சிலவேளைகளில் நீங்கள் அன்டிபயாட்டிக் எதிர்ப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். அதாவது பக்டீரியா மூலம் பரவும் நோய்களுக்கு கொடுக்கப்படும் எதிர்ப்பு மருந்தே அன்டிபயாட்டிக் (antibiotic) மருந்துகள் எனப்படுகிறது. சிலவேளை இப்படியான மருந்துகள் பாக்டீரியாக்களுக்கு எதிர்ப்பாக வேலைசெய்வதில்லை. தற்போது உள்ள நிலைமை என்னவென்றால் பாக்டீரியாக்களுக்கு எதிரான அன்டிபயாட்டிக் மருந்துகளுக்கு கப்சா கொடுக்கும் பாக்டீரியாக்கள் அதிகமாகின்றன என்று ஆய்வுகள் சொல்கின்றன.
ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் பக்டீரியா தொற்றுக்கு எதிராக கொடுக்கப்படும் அன்டிபயாட்டிக் மருந்துகள் வேலை செய்யாமல் இறப்பவர்களின் எண்ணிக்கை 23,000 ஆகும். அங்கேயே அப்படியென்றால், ஆசிய நாடுகளை நினைத்துப் பாருங்கள்!
புதிய ஆய்வில் அன்டிபயாட்டிக் மருந்துகளுக்கு எதிர்ப்புக்காட்டும் 221 வித்தியாசமான பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அப்படியென்றால் நம்மிடம் இருக்கும் மருந்துகளைக் கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது என்பதே அதன் அர்த்தம்.
சில வருடங்களுக்கு முன்பு இந்த நிலை மிக மிக அரிதாக இருந்த போதிலும், தற்போது அன்டிபயாட்டிக் மருந்துகளுக்கு எதிர்புக்காட்டும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் அதனால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் அசாதாரண அளவில் அதிகரித்து வருகிறது. இந்த வளர்ச்சி உலக சுகாதார மையத்தையே (World Health Organization) எச்சரிக்கை அறிக்கை விடும் அளவிற்கு கொண்டுவந்துள்ளது.
இப்படி எல்லா அன்டிபயாட்டிக் மருந்துகளுக்கும் அல்லது பெரும்பாலான அன்டிபயாட்டிக் மருந்துகளுக்கு எதிர்ப்புக்க் காட்டும் நுண்ணுயிர்கள் அல்லது பாக்டீரியாக்கள் பொதுவாக விசேட மரபணுக்களை கொண்டிருக்கின்றன.
இதிலும் குறிப்பாக Nightmare bacteria என அழைக்கப்படும் பாக்டீரியாக்கள் குணப்படுத்த முடியாத அல்லது மிக மிக மிகக் கடினமான வகை பாக்டீரியாக்களாகும். Nightmare என்றால் கொடுங்கனவு – சரியாகத்தான் பெயர் வைத்துள்ளனர். இந்தப் பெயருக்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. சராசரியாக பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்ட நான்கு மாதிரிகளில் ஒரு மாதிரியில் இருக்கும் பாக்டீரியாவில் இருக்கும் விசேட மரபணு அதனைச் சார்ந்து இருக்கும் ஏனைய பாக்டீரியாக்களுக்கும் நோயெதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது இதனால் அவற்றுக்கான அன்டிபயாட்டிக் மருந்துகளும் செயலிழக்கின்றன.
இந்த செய்தி உங்களை பாதித்திருந்தால் அடுத்ததாக வரவிருப்பது உங்களை நிலைகுலையச் செய்யலாம். அதாகப்பட்டது, எந்தவிதமான பாக்டீரியா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாத ஆசாமிகளுக்கு செய்யப்பட்ட ஆய்விலும் பத்தில் ஒருவருக்கு இப்படியான அன்டிபயாட்டிக்க்கு எதிர்ப்புக்காட்டும் பாக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதில் இருக்கும் ஒரு நல்ல செய்தி, இந்த ஆய்வகங்கள் ஏற்கனவே இருக்கும் அன்டிபயாட்டிக் மருந்துகளின் வீரியத்தை அதிகரிக்க ஆய்வுகள் செய்வதுடன், புதிதாக அதிசக்திவாய்ந்த அன்டிபயாட்டிக் மருந்துகளையும் உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளனர்.
நம்மை அதாவது மனிதனை அழிப்பதற்கு சக்தி பொருந்தியவன் மனிதன் மட்டுமே என்று நாம் நம்புகிறோம், அதனால் தான் அணுவாயுதம், உலகப்போர் என்பவற்றை கட்டுப்படுத்த முனைப்புக் காட்டுகிறோம், ஆனால் மரணத்தின் அரசன் இந்த இயற்கையிலே கண்களுக்கு கூட புலப்படாதளவு சிறிய நுண்ணங்கிகளில் உறங்குகிறான். அவன் எழும்பும் முன் நாம் முழித்துக்கொள்வது எமது சாமர்த்தியம் இல்லையேல் தலைக்குமேல் வெள்ளம் சான் என்ன முழம் என்ன என்கிற நிலைதான்.