எழுதியது: சிறி சரவணா
கிரேக்க புராணங்களில் ஒரு கதை உண்டு. ஒரு அழகிய பெண், மேடுசா. அழகிய தங்கக்கம்பிகள் போன்ற தலைமுடியுடன், எல்லோரையும் கவரும் வண்ணமாக இருந்தவள் இந்த மேடுசா. ஆனால் மிகுந்த சுயநலமும், தற்பெருமையும் இருந்ததனால் அதேனா என்ற கடவுளின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகினாள். அதேனாவின் சாபம், மேடுசாவின் தலையில் இருந்த அழகான தங்கக்கம்பிகள் போன்ற முடிக்கற்றை ஒவ்வொன்றையும் நஞ்சை உமிழும் பாம்புகள் ஆக்கிற்று. அதேபோல, யாரெலாம் மேடுசாவின் கண்களைப் பார்க்கின்றனரோ, அவரெலாம் உடனே கற்சிலையாகிப் போவர்.
சரி இந்தப் புராணக்கதைக்கும், இந்தப் பதிவிற்கும் என்ன தொடர்பு என்றால், நாம் பார்க்கப்போகும் ஒரு கோள்விண்மீன் படலத்திற்கும், வானியலாளர்கள் இந்த அழகியின் பெயரையே வைத்துள்ளனர். மிதுன ராசியில் இருக்கும் Sharpless 2-274 என்ற கோள்விண்மீன் படலமே, மேடுசா நெபுலா (Medusa nebula) எனப்படுகிறது. இது பூமியில் இருந்து 1500 ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பதுடன், அண்ணளவாக 4 ஒளியாண்டுகள் அகலம் கொண்டது!
இதற்கு மேடுசாவின் பெயரை வைக்கக் காரணம், இந்த நேபுலாவில் இருக்கும் ஒளிரும் வாயுக்கள் பார்க்க மேடுசாவின் தலையில் இருக்கும் நச்சுப் பாம்புகளைப் போல இருப்பதனாலாகும்.
இன்னும் சில நூறாயிரம் வருடங்களுக்கு இந்த அழகிய வாயுக்கூட்டம் இப்படியே இருப்பினும் கொஞ்சம் கொஞ்சமாக இவை விண்வெளியில் சிதறிவிடும். இதுதான் நம் சூரியனைப் போன்ற விண்மீனின் முடிவும் கூட. அதாவது இந்த மேடுசா நேபுலாவாகுவதற்கு முன்னர், நம் சூரியனைப் போன்ற ஒரு விண்மீனாகத்தான் இருந்தது. அதன் ஆயுட்காலம் முடிவடையும் சந்தர்ப்பத்தில் அது மிகப்பாரியதாக விரிவடைய இப்படியான ஒரு வண்ணமயமான ஒரு அமைப்பை உருவாக்கிவிட்டது. இதன் பின்னர் எஞ்சி இருப்பது வெள்ளைக்குள்ளன் எமப்படும் அந்த விண்மீனின் அடர்த்தியான மையப்பகுதியே!
கோள்விண்மீன் படலங்கள் மற்றும் அவை எப்படி உருவாகின்றன என்பதனை அறிய இந்தக் கட்டுரையை வாசிக்கவும்.
இந்த கோள்விண்மீன் படலத்தின் வாழ்வுக்காலம், அதாவது சில நூறாயிரம் வருடங்கள் என்பது, உண்மையிலேயே இந்த விண்மீனின் மொத்த வாழ்வுக்காலத்தில் ஒரு சிறிய துளியே!
நெபுலாவின் மையத்தில் வெள்ளைக்குள்ளன் என்ற ஒரு பகுதி இருக்கும் என்று கூறினேன் அல்லவா? அந்த வெள்ளைக்குள்ளன், அடுத்த பல பில்லியன் (அண்ணளவாக நூறு பில்லியன் வருடங்கள்?) ஆண்டுகளுக்கு அப்படியே இருக்கும், இது நமது பிரபஞ்சத்தின் வயதைவிட அதிகம் அல்லவா! அதனால் வெள்ளைக்குள்ளன்னின் வாழ்வுக் காலம் முடிந்தவுடன் என்னவாகும் என்பதை விண்ணில் பார்க்க எம்மால் இப்போது முடியாது! காரணம், பிரபஞ்சம் தோன்றியபோது உருவாகிய விண்மீன் வெள்ளைக்குள்ளனாக மாறியிருந்தாலும், அவை இன்னும் பல பில்லியன் வருடங்களுக்குத் தொடர்ந்து வெள்ளைக்குள்ளனாகவே இருக்கும்.
இந்த மேடுசா நேபுலாவைப் பற்றி இன்னுமொரு தகவல். இந்த நேபுலாவில் இருந்து வரும் ஒளியை முதன் முதலில் அவதானித்தபோது, ஆய்வாளர்கள் அதிலிருக்கும் பச்சை நிறத்திற்குக் காரணம் ஒரு புதிய மூலகம் (element) என்றே கருதினர். இதற்கு நேபுலியம் (nebulium) என்று பெயரும் வைத்தனர். ஆனால் பின்னர் செய்த ஆய்வுகள் மூலம், அந்தப் பச்சை நிறத்திற்குக் காரணம் ஒக்சீசன் எனக் கண்டறிந்தனர்.
நீங்கள் இந்தப் படத்தில் பார்க்கும் நேபுலாவானது, சிலியில் இருக்கும் Very Large Telescope இன் உதவியுடன் எடுக்கப்பட்டது. இதற்கு முன்னர் இவ்வளவு தெளிவாக இந்த மேடுசா நேபுலாவை ஒருவரும் படம்பிடிக்கவில்லை.
இன்னுமொரு உபரித்தகவல், அதாவது இந்த நெபுலா செக்கனுக்கு 50கிமீ என்ற வேகத்தில் விரிவடைந்து கொண்டிருக்கிறது. ஆய்வாளர்களின் கருத்துப் படி, இது குறைந்த வேகமாம்!
நமது சூரியனதுஎதிர்காலமும் இப்படியொரு நேபுலாவாகத்தான் இருக்கும்.
படமும் தகவல்களும்: eso.org