுவது கார்பன், ஆனால் இதனை எரிக்கப் போதுமானளவு சக்தி சூரியனுக்கு இருக்காது.

சில ஆயிரம் வருடங்களில் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி மிக அடர்த்தியான பூமியளவுள்ள ஒரு பொருளாக மாறிவிடும் – இதுவே வெள்ளைக்குள்ளன் (white dwarf) எனப்படும். வெள்ளைக்குள்ளன் மிக அடர்த்தியான ஒரு விண்மீன் எச்சம், இதன் ஒரு தேநீர்க்கரண்டி அளவுள்ள பொருள் அண்ணளவாக ஒரு தொன் எடை இருக்கும்!

எப்படியிருப்பினும், நடுவில் இருக்கும் வெள்ளைக்குள்ளனை விட மிக மிக சுவாரசியமான விடயம், முதல் கட்டத்தில் வெளியேற்றப்பட்ட சூரியனது வெளிப்புறப் படலம்.

அடர்த்தியான வெள்ளைக்குள்ளன் நடுவில் உருவாகிவிட வெளியில் வீசியெறியப்பட்ட வெளிப்புறப் படலம் இப்போது வெள்ளைக்குள்ளனை நோக்கி ஈர்க்கப்படும்.  இவ்வாறு ஈர்க்கப்படும் போது உருவாகும் உராய்வு விசையால் இந்த படலத்தில் இருக்கும் தூசுகள் மற்றும் வாயுக்களின் வெப்பநிலை அதிகரிக்கும், இது இந்த வெளிப்படலத்தை சற்று பிரகாசமாக ஒளிரவிடும்.

தூரத்தில் இருந்து பார்க்கும் போது அழகான வண்ணமயமான தோற்றத்தில் இரு தென்படும்!

நீங்கள் இங்கு தரப்பட்டுள்ள படங்களில் இருக்கும் அமைப்புக்களை பாருங்கள், எவ்வளவு அழகான தோற்றங்களில் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் ஒரு விண்மீனின் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் அந்த விண்மீனால் வரையப்பட்ட பிரபஞ்ச ஓவியம் என்று கூடக் கருதலாம். இயற்கைக்கு எல்லை போடுபவர் யார்!

உங்களுக்காக மேலும் சில கோள்விண்மீன் படைகளின் படங்கள்! கிளிக் செய்வதன் மூலம் பெரிதாக்கிப் பார்க்கலாம்.


⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!

https://parimaanam.net
https://twitter.com/parimaanam
https://www.facebook.com/parimaanam