பூமியைப் போலவே கடல் கட்டமைப்பைக் கொண்ட சனியின் டைட்டான்

பூமியில் இருக்கும் சமுத்திரங்கள் நிலமட்டத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருக்கிறது. நாம் இந்த மட்டத்தை சராசரி கடல் மட்டம் என அழைக்கிறோம். நாசாவின் காசினி விண்கலத்தில் இருந்து கிடைக்கபெற்ற தரவுகளைக் கொண்டு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி, சனியின் துணைக் கோளான டைட்டானிலும் நமது பூமியைப் போலவே சராசரி கடல் மட்ட உயரத்திலேயே அங்கே இருக்கும் கடல்கள் காணப்படுகிறது.

சராசரி கடல் மட்டத்திற்கு எளிமையான ஒரு விளக்கத்தை விக்கிபீடியா தருகிறது – சராசரி கடல் மட்டம் (Mean sea level, MSL) என்பது பொருத்தமான நிலத்திலுள்ள நிலையான ஓர் ஆதார புள்ளியின் சார்பான கடலின் உயரமாகும். ஆனால் நிலத்திலுள்ள ஆதார புள்ளியை தெரிவுசெய்வது மிகச் சிக்கலான பணியாகும். மேலும் கடலின் சரியான உயரத்தை கண்டறிவது கடினமான செயலாகும். சராசரி கடல் மட்டம் என்பது கடல் அலை, காற்று போன்றவற்றால் பாதிக்கப்படாத நிலையாக நிற்கும் கடலின் உயரமாகும். கணிப்பின் போது நீண்ட நேரத்துக்கு எடுக்கக்படும் உயர அளவீடுகளின் சராசரி மதிப்பை, சராசரி கடல் மட்டமாக கொள்ளப்படும். கடலின் உயரம் நிலத்துக்கு சார்பாக அளவிடப்படுவதால் சராசரி கடல் மட்டமானது கடல் நீர் உயர வேறுபாட்டாலோ அல்லது நிலத்தின் ஏற்படும் உயரவேறுபாடு காரணமாகவோ மாற்றம் அடையலாம்.

ஆனாலும் சராசரி கடல் மட்டத்தை அளப்பது அவ்வளவு எளிதல்ல. அதில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் கடல் மட்டம் பற்றி அறிய, கட்டுரையின் கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

மீண்டும் டைட்டான் பற்றிய கட்டுரைக்கு வருவோம்.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 15 இல் நாசாவின் காசினி விண்கலம் 20 வருடங்களாக நடத்திய ஆய்வுகளை முடித்துக்கொண்டு சனியுடன் மோதி தனது வாழ்வுக்காலத்தை முடித்துக்கொண்டது. அவ்வளவு வருடங்களும் அது சேகரித்த தரவுகளைக் கொண்டு வரவிருக்கும் பல வருடங்களுக்கு புதிய ஆய்வுகளை விஞ்ஞானிகளால் நடத்தமுடியும். அதில் இருந்து வந்த தரவுகளின் மூலம் செய்யப்பட்ட ஆய்வு முடிவில் இருந்துதான் எமக்கு டைட்டானின் கடல் மட்டம் பற்றி தெரியவந்துள்ளது.

டைட்டானில் இருக்கும் இரண்டாவது பெரிய கடல் Ligeia Mare. இந்தக் கடல் எதேன், மீதேன் போன்ற ஹைட்ரோகார்பன் மூலக்கூறுகளால் ஆனது. படவுதவி: Credits: NASA/JPL-Caltech/ASI/Cornell

சூரியத் தொகுதியில் இருக்கும் மற்றைய உலகங்களை விட டைட்டான் சற்றே வித்தியாசமானது. பூமிக்கு அடுத்ததாக மேற்பரப்பில் திரவநிலையில் கடலைக் கொண்ட ஒரே உலகம் இது. என்ன, இந்தக் கடல் நீரால் ஆனது அல்ல. மாறாக ஹைட்ரோகார்பன் எனப்படும் மூலக்கூற்றால் அமைந்ததுதான் டைட்டானின் கடல்கள். பூமியில் ஹைட்ரோகார்பன் வாயுவாக காணப்படுகிறது. ஆனால் சூரியனில் இருந்து 1.5 பில்லியன் கிமீக்கு அப்பால் இருக்கும் டைட்டானில் வெப்பநிலை மிகக் குறைவு என்பதால் அங்கே ஹைட்ரோகார்பன் திரவநிலையில் மாபெரும் கடல்களாகவும் ஆறுகள்/குளங்கள் போலவும் காணப்படுகிறன. இன்னுமொரு குறிப்பிடவேண்டிய விடையம், இந்தக் கடல்கள் நீராலான பனிக்கட்டிக்கு மேலே காணப்படுகிறது.

டைட்டானின் ஈர்ப்புவிசைக்கு ஏற்றவாறு, டைட்டானில் இருக்கும் எல்லாக் கடல்களும் சராசரியாக ஒரே உயரத்தில் காணப்படுகிறன – பூமியைப் போலவே. அதேபோல டைட்டானில் காணப்படும் ஏரிகள் கடல் மட்டத்தைவிட உயரத்தில் காணப்படுகிறன – இதுவும் பூமியைப் போலவே. பேருவில் இருக்கும் திட்டிகாக்கா ஏரி கடல் மட்டத்தில் இருந்து 3812 மீட்டார் உயரத்தில் இருக்கிறது.

மேலும், டைட்டானில் இருக்கும் நீர்ப் பிரதேசங்கள் நிலத்திற்கு அடியிலும் பாய்கிறது. பூமியில் கற்களுக்கும், கிறவல்களுக்கும் இடையில் எப்படி நீர் உட்புகுந்து செல்லுமோ அதேபோல டைட்டானில் இருக்கும் ஏரிகள், கடல்கள் ஒன்றுடன் ஒன்று நிலத்திற்கு அடியிலும் தொடர்பைக் கொண்டிருப்பது எமக்கு தெளிவாகிறது.

கடல் மட்டம் என்றால் என்ன?

படத்தில்: டைட்டானில் இருக்கும் இரண்டாவது பெரிய கடல் Ligeia Mare. இந்தக் கடல் எதேன், மீதேன் போன்ற ஹைட்ரோகார்பன் மூலக்கூறுகளால் ஆனது. படவுதவி:  Credits: NASA/JPL-Caltech/ASI/Cornell