வால்வெள்ளிப் புயலினுள்ளே

பனிப்புயல் அல்லது தூசுப் புயல்கள் உருவாகும் பிரதேசத்தில் நீங்கள் வாழ்கின்றீர்களா? பெரும்பாலானவர்களுக்கு திடிரென வீசும் பனிப்புயல் நாளாந்த வாழ்கையை பாதிக்கும். பனியும் புயலும் போக்குவரத்தை பாதிக்கலாம், மின்சாரத் தொடர்பைத் துண்டிக்கலாம், வெப்பம் மற்றும் தொடர்பாடலை முடக்கலாம், சிலவேளைகளில் இது பல நாட்களுக்கும் தொடரலாம்.

2014 தொடக்கம் 2016 வரையான காலப்பகுதியில் ரோசெட்டா விண்கலம் 67P எனும் வால்வெள்ளியுடன் சேர்ந்து பயணித்தது.

அப்படியாக 67P க்கு அருகில் பயணித்த காலத்தில் ரோசெட்டா எடுத்த புகைப்படம் தான் இது. பனிப்புயல் போல இது தோன்றினாலும், நாம் உண்மையில் பார்ப்பது ரோசெட்டாவின் கமெராவின் முன்னால் கடந்து செல்லும் பிரபஞ்சத் தூசுகளையே.

வால்வெள்ளிகள் சிலவேளைகளில் “அழுக்கான பனிக்கட்டிகள்” எனவும் அழைக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் அவை பனியாலும், தூசுகளாலும் உருவாகியிருப்பதுதான். இவை சூரியனுக்கு அண்மையில் பயணிக்கும் போது வெப்பத்தால் பனி கரைந்து விண்வெளியில் ஆவியாகிறது, அவ்வேளையில் அந்த நீராவியுடன் தூசுகளும் சேர்ந்தே விண்வெளியில் சிதறுகின்றன. 67P வால்வெள்ளிக்கு மிக அண்மையில் ரோசெட்டா விண்கலம் பயணித்ததால் இப்படியான தூசுப் புயல்களை பல முறை அது சந்தித்தது.

விண்கலத்திற்கு இந்த தூசுப் புயல் ஆபத்து எனினும், பூமியில் இருக்கும் விஞ்ஞானிகளுக்கு இது மிகவும் சுவாரஸ்யமான விடையம். ரோசெட்டா தனது வாழ்வுக்காலத்தில் ஆயிரக்கணக்கான தூசுத் துணிக்கைகளை ஆய்வு செய்து பூமியில் இருக்கும் விஞ்ஞானிகளுக்கு தகவல்களை அனுப்பியது, இது சூரியத் தொகுதியின் கட்டமைப்பைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள மிகவும் உதவியது.

மேலதிக தகவல்

பெரும்பாலான விண்கலங்களைப் போலவே ரோசெட்டாவும் விண்மீன்களை மையமாக வைத்தே தனது பயணப் பாதையை கொண்டுசென்றது. ஆனால் அவ்வப்போது இந்தத் தூசுச் துணிக்கைகளை அது தவறாக விண்மீன் என எடுத்துக்கொண்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன!


இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதியை இங்கே வாசிக்கலாம்.