பூமியை நோக்கி பாயும் சீன விண்வெளி நிலையம் – Tiangong-1

இன்னும் ஒரு வார காலத்தினும் சீனாவின் முதலாவது விண்வெளி நிலையமான Taingong-1 பூமியில் விழுந்துவிடும் என்று ஐரோப்பிய விண்வெளி நிலையத்தைச் (ESA) சேர்ந்த சிதைவுச் சுற்றுகை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் மிகத் துல்லியமாக எப்போது, எங்கே இது விழும் என்று கணிப்பிட முடியவில்லை.

10.4 மீட்டார் நீளமான Tiangong-1 தற்போது மணிக்கு 17,000 கிமி வேகத்தில் பூமியைச் சுற்றிவருகிறது.

tiangong-1

ESA யின் கணிப்பின்படி மார்ச் 30 தொடக்கம் ஏப்ரல் 3 வரையான காலப்பகுதியில் பூமியின் வளிமண்டலத்தினுள் இந்த விண்வெளி நிலையம் நுழையும் – அக்காலகட்டத்திலேயே விண்வெளி நிலையத்தின் பெரும்பாலான பகுதிகள் எரிந்து சாம்பலாகிவிடும். ஆனாலும் 8.5 தொன் நிறை கொண்ட Tiangong-1 வளிமண்டலத்திலேயே பூரணமாக எரிந்துவிடாது. பூமியில் மேற்பரப்பில் எஞ்சிய சில பாகங்கள் விழுவதற்கும் சந்தர்பம் உண்டு.

 

esa_esoc_tiangong1_risk_map_jan2018-1024x375.png
வரைபடம் 42.8 பாகை வடக்கு தொடக்கம் 42.8 பாகை தெற்கு வரையான பிரதேசத்தையும் பச்சை நிறத்தில் குறித்துக் காட்டுகிறது. படவுதவி: ESA CC BY-SA IGO 3.0

 

Taingong-1 இன் சுற்றுகையை வைத்துப் பார்க்கும் போது, பூமியில் 42.8 பாகை வடக்கு தொடக்கம் 42.8 பாகை தெற்கு வரையான அகலாங்குப் பிரதேசத்தில் எங்கேயாவது இது விழலாம். ஆனாலும், இந்த இரண்டு எல்லைப் பகுதியில் ஏதாவது ஒரு எல்லையில் விழுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுகிறன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஆனாலும் மக்கள் இருக்கும் பிரதேசத்திலோ அல்லது மனிதர்களையோ தாக்குமாறு இது விழும் நிகழ்தகவு என்பது ஒருவருக்கு மின்னலடிக்கும் நிகழ்வைவிட பத்து மில்லியன் மடங்கு சிறியதே!

உண்மையில் ஒரு விண்வெளி நிலையம் இப்படியான ஒரு முடிவுக்கு வருவது என்பது யாரும் விரும்பும் செயலல்ல. குறிப்பாக சர்வதேச விண்வெளி நிலையத்தை எடுத்துக்கொண்டால், அதனது காலம் முடிந்ததும் அதனை பக்குவமாக சமுத்திரத்தினுள் விழ வைப்பதற்கு (மக்கள் வாழும் பிரதேசத்தினுள் விழுவதை தடுக்க) ஏற்புடைய திட்டங்களை பல வருடங்களுக்கு முன்னரே நாசா ஆரம்பித்து விட்டது.

சீனாவும் இதே போன்றதொரு திட்டத்தை வைத்திருந்தது. 2011 இல் அனுப்பப்பட்ட ராக்கெட் இதற்கு ஒரு அடிப்படையாகவும், 2020 இல் சீனா விண்ணுக்கு அனுப்பவுள்ள Tiangong-1 ஐவிட பெரிய விண்வெளி நிலையத்திற்கு முன்னோட்டமாகவும் இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த பல வருடங்களாக பூஸ்டர் ராக்கெட் மூலம் Tiangong-1 ஐ பூமியில் இருந்து 300 கிமி தொடக்கம் 400 கிமி வரையான உயரத்தில் சீன விண்வெளி ஆய்வகம் வைத்திருந்த போதிலும், 2016 இல் இந்த பூஸ்டர்களை கட்டுப்படுத்தும் முறை செயலிழக்கவே மேற்கொண்டு இந்த விண்வெளி நிலையத்தை குறித்த உயரத்தில் வைத்திருப்பதற்கான கட்டுப்பாட்டை சீன விண்வெளி ஆய்வகம் இழந்தது.

விண்வெளி நிலையத்தை திசைதிருப்பி செலுத்துவதற்கான கட்டுப்பாடு தற்போது இல்லை என்பதால், தனது விருப்பத்திற்கு ஏற்றாப்போல Tiangong-1 பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் – இதனால்த்தான் இது எங்கே எப்படி விழக்கூடும் என்பதை மிகத் துல்லியமான கூறமுடியவில்லை.

எப்படியோ, இது எங்கே உங்கள் தலையில் அல்லது வீட்டின் முற்றத்தில் விழுந்துவிடக்கூடும் என்று நீங்கள் அஞ்சத் தேவையில்லை. ஒருவேளை அப்படி உங்கள் வீட்டு முற்றத்தில் இதன் பாகங்கள் விழுந்தால் முறையாக அதிகாரிகளுக்கு அறிவித்துவிட்டு உங்கள் வேலையைப் பாருங்கள்.

தகவல்: arstechnica, esa rocket science blog