வானியற்பியலாளருடன் சில கேள்வி பதில்கள்

விண்ணியல் என்றவுடனே எமக்கு உடனடியாக ஞாபகம் வருவது அழகான விண்மீன் பேரடைகளின், கோள்களின், விண்மீன்களின் தொலைநோக்கி புகைப்படங்கள் தான். ஆனால் விண்ணியல் ஒரு விஞ்ஞானம். பூமிக்கு அப்பால் உள்ள பிரபஞ்ச விந்தைகளை கணக்கிட்டு கண்டறியும் கடின உழைப்பு அதற்குப் பின்னால் இருக்கிறது.

நேபாளில் இருந்து தனது விண்ணியல் பயணத்தை ஆரம்பித்து, தற்போது அமெரிக்காவின் Amherst இல் உள்ள University of Massachusetts இல் வானியற்பியல் (astrophysics) துறையில் முனைவர் / கலாநிதிப் பட்டப்படிப்பை தொடரும் ரிவாஜ் போக்ரால் (Riwaj Pokhrel) அவரது படிப்பைப் பற்றியும், வானியற்பியல், விண்ணியல் பற்றிய துறையைப் பற்றியும் நான் கேட்ட சில கேள்விகளுக்கு அளித்த பதில்கள் இதோ.

உங்கள் தற்போதைய படிப்பு/வேலை என்ன? ஒவ்வொரு நாளும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று எங்களுக்கு கூறுங்கள்.

Amherst இல் உள்ள University of Massachusetts (Umass) இல் ஐந்தாம் ஆண்டு முதுகலை படிப்பை தொடருகிறேன். வானியற்பியலில் ஆர்வம் கொண்டு நான் Umass இற்கு வந்தேன், அங்கு மூன்றாண்டுகள் கற்கைக்கு பின்னர் மதிப்புமிக்க Harvard-Smithsonian Center for Astrophysics (CfA) இல் மேற்கொண்டு ஆய்வுகளை செய்ய fellowship கிடைத்ததால் அங்கே தற்போது எனது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன்.

மூலக்கூற்று மேகங்களில் இருந்து எப்படி விண்மீன்கள் பிறக்கின்றன என்று ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன். பல்வேறு தொலைநோக்கிகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளை பல்வேறு சாப்ட்வேர் மற்றும் ப்ரோக்ராமிங் மொழிகளை பயன்படுத்தி அலசுவதே தினமும் நான் செய்யும் வேலை.

SMA இன் கட்டுப்பாட்டு அறையில்.

இன்னும் குறிப்பாக, இலகுவாக கூறவேண்டும் என்றால், பல தொலைநோக்கிகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளை அலசி, மூலக்கூற்று மேகங்களில் இருந்து எப்படி விண்மீன்கள் பிறக்கின்றன என்று கண்டறியமுயற்சிக்கிறேன்.

உங்களுக்கு எப்படி வானியற்பியலில் ஆர்வம் ஏற்பட்டது?

சிறுவயதில் வானியற்பியலில் எனது பாதையை அமைத்துக்கொள்வேன் என்று நான் கற்பனை செய்ததில்லை, காரணம், அது கனவுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு விடையமாகவே இருந்தது. ஆனாலும் இரவு வானின் அழகு என்னை எப்போதுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தும். சிறுவயதில் பெரிதும் வளர்ச்சியடையாத மேற்கு நேபாளில் வாழ்ந்த காலத்தில் அடிக்கடி மின்வெட்டுகள் இடம்பெறும். மின்சாரம் இல்லாவிடில் வீட்டினுள் தூங்கமுடியாதளவிற்கு புழுக்கமாக இருக்கும். அவ்வேளைகளில் மொட்டைமாடியில் சென்று இரவு வானின் அழகை ரசித்துக்கொண்டே தூங்குவது வழக்கம்.

