ஸ்டாருடன் நடனம்

யாரும் எதிர்பாராத இடத்தில் ஸ்டாருடன் நடனமாட புதிய போட்டியாளரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் – ஆழ்விண்வெளி!

ஆயிரக்கணக்கான விண்மீன்கள் நிறைந்துள்ள விண்மீன் கொத்தொன்றில் ஒன்றுமட்டும் தனிப்பட்டு தெரிகிறது. இது விண்வெளியில் முன்னாலும் பின்னாலும் சென்றுவருவதுபோல இருப்பது விண்ணியலாளர்களின் கண்களுக்கு அகப்பட்டுவிட்டது. நடனமாடும் அறையில் ஜோடியாக நடனமாடுபவர்களைப் போல அல்லாமல் இந்த விண்மீன் தனியாகவே நடனமாடிக்கொண்டிருக்கிறது – அல்லது அப்படி நமக்குத் தெரிகிறது.

அந்த விண்மீனுக்கு ஒரு ஜோடி இருப்பது தற்போது எமக்குத் தெரியும். ஆனால் அது கண்களுக்கு புலப்படாத ஜோடி. ஆயிரக்கணக்கான விண்மீன்கள் நிறைந்த கொத்தில் ஒழிந்திருக்கும் கருந்துளைதான் அது.

கருந்துளைகள் ஒளியை வெளிவிடுவதில்லை. எனவே அவற்றை நேரடியாக அவதானிப்பது முடியாத காரியம். ஆனாலும், அவற்றைச் சுற்றியிருக்கும் பிரபஞ்சவெளியில் செலுத்தும் ஈர்புவிசையின் தாக்கத்தை எம்மால் பார்க்கமுடியும். மேலே குறிப்பிட்ட விண்மீனின் நடனம் இந்தக் கருந்துளையைச் சுற்றியே நடக்கிறது.

கண்டறியக் கடினமாக இருந்தாலும், பிரபஞ்சத்தின் சில பகுதிகளில் கருந்துளைகள் அதிகளவாக காணப்படுகின்றன. ஆனால் கோளவிண்மீன் கொத்துக்களில் அவை இருப்பதில்லை. கோளவிண்மீன் கொத்து ஒன்றில் இப்படியான அளவுள்ள கருந்துளை ஒன்று வின்மீனுடன் நடனமாடுவதை இப்போதுதான் நாம் முதன்முதலில் பார்க்கிறோம்.

பல்லாயிரக்கணக்கான விண்மீன்கள் கோளவடிவில் சேர்ந்து காணப்படும் பிரதேசம் தான் கோள விண்மீன்கொத்து (globular cluster). எமது பால்வீதியைச் சுற்றிக் காணப்படும் இவை பிரபஞ்சத்தில் இருக்கும் மிகப்பழைய விண்மீன் கூட்டங்களாகும். அவற்றின் அளவும், வயதும், இப்பிரதேசத்தில் இதுபோன்ற அளவுள்ள (சூரியனின் திணிவைப் போல நான்கு மடங்கு திணிவு கொண்ட கருந்துளைகள்) அதிகளவான கருந்துளைகள் இருக்கவேண்டும் என்று எம்மைக் கருதத் தூண்டுகிறது.

ஆனாலும், விண்மீன் கொத்துக்களில் கருந்துளைகள் அரிதாகவே காணப்படுகின்றன. எனவே அன்மையக்காலம் வரை விண்மீன் கொத்துக்களில் உருவாகும் கருந்துளைகள் சிறிது காலத்திலேயே கொத்தைவிட்டு வீசி எறியப்படும் என்றே விஞ்ஞானிகள் கருதினர். ஆனால் இந்தப் புதிய கண்டுபிடிப்பு, நிலைமை அப்படியில்லை என்று எமக்குக் காட்டுகிறது. நல்லவேளையாக இந்த விண்மீன் தனது நடன ஜோடியை இழக்கவில்லை.

மேலதிக தகவல்

கருந்துளைகளில் குறைந்தது மூன்றுவகை உண்டு. அணுவின் அளவில் இருந்து சூரியனின் திணிவைப் போல பில்லியன் மடங்கு திணிவு கொண்ட கருந்துளைவரை அளவில் வேறுபடுகின்றன. நாம் தற்போது கண்டறிந்தது போல மத்திம அளவுள்ள கருந்துளைகளே பிரபஞ்சத்தில் அதிகளவில் காணப்படுகின்றன.