மேடுசாவின் அச்சமூட்டும் அழகு
எழுதியது: சிறி சரவணா
கிரேக்க புராணங்களில் ஒரு கதை உண்டு. ஒரு அழகிய பெண், மேடுசா. அழகிய தங்கக்கம்பிகள் போன்ற தலைமுடியுடன், எல்லோரையும் கவரும் வண்ணமாக இருந்தவள் இந்த மேடுசா. ஆனால் மிகுந்த சுயநலமும், தற்பெருமையும் இருந்ததனால் அதேனா என்ற கடவுளின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகினாள். அதேனாவின் சாபம், மேடுசாவின் தலையில் இருந்த அழகான தங்கக்கம்பிகள் போன்ற முடிக்கற்றை ஒவ்வொன்றையும் நஞ்சை உமிழும் பாம்புகள் ஆக்கிற்று. அதேபோல, யாரெலாம் மேடுசாவின் கண்களைப் பார்க்கின்றனரோ, அவரெலாம் உடனே கற்சிலையாகிப் போவர்.
சரி இந்தப் புராணக்கதைக்கும், இந்தப் பதிவிற்கும் என்ன தொடர்பு என்றால், நாம் பார்க்கப்போகும் ஒரு கோள்விண்மீன் படலத்திற்கும், வானியலாளர்கள் இந்த அழகியின் பெயரையே வைத்துள்ளனர். மிதுன ராசியில் இருக்கும் Sharpless 2-274 என்ற கோள்விண்மீன் படலமே, மேடுசா நெபுலா (Medusa nebula) எனப்படுகிறது. இது பூமியில் இருந்து 1500 ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பதுடன், அண்ணளவாக 4 ஒளியாண்டுகள் அகலம் கொண்டது!