சிறுவயதில் ஒவ்வொரு விண்மீன்களாக நான் சென்று பார்ப்பது போலவே நினைத்துக்கொள்வேன். எல்லையில்லாக் கற்பனையில் விண்மீன்கள், விண்மீன் பேரடைகள் என்று நான் பயணித்தாலும், உண்மையில் விண்ணியலைக் கற்பது என்பது எனக்கு கிடைக்கமுடியாத வரமாகவே இருந்தது. இளநிலைப் பட்டப்படிப்பின் போதே (3 வருட பட்டப்படிப்பு) நான் என்னைப்போலவே விண்ணியலில் ஆர்வம் கொண்ட சிலரைச் சந்தித்தேன். அவர்களுடன் சேர்ந்து விண்ணியல் கழகம் ஒன்றை ஆரம்பித்தோம். ஆரம்பித்த ஒரு வருடத்தின் பின்னர் Astronomers Without Borders என்கிற சர்வதேச நிறுவனம் எங்களுக்கு ஒரு தொலைநோக்கியை தந்தது. அதனைக் கொண்டு பல சிறிய கோள்களைக் காட்டுவது, நெபுலாக்களை காட்டுவது போன்ற நிகழ்வுகளை நடத்தினோம். பின்னர் நேபாளில் உள்ள Tribhuvan பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு முதுகலைக் கல்வியைப் பயிலும் போது வானியற்பியலில் ஒரு அடிப்படை பாடத்தை என்னால் தெரிவுசெய்து படிக்க முடிந்தது, அதுவே என்னை வானியற்பியல் நோக்கிய பாதையில் கொண்டு சென்றது.

நீங்கள் செய்யும் வேலையில்/ஆய்வில் உங்களுக்கு பிடித்தமானது என்ன?

நான் பிரபஞ்சத்தைப் பற்றிப் படிக்கிறேன், அதுவே ஒரு வியத்தகு விடையம் தானே. இதனைவிட வேறு ஒரு வேலையில் ஆர்வம் வருமா என்று தெரியாது. ஒவ்வொரு முறையும் விண்ணியல் நிகழ்வு பற்றிய தரவுகளை ஆய்வு செய்யும் போது, அவை என்னுடன் கதைப்பதைப் போலவே இருக்கும். அது எனக்கு இந்தப் பிரபஞ்சம் இயங்கும் முறையை விபரிப்பதாகவே எண்ணுவேன். இந்தப் பிரபஞ்சம் எம்மக்கு என்ன சொல்கிறது என்று தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்து கண்டரிவதையே நான் எனது வேலையில் இருக்கும் உச்சக்கட்ட திருப்தி என்று கூறுவேன்.

வானியற்பியலில் எப்படி ஈடுபடுவது என்று யாராவது உங்களைக் கேட்டால், எப்படியான அறிவுரைகள், படிமுறைகளை பரிந்துரைப்பீர்கள்? (கல்வி மற்றும் பயிற்சி உள்ளடங்கலாக)

மிக முக்கியமான விடையம் உங்களுக்கு வானியற்பியலில் மிகுதியான ஆர்வம் இருக்கவேண்டும். ஆரவ்மில்லாமல் இந்தத் துறையை நீங்கள் தேர்வு செய்தால், மிகவும் கஷ்டப்பட வேண்டிவரும் காரணம் இது மிகவும் கடினமான பாதை. ஆகவே ஆர்வமிருந்தால், இணையத்தில் இருக்கும் விண்ணியல் கட்டுரைகள், பொதுவான விண்ணியல் புத்தகங்களை முதலில் வாசித்து அடிப்படைகளை கற்றுக்கொள்ளலாம். இது போரடிக்காத பாடம், எனவே எவ்வளவு அதிகமாக வாசிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு மேலும் மேலும் வாசிக்க ஆர்வம் வரும். ஒரு விண்ணியலாளராக மாறாமலே உங்களால் விண்ணியலை ரசிக்கவும் அறியவும் முடியும்.

