நாம் அடிக்கடி இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் பொருட்கள் எவ்வளவு பெரியவை அல்லது பெருந்திணிவானது என்று பேசுகிறோம், ஆனால் இந்தப் பெரும்திணிவு என்று கருதுவது எவ்வளவு பெரியது?
பொதுவாகவே நாம் பெருந்திணிவு என்று கூறும் போது அதன் அளவைக் கருத்தில் கொண்டு அப்படி கூறுவதில்லை. திணிவு என்பது ஒரு பொருள் கொண்டுள்ள வஸ்தின் அளவு எனலாம். உங்கள் தலையளவு இருக்கும் பஞ்சு மிட்டாய் நிச்சயமாக சாக்லெட்பார் ஒன்றை விடப்பெரியதுதான், ஆனால் சாக்லெட்பாருடன் ஒப்பிடும் போது பஞ்சு மிட்டாயில் குறைந்தளவு ‘வஸ்தே’ காணப்படுகிறது, எனவே சாக்லெட்பாரை விட பஞ்சு மிட்டாய் குறைந்தளவு திணிவானது. பஞ்சு மிட்டாயை கைகளுக்குள் வைத்து நெருக்கிப்பாருங்கள் அது எவ்வளவு சிறிதாக மாறும் என்று தெரியும்!
பெரும்திணிவு என்கிற சொல்லோடு நெருங்கிய தொடர்புள்ள ஆசாமி மிஸ்டர் கருந்துளை.
கருந்துளைகளின் அளவுகளைப் பற்றிய கட்டுரையை வாசிக்கவும்:
பெரும்திணிவுக் கருந்துளைகள் என்கிற அசூர அளவான கருந்துளைகள் விண்மீன் பேரடைகளின் மத்தியில் காணப்படுகின்றன. இந்த அதிசக்திவாய்ந்த கருந்துளைகளின் ஈர்ப்புசக்தியால் அதற்கு அருகில் இருக்கும் பேரடையின் வாயுக்கள் தூசுகள் என்பன கற்பனைக்கடங்கா வேகத்தில் கருந்துளையை நோக்கி இழுக்கப்பட்டு அவற்றை கருந்துளை கபளீகரம் செய்கிறது. இப்படியாக இழுக்கப்படும் வாயுக்கள்/தூசுகள் உராய்வு மற்றும் அழுத்தம் காரணமாக அதிகூடிய வெப்பநிலைக்கு செல்கிறது – இதனால் இந்தப் பருப்பொருட்கள் பிரகாசமாக ஒளிர்கின்றன. பிரபஞ்ச எல்லையில் இருக்கும் பேரடைகளிலும் நடைபெறும் இந்த செயன்முறையால் இவற்றை எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
இப்படியான அதிசக்திவாய்ந்த கருந்துளையை மையத்தில் கொண்டு, அதனைச் சுற்றி ஒளிரும் தகடாக இருக்கும் வாயுக்கள்/தூசுகள் அடங்கிய தொகுதியை “குவாசார்” (quasar) என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இப்படியான குவாசார்களை படிப்பதற்கு அதன் மையத்தில் இருக்கும் கருந்துளையை நாம் படிக்க வேண்டும், குறிப்பாக அதன் திணிவை தெரிந்துகொள்வது இந்த ஆய்வுகளுக்கு மிகமுக்கியம்.
ஆனால் திணிவை அளப்பதற்கான பிரச்சினை வேறு ரூபத்தில் வருகிறது. பெரும்திணிவுக் கருந்துளைகளின் திணிவை அளப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அருகில் இருக்கும் விண்மீன் பேரடைகளின் மையத்தில் இருக்கும் பெரும்திணிவுக் கருந்துளைகளின் திணிவை அளப்பதற்கு, அதற்கு அருகில் சுற்றிவரும் விண்மீன்களின் வேகத்தை அளந்து அதன்மூலம் கண்டறியலாம். ஆனால் பிரபஞ்சத்தின் எல்லைகளில் இருக்கும் குவாசாரின் மையத்தில் இருக்கும் பெரும்திணிவுக் கருந்துளைகளின் திணிவை அளக்க இந்த முறையைப் பயன்படுத்த முடியாது. இதற்குக் காரணம் மிகத் தொலைவில் இருக்கும் குவாசாரில் இருக்கும் தனிப்பட்ட விண்மீன்களை பிரித்தறியும் அளவிற்கு எம்மிடம் தொலைநோக்கிகள் இல்லை.
