எழுதியது: சிறி சரவணா
குவாசார் (Quasar – quasi-stellar radio source) எனப்படுவது பிரபஞ்சத்தில் காணப்படும் பாரிய சக்திவாந்த பொருளாகும். குவாசார்கள் பில்லியன் கணக்கான விண்மீன்களைக் கொண்டுள்ள விண்மீன் பேரடைகளை விடப் பிரகாசமானவை.
இவற்றுக்கு இப்படியான பாரிய சக்தியை வழங்குவது, அதன் நடுவில் இருக்கும் கருந்துளை உருஞ்சிக்கொண்டிருக்கும் வாயுக்களினதும் தூசுகளினதும் உராய்வுவிசையாகும். இந்த உராய்வு விசையால் உருவாகும் வெப்பம் மற்றும் சக்தி, ஒளி மற்றும் ஏனைய மின்காந்த அலைகளாக வெளிவிடப்படுகின்றன. கருந்துளையில் இருந்துதான் ஒளி தப்பிக்க முடியாது, ஆனால் இங்கு கருந்துளையை சுற்றி உள்ள வாயு மண்டலத்தில் இருந்தே இந்த ஒளி மற்றும் சக்தி வெளிவிடப்படுகிறது. நடுவில் இந்தச் சக்தியை உருவாக்கும் மோட்டார் போல கருந்துளை!
சரி தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்தவிடயத்தைப் பற்றிப் பார்க்கலாம். அண்ணளவாக பூமியில் இருந்து 600 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மார்க்காரியன் 231 (Markarian 231 or UGC 8058) என்கிற விண்மீன் பேரடை உண்டு. இதனைப் பேரடை என்பதை விட குவாசார் என்று சொல்வதே சரி. ஏனென்றால் இந்த மார்க்காரியன் ஒரு Seyfert வகை விண்மீன் பேரடையாகும்.
Seyfert விண்மீன் பேரடைகள், சாதாரண விண்மீன் பேரடைகளைவிட மிகப் பிரகாசமானவை, மற்றும் மிகவும் துடிப்பான இந்தவகை பேரடைகள் தனது மையத்தில் மிகச் சக்திவாய்ந்த கருவைக் கொண்டிருக்கும். குவாசாருக்கும் Seyfert விண்மீன் பேரடைகளுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம், குவாசரில் அதன் தாய் விண்மீன் பேரடையை இனங்கான முடியாது – அதாவது குவாசார் முழுதாக தனது தாய்ப் பேரடையை அழித்திருக்கும். ஆனால் Seyfert விண்மீன் பேரடைகளில் அதன் தாய்ப் பேரடையை இலகுவாக இனங்காணக் கூடியதாக இருக்கும்.
மீண்டும் மார்க்கரியனுக்கு வருவோம், இந்த விண்மீன் பேரடை/குவாசார் அதன் மையத்தில் இரண்டு பாரிய கருந்துளைகளைக் கொண்டுள்ளதை விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர். அவை ஒன்றையொன்று சுற்றி வருகின்றன.
ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி இந்த குவாசாரை அவதானித்த போது அதன் மையத்தில் இருக்கும் வாயுக்கள் மற்றும் தூசுகளுக்குள் ஒரு பாரிய துளை ஒன்று இருப்பது தெரிந்தது. இதனை அடிப்படையாக வைத்து மாதிரிகளை உருவாக்கிப் பார்த்தபோது, அந்தத்துளை ஒரு கருந்துளையாக இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.
அதாவது ஒரு பெரிய கருந்துளை, அதனோடு ஒரு சிறிய கருந்துளை. இதில் பெரிய கருந்துளை நமது சூரியனைப்போல 150 மில்லியன் மடங்கு திணிவானது. மற்றைய சிறிய கருந்துளை சூரியனைப்போல 4 மில்லியன் மடங்கு திணிவானது.
இதில் ஒரு முக்கிய விடயம், இந்த இரண்டு கருந்துளைகளும் ஒன்றையொன்று நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக சுற்றிவருகிறது. இன்னும் சில இலட்சம் வருடங்களில் இவை இரண்டும் மோதிவிடும். அப்போது நிச்சயம் நம் கற்பனைக்கு மீறிய சக்தி வெளிவிடப்படும்.
ஆய்வாளர்கள் இந்த இரண்டு கருந்துளைகளும், இரண்டு விண்மீன் பேரடைகள் மோதுண்ட போது அருகில் வந்து சேர்ந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். ஆகவே மார்க்காரியன் 231 இரண்டு பேரடைகள் மோதியதால் உருவாகியது. இந்தபேரடையில் விண்மீன்கள் உருவாகும் வீதம் நமது பால்வீதியில் விண்மீன்கள் உருவாகும் வீதத்தை விட 100 மடங்கு அதிகமாக இருக்கறது.
எப்படியோ முத்தம் முதலில் ஒரு குவாசாரில் இரட்டை கருந்துளைகள் இருப்பதை ஆய்வாளர்கள் அவதானித்துள்ளது முக்கிய விடயம், ஏனென்றால் இதனைப் போலவே இன்னும் பல இரட்டை கருந்துளைத் தொகுதிகளைக் கொண்ட குவாசர்கள் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.