LMT யின் கட்டுப்பாட்டு அறையில்

ஆனாலும், விண்ணியலாளராக வரவேண்டும் என்று ஆர்வமிருந்தால், நிச்சயம் இயற்பியலில் அடிப்படைக் கல்வி (இளநிலை பட்டப்படிப்பு) இருக்கவேண்டும். வானியற்பியலே பிரபஞ்சம் பற்றிய இயற்பியல் தானே. அடுத்ததாக நிச்சயம் ஒரு கணணி மொழியில் நல்ல தேர்ச்சி இருக்கவேண்டும். விண்ணியல் துறையில் தற்போது எண்ணிலடங்கா அளவுள்ள தரவுகளை நாம் ஆய்வு செய்கிறோம். இதற்கு, கணணி, கணனி மொழியில் தேர்ச்சி இருப்பது அடிப்படையாக கருதப்படுகிறது. அப்படி தெரிந்திருப்பது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

முனைவர் பட்டப்படிப்பு மாணவராக இருப்பது எப்படி உங்கள் சமூக வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

PhD செய்வது நிச்சயம் சமூக வாழ்வில் தாக்கத்தை உண்டாக்குகிறது என்பது உண்மைதான். வாரஇறுதி நாட்களில் கூட நான் பெரும்பாலான நேரத்தை ஆய்வு செய்வதிலேயே செலவிடுகிறேன். எனவே நண்பர்களோடு பழகும் நேரம் குறைவாகவே இருக்கிறது. ஆனாலும், சமூக வாழ்க்கையும் மிக முக்கியமான விடையம் என்பதனை நான் உணருகிறேன். அதனால் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது நண்பர்களுடன் கழிக்கிறேன். ஆனாலும், வேறு துறைகளில் இருக்கும் எனது நண்பர்களை விட எனது சமூகவியல் நேரம் மிக மிகக் குறைவாகவே இருக்கிறது.

உங்கள் வேலையில் திருப்தியைக் கொடுப்பது என்ன? நாள் முடிவில், உங்கள் மனத்தை நிறைக்கும் விடையங்கள் என்ன?

தொடர்ச்சியாக தரவுகளை ஆய்வு செய்வது சிலவேளைகளில் எரிச்சலடையச்செய்யும். ஆனாலும், வேறு ஒருவரும் செய்யாத பெரிய வேலையை செய்கிறேன் என்கிற எண்ணம் எப்போதும் எனக்கு மன நிறைவைத் தரும். இந்தப் பிரபஞ்சம் பேசும் மொழியை அறிந்துகொள்ள நான் முனைவது என்னை எப்போதுமே திருப்திப்படுத்தும் விடையம். தரவுகளை ஆய்வு செய்ய நான் எழுதிய ப்ரோக்ராம் சரியாக வேலை செய்யும் போது கிடைக்கும் மன நிறைவை சொல்ல வார்த்தைகளே இல்லை!

Very Large Array (VLA) பின்னால்.

விண்ணியல் சார்ந்த உங்கள் எதிர்கால இலச்சியங்கள் என்ன?

விண்ணியல் துறையில் மேலும் பல பங்களிப்புகளை செய்யவேண்டும். இந்த அளப்பரிய பிரபஞ்சத்தை முழுதும் அறிவது என்பது சாத்தியமற்ற விடையம், எனவே புதிதாக அறிந்துகொள்ள எப்போதும் ஏதாவது இருந்துகொண்டே இருக்கும். எனது முனைவர் படிப்பை முடித்தவுடன், மேற்கொண்டு விண்மீன் உருவாக்கக் கோட்பாட்டில் மேலும் ஆய்வுகளை செய்ய திட்டமிட்டுள்ளேன்.

உங்களுடைய சாதாரண நாள் ஒன்று எப்படி இருக்கும்? விண்ணியல் வேலையைத் தவிர ஏனைய வேலைகளை செய்ய உங்களுக்கு எவ்வளவு நேரம் எஞ்சும்?

என்னுடைய ப்ரீ நேரம் மிக மிகக் குறைவே. பொதுவாக தினமும் 10 மணி நேரங்களுக்கும் அதிகமாக எனது லேப்டாப்பில் நேரம் கழிந்துவிடும். காலையில் எழும்பிய உடனே எவ்வளவு சீக்கிரமாக எனது அலுவலகத்திற்கு செல்லமுடியுமோ, அவ்வளவு வேகமாக சென்றுவிடுவேன். அங்கே எனது வேலை மாலை வரை தொடரும். நீங்கள் விரும்பும் துறையில் நீங்கள் வேலை செய்தால் வேலைப்பளு உங்களுக்குத் தெரியாது, மாறாக அது உங்களுக்கு மன மகிழ்ச்சியையே தரும். எதோ ஒன்றை புதிதாக கண்டறியப் போகிறோம் என்கிற சிலிர்ப்பே என்னை எப்போதும் ஆர்வமாக வைத்திருக்கும். ஆனாலும், ஏற்கனவே கூறியதுபோல இவை அனைத்தும், சமூக வாழ்வின் சிறு இழப்புடனே வருகிறது.

