தனிமையில் ஒரு விண்மீன் பேரடை

எழுதியது: சிறி சரவணா

பொதுவாக விண்மீன் பேரடைகள் எல்லாம் ஒன்றுகொன்று அருகில் ஒரு குழுவாகவே காணப்படும். உதாரணமாக நமது பால்வீதி உள்ளது உட்குழு (Local Group) எனப்படும் ஒரு தொகுதியில், அன்றோமீடா உள்ளடங்கலாக 57 முக்கிய விண்மீன் பேரடைகள் இதில் உண்டு.

இதில் உங்களுக்கு ஒரு ஆச்சரியமான விடயம் ஒன்று சொல்கிறேன், கோள்களுக்கு எப்படி துணைக்கோள்கள் இருக்குமோ அதைப்போலவே விண்மீன் பேரடைகளுக்கும் துணைப் பேரடைகள் உண்டு. நமது பால்வீதியை எடுத்துக்கொண்டால் அதற்கு அண்ணளவாக 30 துணைப் பேரடைகள் உண்டு, இவை பால்வீதியில் இருந்து 1.4 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தினுள் இருப்பவை, இவற்றில் பெரும்பாலானவை நமது பால்வீதியைச் சுற்றிவருகின்றன.

இதேபோல அன்றோமீடா பேரடைக்கும் துணைப் பேரடைகள் உண்டு. இதுவரை 14 துணைப் பேரடைகள் அன்றோமீடாவை சுற்றிவருவதை அவதானித்துள்ளனர். இப்படி பொதுவாக விண்மீன் பேரடைகள் ஒரு குழுவாகவே காணப்படுகின்றன.

படம் : Photo Credit: NASA, ESA, D. Calzetti (University of Massachusetts), H. Ford (Johns Hopkins University), and the Hubble Heritage Team
படம் : NASA, ESA, D. Calzetti (University of Massachusetts), H. Ford (Johns Hopkins University), and the Hubble Heritage Team

ஆனால் நாம் படத்தில் பார்க்கும் விண்மீன் பேரடை NGC 6503, மிகவும் தனியான ஒரு இடத்தில் இருப்பது மிகவும் ஆச்சரியமான விடயம். வானில் “உள்வெற்றிடம்” (Local Void) எனப்படும் எந்தவொரு வான் பொருளும் இல்லாத விசித்திரமான இடத்தில் காணப்படுகிறது.

அண்ணளவாக 150 மில்லியன் ஒளியாண்டுகள் விட்டம் கொண்ட உள்வெற்றிடம் எனப்படும் பகுதியில் எதிர்பார்க்கப்பட்ட அளவு விண்மீன்களோ அல்லது விண்மீன் பேரடைகளோ இல்லை. ஆனால் அந்தப் பிரதேசத்தின் ஒரு எல்லையில் இந்த NGC 6503 என்கிற விண்மீன் பேரடை உள்ளது.

ஸ்டீபன் ஜேம்ஸ் இந்த விண்மீன் பேரடையை “வானில் தொலைந்த பேரடை” என தனது “Hidden Treasures” என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த NGC 6503 பூமியில் இருந்து 18 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருகின்றது. மற்றும் 30,000 ஒளியாண்டுகள் விட்டம் கொண்டது – இது நமது பால்வீதியின் அளவில் அண்ணளவாக மூன்றில் ஒரு பங்கு.

படத்தில் நீங்க பார்க்கும் நீல வண்ணப் புள்ளிகளின் தொகுதிகளில் புதிதாக உருவாகிய விண்மீன்கள் காணப்படுகின்றன, அதேபோல பிரகாசமான சிவப்பு வண்ண வாயுக்களும் அதிகம் காணப்படுகின்றன. இந்தப் பேரடையின் மையத்திலும் ஒரு பாரிய கருந்துளை ஒன்று இருக்கிறது.

இந்தப் படம் ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டியில் உள்ள Advanced Camera for Surveys என்கிற புகைப்படக் கருவி மூலம் ஏப்ரல் 2003 இலும், பின்னர் Wide Field Camera 3 என்கிற புகைப்படக் கருவி மூலம் 2013 இலும் எடுக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட படமாகும்.


மேலும் அறிவியல் தகவல்களை அறிய முகப்புத்தகத்தில் பரிமாணத்தை தொடருங்கள்! 

https://www.facebook.com/parimaanam