மில்லியன் சூரியன்களின் ஒளி

நம் கண்களால் சுப்பர் சக்திவாய்ந்த எக்ஸ் கதிர்களை பார்க்ககூடியவாறு இருந்தால் எமது வாழ்க்கை சற்றே விசித்திரமாக இருக்கும். நண்பர்களைப் பார்க்கும் போது அவர்களது உடலில் உள்ள எலும்புகளையும் எம்மால் பார்க்கவேண்டி இருந்திருக்கும்!

அப்படியொரு சுப்பர் பவர் இல்லாதது சாதாரண வாழ்க்கைக்கு நல்லதே – ஆனால் அப்படியொரு சக்திவாய்ந்த எக்ஸ் கதிர்களை பிரபஞ்சத்தில் இருக்கும் காஸ்மிக் பொருட்களில் இருந்து அவதானிப்பது பயனுள்ள விடையம்.

பொதுவாக இப்படியான எக்ஸ் கதிர்கள் பல மில்லியன் பாகை வெப்பநிலை கொண்ட விண்வெளிப் பொருட்களான சூரியன், வெடிக்கும் விண்மீன்கள் மற்றும் உணவருந்தும் கருந்துளைகளில் இருந்து வருகிறது!

ஆனால், 1980களில் விஞ்ஞானிகள் விண்மீன் பேரடைகளில் இருக்கும் புதிய வகை வஸ்தில் இருந்து மிகப் பிரகாசமான எக்ஸ் கதிர்கள் வருவதை அவதானித்தனர். எக்ஸ் கதிர் தொலைநோக்கிகளைக் கொண்டு அவதானித்த பொழுதில் மில்லியன் சூரியன்களை ஒன்றிணைத்த பிரகாசத்தில் இந்த வஸ்து ஒளிர்ந்தது.

முதலில் இதனை அருகில் இருக்கும் பொருட்களை கபளீகரம் செய்யும் கருந்துளை என்றுதான் விஞ்ஞானிகள் கருதினர். ஆனால் புதிய ஆய்வுகள் இவை நியுட்ரோன் விண்மீன்கள் எனப்படும் வகையச் சேர்ந்த விண்மீன்கள் என்று தெரிவிக்கிறது.

தனது வாழ்வுக் காலத்தை முடித்துவிட்டு வெடித்துச் சிதறிய பாரிய விண்மீன்களின் எஞ்சிய மையப்பகுதியே நியுட்ரோன் விண்மீன்கள் எனப்படுகின்றன. இவற்றின் அடர்த்தி கற்பனைக்கு அப்பாற்பட்டது. சூரியனில் இருக்கும் வஸ்தைவிடக் கூடிய அளவுள்ள வஸ்துக்கள் வெறும் நகரம் ஒன்றின் அளவுள்ள கோளத்தினுள் அடைக்கப்பட்டிருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

படத்தில்: Whirlpool பேரடை – இதில் ULX எனப்படும் மிகச் சக்திவாய்ந்த எக்ஸ் கதிர் முதல்கள் இருக்கின்றன. நன்றி: NASA/CXC/Caltech/M. Brightman et al.; Optical: NASA/STScI

கருந்துளைகளைப் போலவே நியுட்ரோன் விண்மீன்களும் அதிசக்திவாய்ந்த ஈர்ப்புவிசையை கொண்டுள்ளது. இதன்மூலம் அதற்கு அருகில் இருக்கும் விண்மீன்களில் இருக்கும் வஸ்துக்களை இது கவர்ந்திழுக்கும். இப்படியான வஸ்துக்கள் நியுட்ரோன் விண்மீனை நோக்கி விழும் போது அவை வெப்பமடைந்து எக்ஸ் கதிர்களில் ஒளிர்கிறது.

மேலும் மேலும் வஸ்துக்கள் நியுட்ரோன் விண்மீனை நோக்கி விழும் போது, ஒரு கட்டத்தில் அதனால் உருவாகும் எக்ஸ் கதிரின் ஆற்றல் அதிகரித்து நியுட்ரோன் விண்மீனை நோக்கி விழும் வஸ்துக்களை வெளிநோக்கி தள்ளுகிறது. இந்த நிலைக்கு பிறகு அந்த விண்மீனால் மேற்கொண்டு வஸ்துக்களை கவரவோ அல்லது மேலும் ;பிரகாசமாக ஒளிரவோ முடியாமல் போய்விடும். ஆனால் புதிதாக கண்டறியப்பட்ட வகை நியுட்ரோன் விண்மீன் இந்த எல்லையை தகர்ப்பதற்கான வழியைக் கண்டறிந்துவிட்டது!

இந்த ஆய்வில் ஈடுபட்ட முரே பிரைட்மேன் எனும் விஞ்ஞானி “எம்மால் எப்படி குறித்தளவு உணவை மட்டுமே ஒரு வேளையில் உண்ணமுடியுமோ, அதனைப் போலவே நியுட்ரோன் விண்மீன்களாலும் குறித்தளவு வஸ்துக்களையே ஒரு குறித்த வேளையில் திரட்ட முடியும்” என்று விளக்குகிறார். அவர் மேற்கொண்டு கூறுகையில், “ஆனால் குறிப்பிட்ட வகையான நியுட்ரோன் விண்மீன்கள் இந்த எல்லையை மீறி வஸ்துக்களை திரட்டி மிகப்பிரகாசமாக ஒளிர்கின்றன. இதுவரை இதற்குக் காரணம் என்ன என்று எமக்குத் தெரியாது.” என்கிறார்.

மேலதிக தகவல்

நியுட்ரோன் விண்மீன்களை விண்மீன்கள் என்கிற வகையில் சேர்ப்பதை விட கோள்கள் என்கிற வகையில் சேர்ப்பதே பொருத்தமாக இருக்கும் – இவற்றுக்கு திண்மநிலையில் மையப்பகுதி காணப்படும். உருக்கு இரும்பை விட நியுட்ரோன் விண்மீனின் அகப்பகுதி 10 பில்லியன் மடங்கு உறுதியானதாக இருக்கலாம் என சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.


மூலம்: http://www.unawe.org/kids/unawe1806