பால்வீதியின் மையத்தில் ஒரு டஜன் கருந்துளைகள்

நீண்டகாலமாக பல விஞ்ஞானிகள் பால்வீதி போன்ற விண்மீன் பேரடையின் மையத்தில் இருக்கும் பெரும்திணிவு கருந்துளையைச் (supermassive black hole) சுற்றி பல சிறிய கருந்துளைகள் இருக்கவேண்டும் என கருதினர். ஆனால் பால்வீதியின் மையத்தை நோக்கிய அவதானிப்பில் அப்படியான கருந்துளைகள் இருப்பது போன்ற சான்றுகள் எமக்கு இதுவரை கிடைத்ததில்லை.

தற்போது சந்திரா எக்ஸ் கதிர் தொலைநோக்கியில் இருந்து பெறப்பட தரவுகளின் அடிப்படையில், பால்வீதியின் மையத்தில் 12 செயலற்ற கருந்துளைகளை (inactive black holes) இரட்டை விண்மீன் தொகுதிகளில் கொண்டிருப்பதற்கான சான்றுகள் இருப்பதை புதிய ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த இரட்டை விண்மீன் தொகுதியில் ஒரு சாதாரண விண்மீன் கண்களுக்கு புலப்படாத மற்றைய விண்மீனைச் சுற்றிவருகிறது. இந்தக் கண்களுக்கு புலப்படாத விண்மீன் – கருந்துளை.

பால்வீதியின் மையத்தில் இருக்கும் பெரும்திணிவுக் கருந்துளையான Sagittarius A* ஐச் சுற்றி அடர்ந்த வாயுக்களும் தூசுகளும் காணப்படுகின்றன. இதனால் இப்பிரதேசத்தில் பாரிய விண்மீன்கள் பிறப்பதற்கும், அவை வாழ்ந்து முடிந்து கருந்துளைகளாவதற்கும் அதிகளவு சந்தர்பம் உண்டு என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

Sagittarius A* ஐச் சுற்றியுள்ள வாயுப் பிரதேசத்திற்கு அப்பால் இருக்கும் கருந்துளைகள் இப்பாரிய கருந்துளையின் சக்தியால் கொஞ்சம் கொஞ்சமாக ஈர்க்கப்பட்டு, தங்களிடம் இருக்கும் சக்தியை கொண்டம் கொஞ்சமாக இழந்து ஒரு கட்டத்தில் குறித்த வாயுப்பிரதேசத்தில் தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக்கொள்கின்றன.

அருகில் வரும் விண்மீன்களை கவர்ந்து இரட்டை விண்மீன் தொகுதிகளாக வாழ்கையை கொண்டுசெல்லும் கருந்துளைகளும் இவற்றில் அடக்கம்.

இதற்கு முன்னர், இப்படியான கருந்துளைகளை கண்டறிய பயன்படுத்தப்பட்ட உத்தியானது, இரட்டை விண்மீன்/கருந்துளை தொகுதியில் இருந்து அடிக்கடி வெளிவரும் மிகப்பிரகாசமான எக்ஸ் கதிர் வெடிப்புகளை அவதானிப்பதாகும்.

ஆனால் இதில் இருக்கும் சிக்கல் என்னெவன்றால், பூமியில் இருந்து பால்வீதியின் மையப்பகுதி வெகு தொலைவில் இருப்பதால் இங்கிருந்து அவதானிப்பதற்கு ஏற்ற பிரகாசமான எக்ஸ் கதிர் வெடிப்பு 100 தொடக்கம் 1000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இடம்பெறும். ஆகவே இதற்கு நாம் காத்திருக்கமுடியாது.

எனவே கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்ணியலாளர்கள் இப்படியான செயலற்ற இரட்டை விண்மீன்/கருந்துளை தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக வரும் மெல்லிய எக்ஸ் கதிர் வெடிப்புகளை அவதானித்தனர்.

இதனைப் பற்றி பேராசிரியர் ஹெய்லி கூறும் போது, “ஒரு கருந்துளை குறைந்தளவு திணிவு கொண்ட விண்மீனுடன் இணைந்து இரட்டை தொகுதியை உருவாக்கும் போது மெல்லிய ஆனால் தொடர்ச்சியான எக்ஸ் கதிர் வெடிப்புகளை வெளியிடும், இவற்றை எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருக்கும்” என்கிறார்.

இந்த தேடல் வேட்டையின் போது, Sagittarius A* கருந்துளையில் இருந்து மூன்று ஒளியாண்டுகள் சுற்றளவிற்குள் 12 சிறிய கருந்துளைகள் சிக்கியுள்ளன!

இந்த கருந்துளைகளின் அமைவிடம் மற்றும் ஏனைய காரணிகளை வைத்து பொதுமைப்படுத்திப் பார்த்தால் அண்ணளவாக பெரும் திணிவுக் கருந்துளையின் பிரதேசத்தினுள் 300-500 குறைந்தளவு திணிவு கொண்ட இரட்டை விண்மீன்/கருந்துளை தொகுதிகளும், 10,000 தனிப்பட்ட குறைதிணிவு கொண்ட கருந்துளைகளும் இருக்கலாம் என்று இந்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த ஆய்வின் முடிவு ஈர்ப்பு அலை ஆய்வில் முக்கிய பங்காற்றும் என்று பேராசிரியர் ஹெய்லி கூறுகிறார்.

தகவல்: BBC