மெக்சிக்கோவில் இருக்கும் Large Milimeter Telescop (LMT). தொலைநோக்கிக்கு கீழே ரிவாஜ்.

வேலை விட்டு வந்த பின்னர் எனது நேரம் மனைவியுடன் செலவழிகிறது. சமைப்பது, படம் பார்ப்பது, ஊரில் இருக்கும் உறவினர்களுடன் பேசுவது என்று மிச்ச நேரம் கழியும். எனது வேலையில் இருக்கும் இன்னொரு நல்லவிடையம் நான் வேலை செய்ய அலுவலகம் செல்லவேண்டியதில்லை. எனது லேப்டாப், நல்ல நெட் இணைப்பு போதும், எங்கிருந்தும் என்னால் வேலை செய்யமுடியும். சிலவேளைகளில் நான் வீட்டில் இருந்தே வேலை செய்கிறேன்.

நீங்கள் கண்டறிய ஆசைப்படுவது என்ன?

ஒரு வார்த்தையில் பிரபஞ்சம் என்று கூறலாம். எனது பிரதான இலக்கு எப்படி சூரியன் போன்ற விண்மீன்கள் உருவாகின்றன, அதனைச் சுற்றி பூமி போன்ற கோள்களும் அதில் மனிதர்கள் போன்ற அறிவுள்ள உயிரினங்களும் எப்படி உருவாகின்றன என்று கண்டறிவதே. விண்மீன் பேரடைகளின் உருவாக்கமும் அவற்றின் வளர்ச்சி பற்றியும் எனக்கு ஆர்வமுண்டு. அவற்றைப் பற்றியும் ஆய்வுகளை செய்ய ஆசைப்படுகிறேன்.

எண்ணிலடங்கா விண்பொருட்களில் உங்களுக்கு பிடித்தமான விண்பொருள் எது அதற்குக் காரணம் என்ன?

ஒன்று என்று கூடிவிட முடியாது. ஆனாலும் ஒன்று என்று தெரிவு செய்யவேண்டும் என்றால், சனியின் வளையங்கள் தான் எனது விருப்பத் தேர்வு. அதற்குக் காரணம், நான் முதன் முதலில் தொலைநோக்கி மூலம் பார்த்த விண்பொருள் சனியின் வளையங்கள் தான். அந்த அழகான சனியின் வளையங்களின் முதல் அவதானிப்பு என்னை தாக்கியது என்றும் கூறலாம். அதன் பின்னர் நான் பல விண்பொருட்களை அவதானித்திருந்தாலும், இன்றுவரை சனியே எனது விருப்பத்தே தேர்வு.

உங்கள் துறையில் கணணி மற்றும் ப்ரோக்ராமிங் அறிவு அல்லது தேர்ச்சி முக்கியமா?

வானியற்பியலை நீங்கள் உங்கள் பாதையாக தெரிவு செய்யவிரும்பினால் கணணி மற்றும் ப்ரோக்ராமிங் அறிவு மிக முக்கியம். மற்றபடி கணனியை பயன்படுத்துவது பற்றி பொதுவான அறிவு மற்றும் குறைந்தது ஒரு ப்ரோக்ராமிங் மொழியில் பரீட்சியம் இருப்பது நல்லது.

புதிதாக விண்ணியல்/வானியற்பியல் துறைக்கு வரும் ஒருவர் கணனியில் குறிப்பாக எவற்றை கற்க வேண்டும்?