எனவே விஞ்ஞானிகள் இன்னொரு மறைமுகமான முறையைப் பயன்படுத்தி குவாசாரில் இருக்கும் கருந்துளையின் திணிவை அளக்கக் கற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த டெக்னிக்கும் அருகில் இருக்கும் விண்மீன் பேரடைகளில் இருக்கும் கருந்துளையை அளப்பது போன்றதுதான், ஆனால் குவாசாரில் இருக்கும் கருந்துளைக்கு அருகில் இருக்கும் விண்மீன்களை பிரித்து அறிய முடித்து என்பதால், கருந்துளையைச் சுற்றி இருக்கும் வாயுத் தகட்டில் இடம்பெறும் மாற்றத்தை விஞ்ஞானிகள் அவதானிக்கின்றனர். அதாவது கருந்துளைக்கு அருகில் சுற்றிவரும் வாயுக்களின் பிரகாசத்தையும், சற்றே தொலைவில் சுற்றிவரும் வாயுக்களின் பிரகாசத்தையும் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். (மேலே உள்ள படத்தில் பார்க்கவும்)
அருகில் சுற்றிவரும் வாயுக்களில் ஏதாவது மாற்றம் இடம்பெற்றால், தொலைவில் சுற்றிவரும் வாயுக்களிலும் அதே மாற்றம் பிரதிபலிக்கும், ஆனால் அருகில் இருக்கும் வாயுப் பகுதியில் இருந்து தொலைவில் இருக்கும் வாயுப்பகுதியை நோக்கி ஒளி பயணிக்க குறிப்பட்டளவு நேரம் எடுக்கும் அல்லவா? இந்த நேர வித்தியாசத்தை கணக்கிடுவதன் மூலம் இரண்டு பிரதேசத்திற்குமான தூரத்தைக் கணிப்பிடமுடியும். இதன்மூலம் கருந்துளையில் இருந்து எவ்வளவு தொலைவுவரை வாயுத் தகடு நீண்டுள்ளது எனக் கணக்கிட்டு விஞ்ஞானிகளால் நேரடியாக கருந்துளையை அவதானிக்காமலே குறித்த பெரும்திணிவுக் கருந்துளையின் திணிவை அளக்கமுடியும்.
ஆனாலும் இப்படி அளப்பதற்கு பல வருடங்கள் செலவாகிறது என்பதே அடுத்த பிரச்சினை. ஒரே குவாசாரை மீண்டும் மீண்டும் பல மாதங்கள் தொடக்கம் சில பல வருடங்களுக்கு அவதானித்து தரவுகளை சேகரிக்கவேண்டும்.
கடந்த இருபது வருடங்களில் இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி 60 பெரும்திணிவுக் கருந்துளைகளின் திணிவு அளக்கப்பட்டுள்ளது. இதில் 44 குவாசார்களும் உள்ளடங்கும், இவற்றில் இருக்கும் கருந்துளைகளின் திணிவு, சூரியனின் திணிவைவிட 5 மில்லியன் மடங்கு தொடக்கம் 1.7 பில்லியன் மடங்குவரை அதிகமாக காணப்படுகிறது என்பதும் எமக்கு தெரியவருகிறது.
தற்போது விஞ்ஞானிகள் இந்த நுட்பத்தை வேகமாக பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் தற்போது தோரே தடவையில் 850 குவாசார்கள் கண்காணிக்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்படுகிறது. இதன்மூலம் இந்தப் பிரபஞ்சத்தின் முக்கிய புதிர்களில் ஒன்றான கருந்துளைகளைப் பற்றி மேலும் பல சுவாரஸ்யமான விடயங்களை எம்மால் எதிர்காலத்தில் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்!
மேலதிக தகவல்
ஒரு பொருளின் திணிவு அதிகரிக்க அதன் ஈர்ப்புவிசையும் அதிகரிக்கும். இதனால்தான் நிலவின் ஈர்ப்புவிசையை விட பூமியின் ஈர்ப்புவிசை அதிகமாக உள்ளது, இதன் காரணமாக விண்வெளி வீரர்கள் நிலவில் அதிக உயரத்திற்கு பாயமுடியும்!