விண்ணில் ஒரு வண்ணத்துப்பூச்சி

இந்தப்படத்தில் இருப்பது இரட்டை ஜெட் நெபுலா. பார்க்க அதன் இருபுறமும் ஜெட் போல வாயுக்கள் பீச்சப்படுவதால் இதனை இப்படி அழைக்கின்றனர். சிலர் இதனை வானின் வண்ணத்துப்பூச்சி என்றும் அழைக்கின்றனர்.

1947 இல் அமெரிக்க-ஜெர்மன் விண்ணியலாளர் ரடோல்ப் மின்கொவிஸ்கி என்பவரால் முதன் முதலில் கண்டறியப்பட்டது. இது ஒரு கோள்விண்மீன் மண்டலமாகும். சூரியனைப் போன்ற ஒரு மத்திம அளவுள்ள ஒரு விண்மீனின் இறப்பின் கடைசி அத்தியாயமே இந்த அழகிய இரட்டை ஜெட் நெபுலா.

கோள்விண்மீன் மண்டலங்கள் ஒரு பார்வை

இதன் மையத்தில் இருக்கும் விண்மீன் தனது வெளிப்புற வாயுப் படலங்களை இன்னும் பூரணமாக விசிறி எறியவில்லை. ஆனால் அது விரிவடைந்து விட்டதால், அந்த விண்மீனின் மையப்பகுதியில் இருக்கும் அதியுயர் வெப்பநிலை மூலம் இந்த நெபுலா அழகாக ஒளிர்விக்கப்படுகிறது.

The Twin Jet Nebula

இதுவொரு கோள்விண்மீன் படலம் என்றாலும் அதிலும் ஒரு குறிப்பிட்ட வகையான கோள்விண்மீன் மண்டலம். இதனை இருதுருவ நெபுலா (bipolar nebula) என அழைக்கின்றனர். அதென்ன இருதுருவ நெபுலா?

பொதுவாக கோள்விண்மீன் படலத்தின் மத்தியில் ஒரு விண்மீனைக் கொண்டிருக்கும். ஆனால் இருதுருவ நேபுலாவின் மையத்தில் இரண்டு விண்மீன்கள் இருக்கும். ஆய்வாளர்கள் இந்த இரட்டை ஜெட் நேபுலாவில் உள்ள இரண்டு விண்மீன்களின் அளவையும் கணக்கிட்டுள்ளனர்.

இரண்டில் சிறிய விண்மீன் 0.6 – 1.0 சூரியத் திணிவையும், பெரிய விண்மீன் 1.0 – 1.4 சூரியத் திணிவையும் கொண்டுள்ளது. 1.0 சூரியத் திணிவு என்பது சரியாக சூரியனின் திணிவின் அளவு. இதில் பெரிய விண்மீன் தனது வாழ்க்கைக்காலத்தின் இறுதி அத்தியாயத்தில் இருக்கிறது. இது ஏற்கனவே தனது வெளிப்புற வாயுப்படலத்தை நோவா வெடிப்பின் மூலம் விண்வெளியில் சிதறடித்துவிட்டது. அடுத்த சிறிய விண்மீன் ஏற்கனவே தனது வாழ்வுப் பயணத்தின் அடுத்த கட்டமான வெள்ளைக் குள்ளனாக மாறிவிட்டது.

இந்த இரட்டை ஜெட் நெபுலாவின் தோற்றத்திற்குக் காரணம் இந்த இரு விண்மீன்களின் அசைவு ஆகும். இவை இரண்டும் ஒன்றையொன்று சுற்றிவருவதால் இப்படியான இரு திசையில் வாயுக்கள் விரிவடைந்துள்ளன. இப்படியாக இரு திசையிலும் விரிவடையும் வாயுக்களின் வேகத்தை கணக்கிட்டு, இந்த நெபுலா அண்ணளவாக 1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.

பார்க்க அழகாகவும் சாந்தமாகவும் தெரியும் இந்த சிறகுகள் போன்ற இரண்டு பக்கமும் நீண்ட அமைப்பு, உண்மையில் மிகவும் உக்கிரமான ஜெட் ஆகும். இந்த வாயுக்கள் மணிக்கு ஒரு மில்லியன் கிலோமீட்டர் வேகத்தில் விரிவடைந்து கொண்டிருக்கின்றன!

எப்படியிருப்பினும், இன்னும் விண்ணியலில் தீர்க்கப்படாத முடிச்சு ஒன்று உண்டு, அதாவது உண்மையிலேயே இருதுருவ நெபுலாக்கள் இரட்டை விண்மீன்களால் தான் தோற்றுவிக்கப்படுகிறதா என்பதே அது. இன்றுவரை பூரணமாக ஆதாரங்களுடன் இவை நிருபிக்கப்படவில்லை. எப்படியிருப்பினும் கண்களுக்கு விருந்தாக இருக்கிறது அல்லவா இந்த வானின் வண்ணத்துப்பூச்சி?

இந்தப் புகைப்படம் ESA/NASA இன் ஹபிள் தொலைநோக்கியால் எடுக்கப்பட்டது.


⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!

https://parimaanam.net
https://twitter.com/parimaanam
https://www.facebook.com/parimaanam