கடைசி வடக்கு வெள்ளைக் காண்டாமிருக ஆணும் இறந்தது

சில நாட்களுக்கு முன்னர் கென்னியாவில் உள்ள Ol Pejeta Conservancy எனும் இடத்தில் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்ட உலகின் கடைசி வடக்கு வெள்ளை காண்டாமிருக ஆணும் நீண்டநாட்கள் சுகயீனமுற்று இருந்து கடைசியாக உயிரிழந்தது. சூடான் நாட்டில் பிறந்ததால், சூடான் எனப் பெயரிடப்பட்ட காண்டாமிருகம் இறக்கும் போது அதற்கு வயது 45 – காண்டாமிருக வயதில் அண்ணளவாக 90 வருடங்கள்.

இப்போதைய நிலைமை என்னவென்றால் இந்த வடக்கு வெள்ளை காண்டாமிருக இனத்தில் எஞ்சி இருப்பது இரண்டே இரண்டு பெண் காண்டாமிருகங்கள் தான். அவை சூடானின் மகளும், மகளின் மகளும் ஆகும்.

இந்த வடக்கு வெள்ளைக் காண்டா மிருகங்களின் நிலைக்கு காரணம் மனிதன் எனும் உயிரினம் தான் என்று நினைக்கும் போது மனித இனத்தின் கொடூர பின்பம் தெளிவாகவே தெரிகிறது என்று சூடானை 2009 வரை பாதுகாப்பாக வைத்திருந்த Dvur Kralove Zoo வின் அதிகாரி குறிப்பிடுகிறார்.

யானைகளுக்கு அடுத்ததாக நிலத்தில் உயிர்வாழும் இரண்டாவது பெரிய பாலூட்டியான காண்டாமிருகங்களில் ஐந்து வகை உண்டு. இவை அனைத்துமே இன்று இனமழிந்து போகும் நிலையில் தான் இருக்கின்றன. குறிப்பாக வெள்ளைக் காண்டாமிருகங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று வடக்கு வெள்ளைக் காண்டாமிருகம், அடுத்தது தெற்கு வெள்ளைக் காண்டாமிருகம்.

தெற்கு வெள்ளைக் காண்டாமிருகங்கள் அண்ணளவாக 20,000 அளவில் காணப்பட்டாலும், 1960 களில் 2000 என்ற எண்ணிக்கையில் காணப்பட்ட வடக்கு வெள்ளைக் காண்டாமிருகங்கள் இன்று இரண்டே இரண்டு தான் உலகில் உயிர்வாழ்கின்றன – இரண்டுமே பெண்கள்.

இந்தக் காண்டாமிருகங்களின் அழிவுக்குக் காரணம் இவற்றின் கொம்புகளுக்காக இவை வேட்டையாடப்ப்டுவேதே ஆகும். பாரம்பரிய சீன மருத்துவத்திலும், யேமன் நாட்டில் சிறு கத்திகளுக்கான கைப்பிடி தயாரிக்கவுமே இந்தக் கொம்புகள் பயன்படுகிறன. அண்ணளவாக கொம்பின் ஒரு கிலோ எடை 50,000 அமெரிக்க டாலரைவிட அதிகமாக காணப்படுவது பல இழி பிறப்புக்கள் இந்த அறிய மிருகங்களை வேட்டையாட காரணமாகிறது.

2009 இல் செக் நாட்டில் இருந்த மிருக்கக்காட்சியத்தில் இருந்து நான்கு வடக்கு வெள்ளைக் காண்டாமிருகங்கள், இரண்டு ஆண், இரண்டு பெண் காண்டாமிருகங்கள் கென்னியாவில் உள்ள Ol Pejeta சரணாலையத்திற்கு கொண்டுவரப்பட்டன. இதற்கு முக்கிய காரணம் இவற்றின் பிறப்பிடம் போன்ற அமைப்பு உள்ள இடம் என்பதால் இங்கே இவை இனப்பெருக்கம் செய்ய உதவியாக இருக்கும் என்பதாலாகும்.

முழுநேர ஆயுதப் பாதுகாப்புடன் இந்தச் சரணாலையத்தில் இவை பாதுகாக்கப்படுகின்றன.

தற்போது இறந்த சூடானை தவிர மற்றைய ஆண் காண்டாமிருகம் 2014 இல் இயற்கையாக மரணமடைந்தது. சூடான் மூலம் பெண் காண்டாமிருகங்களை கருத்தரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அனைத்துமே தோல்வியில் முடிவுற்றது.

27 வயதான நஜின் மற்றும் 17 வயதான அதன் மகள் பாது ஆகியவற்றை தெற்கு வெள்ளைக் காண்டாமிருகங்களுடன் சேர்த்து கருத்தரிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது.

தற்போது இறந்துவிட்டா சூடானின் மரபணுக்கள் கடந்த திங்கள் அன்று எடுக்கப்பட்டு பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதனைப் பயன்படுத்தி சூடானுக்கு அடுத்த தலைமுறையை ஆய்வுகூடக் கருக்கட்டல் (In vitro fertilization) மூலம் உருவாக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த முறைக்கு பத்து மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் பூமியில் மனிதன் ஏனைய உயிர்ப்பல்வகைமையுடன் சேர்ந்துதான் வாழ்கிறான். காண்டாமிருகங்களின் அழிவுக்குக் காரணம் இயற்கை அல்ல. இது கூர்ப்பினால் நடந்த சதியல்ல. மனிதனின் செயல். இப்படியாக மனிதனால் உயிர்ப்பல்வகைமை அழிவது இயற்கைக்கு மட்டுமல்ல, மனித இனத்திற்கும் மிகவும் ஆபத்தானது என பல உயிரியலாளர்கள் கருதுகின்றனர்.

நன்றி: bbc, theguardian, Wikipedia