ப்ரோக்ராமிங் மொழி ஒன்று அவசியம் என்று கூறினேன். நான் Python எனும் மொழியை பயன்படுத்துகிறேன். சிலர் MATLAB, C++, R போன்ற மொழியையும் பயன்படுத்துகின்றனர். எனவே இவற்றில் ஏதாவது ஒன்றை அடிப்படையாக தெரிந்து கொண்டு வானியற்பியலில் நுழைந்தால், அதன் பின்னர் அத்துறையில் காலத்திற்கு ஏற்ப பல புதிய நுட்பங்களையும் கற்றுக்கொள்ளலாம்.

மூலக்கூற்று மேகம் பற்றி நீங்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரை பற்றிக் கூறுங்கள்.

The Astrophysical Journal ஆல் ஏற்றுக்கொள்ளப்பட்ட எனது ஆய்வுக் கட்டுரையானது மூலக்கூற்று மேகங்களின் துண்டுகளைப் பற்றியது. மூலக்கூற்று மேகங்கள் எனப்படும் பிரதேசம் விண்வெளியில் அதிகளவு செறிவாக ஹைட்ரோஜன் மற்றும் மைக்ரோன் அளவுள்ள தூசு துணிக்கைகளை கொண்ட பிரதேசமாகும். விண்மீன்கள் உருவாகும் பிரதான இடங்களும் இவைதான். மூலக்கூற்று மேகங்கள் அளவில் பெரியவை (அண்ணளவாக 30 ஒளியாண்டுகளை விடப் பெரிது). இந்த மூலக்கூற்று மேகங்கள் பல இடங்களில் துண்டுகளாக பிரிகின்றன. அப்படிப் பிரிபவை 10 AU (astronomical unit – 150 million km) விடச் சிறிய இடப்பரப்பினுள் செறிவாக சேர்ந்து விண்மீன்களை அவ்விடங்களில் உருவாக்குகின்றன.

இந்த மேகங்களின் அளவு துண்டுகளாக பிரிந்து, அவை சிறிதாக சிறிதாக, அதிலிருக்கும் ஹைட்ரோஜன் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி வெப்பசக்தியை பிறப்பிக்கின்றன. இந்த வெப்பசக்தி, மூலக்கூற்று மேகத்தின் உள்ளே இருந்து வெளியே தப்பிக்கப்பார்க்கும். இந்த நிகழ்வு வெளிநோக்கிய அழுத்தத்தை உருவாக்கும். இதே வேளையில், வெளியில் இருந்து உள்நோக்கி மூலக்கூற்று மேகத்தின் ஈர்ப்பு விசை எதிர் அழுத்தத்தை உருவாக்கும். மூலக்கூற்று மேகத்தின் பிரதேசம் ஸ்திரமான நிலையில் இருப்பதற்கு உள்ளிருந்து உருவாகும் வெப்ப அழுத்தமும், வெளியே இருந்து உருவாகும் ஈர்ப்புவிசையின் அழுத்தமும் ஒன்றுக்கொன்று சமமாக இருக்கவேண்டும். ஒருவேளை ஈர்புவிசையின் அழுத்தம் அதிகமாக இருந்தால் மேகம் சுருங்கி துண்டுகளாகும்.

வெளிநோக்கிய வெப்ப அழுத்தம் மூலக்கூற்று மேகத்தின் அளவில் தங்கியுள்ளது என்று நான் கண்டறிந்தேன். அதாவது, மூலகூற்று மேகத்தின் அளவு பெரிதாக இருந்தால், அதனால் உருவாக்கும் வெப்ப அழுத்தம் குறைவாக இருக்கும். அதேபோல மூலக்கூற்று மேகம் சிறிதாக இருந்தால் அதனால் உருவாகும் வெப்ப அழுத்தம் அதிகமாக இருக்கும்.

இதற்கு முன்னர் செய்யப்பட்ட மூலக்கூற்று மேகங்களைப் பற்றிய ஆய்வுக்கும், எனது ஆய்வுக்கும் இருக்கும் பெரிய வித்தியாசம் என்னெவன்றால், எனது ஆய்வு மூலக்கூற்று மேகங்களின் மிகப்பெரிய அளவில் இருந்து (30 ஒளியாண்டுகளுக்கும் அதிகமான) மிகச் சிறிய கட்டமைப்பு வரை (10 AU ஐ விடச் சிறிய) Perseus மூலக்கூற்று மேகம் என அழைக்கைப்படும் மூலக்கூற்று மேகத்தில் ஆய்வு செய்கிறது. இந்த ஆய்வுக்காக தரவுகளை Submillimeter Array (SMA), Very Large Array (VLA), Submillimeter Common-User Bolometer Array (SCUBA) மற்றும் விண்வெளித் தொலைநோக்கியான Herschel Space Observatory என்பவற்றில் இருந்து எடுத்து அத்தரவுகளை Python ப்ரோக்ராமிங் மொழியைப் பயன்படுத்தி ஆய்வுசெய்தேன்.

மூலக்கூற்று மேகங்களைப் பற்றி ஆய்வு செய்ய உங்களை எது தூண்டியது?

எனக்கு வின்னியலில் இருக்கும் ஆர்வமான விடையங்களில் ஒன்று விண்மீன்கள், கோள்கள் எப்படி உருவாகின்றன என்பது பற்றியது. ஏற்கனவே மூலக்கூற்று மேகங்களில் இருந்துதான் விண்மீன்கள் பிறக்கின்றன என்று எமக்குத் தெரியும். எனவே அவை எப்படி பிறக்கின்றன,  என்று தெளிவாக அறிந்துகொள்ள நாம் மூலக்கூற்று மேகங்களை ஆய்வுசெய்யவேண்டி உள்ளது. இதுதான் என்னை மூலக்கூற்று மேகங்கள் பக்கம் இழுத்தது எனலாம். எனக்கு வேறு பல விண்ணியல் பகுதிகளிலும் ஆர்வம் உள்ளது.

Perseus மூலக்கூற்று மேகத்தைப் பற்றிய தரவுகளை சேகரிக்க Sub-millimeter Array (SMA) சென்றபோது.

எதிர்கால விண்ணியல் ஆய்வில் உங்கள் மூலக்கூற்று மேகம் பற்றிய உங்கள் ஆய்வு எப்படி செல்வாக்கு செலுத்தும் என்று கருதுகிறீர்கள்?

நீண்ட காலமாக விண்ணியலில் குறிப்பாக விண்மீன் உருவாக்கத்தில் எமக்கு குழப்பமாக இருப்பது, வெப்ப அழுத்தமும், வெப்பம் அல்லாத ஏனைய அழுத்தங்களும் எப்படி சரிசமமாக மூலக்கூற்று மேகங்களை பேணுகிறது என்பதுதான். எனது ஆய்வு, வெப்ப அழுத்தம் மிக முக்கிய காரணியாக குறிப்பாக சிறிய மூககூற்று மேகப்பகுதிகளில் உருவெடுக்கிறது என்று காட்டுகிறது.

எனது ஆய்வை அடிப்படையாகக் கொண்டு,  வெப்ப அழுத்தத்தைத் தவிர வேறு காரணிகள் எப்படி விண்மீன்கள் உருவாக்கத்திற்கு காரணமாக அமையலாம் என்று எதிர்காலத்தில் ஆய்வுகளை நடத்த முடியும். குறிப்பாக காந்தப்புலம் எப்படி மூலக்கூற்று சமநிலையை பேணுகிறது என்று. எனவே விண்மீன் உருவாக்க ஆய்வில் நீண்ட காலத்திற்கு பிரச்சினையாக இருக்கும் மூலக்கூற்று மேகங்களின் சமநிலையை பற்றிய தெளிவுக்கு எனது ஆய்வு அடிப்படையாக அமையும் என்று கருதுகிறேன்.


நன்றி ரிவாஜ். மிகுந்த வேலைப்பளுக்கு இடையிலும், நான் கேட்ட சில கேள்விகளுக்கு தெளிவாகவும், விரிவாகவும் பதில் தந்தமைக்கு நன்றி. வானியற்பியலில் உங்கள் ஆய்வு மேலும் தொடரட்டும்.

இந்தக் கேள்வி பதில்கள் வாசகராகிய உங்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன். உங்களுக்கும் வேறு ஏதாவது கேளிவிகள் இருந்தால், பின்னூட்டத்தில் அனுப்பவும்.