நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் நிறுவுகை மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறது

மனித இனம் உருவாக்கிய தொலைநோக்கிகளிலேயே தொழில்நுட்ப ரீதியாக மிகச்சிக்கலானதும் உயர் திறன் வாய்ந்ததுமான ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தற்போது அதி தீவிரமான சோதனைக் கட்டத்தில் உள்ளது. 2019 இல் விண்ணுக்கு ஏவப்பட இருந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் புறப்படுகை தற்போது மே, 2020 வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அகச்சிவப்பு கதிரில் இந்தப் பிரபஞ்சத்தை அவதானிக்ககூடியதாக உருவாக்கப்பட்டு வரும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஹபிள் விண்வெளித் தொலைநோக்கிக்கு அடுத்த தலைமுறையாக விளங்கும். இதன் மூலம் பிரபஞ்சம் உருவாகிய காலகட்டத்தில் இருந்த சூழலை எம்மால் அவதானிக்ககூடியதாக இருப்பதுடன், புறவிண்மீன் கோள்களையும், நமது சூரியத் தொகுதியில் மிகத் தொலைவில் உள்ள பொருட்களையும் ஹபிள் தொலைநோக்கியை விட தெளிவாக அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் ஆடிகள் பரிசோதிக்கப்படுகிறது. படம்: Desiree Stover/NASA

எப்படியிருப்பினும், இதனது சிக்கலான கட்டமைப்பும், பூமியில் இருந்து இது இயங்கப்போகும் தொலைவும் ஹபிள் தொலைநோக்கி போல எம்மால் இதனை பழுதுபார்க்க முடியாது என்பதால் மிகத் தீவிரமான சோதனைகளுக்கு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உட்படுத்தப்படுவதால் ஏற்கனவே பலமுறை இதன் புறப்படுகை பலமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விண்ணியலில் ஆர்வமாக இருந்த எல்லோருக்கும், மீண்டும் ஒருமுறை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் புறப்படுகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது சோகமான செய்தியாகவே இருக்கிறது.

ஹபிள் ஆடியுடன் ஒப்பிடும் போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் ஆடியின் அளவு!

ஹபிள் தொலைநோக்கியின் 2.4 மீட்டார் ஆடியுடன் ஒப்பிடும் போது, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அறுகோண வடிவில் உள்ள 18 துண்டுகளை ஒன்றிணைத்து மொத்தமாக 6.5 மீட்டார் விட்டம் கொண்ட ஆடியைக் கொண்டிருக்கும். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கின் தாமதத்திற்கு இதுவும் ஒரு காரணம்.

ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் (ESA) ஏரியன் 5 எனும் ராக்கெட்டில் தான் ஜேம்ஸ் வெப் விண்ணுக்கு ஏவப்பட இருக்கிறது. தொலைநோக்கியின் அளவு பெரியது என்பதால் அதனை அழகாக மடக்கி ஏரியன் ராக்கெட்டில் வைக்கவேண்டும், மேலும் அது விண்ணுக்கு ஏவப்பட்டவுடன், ராக்கெட்டில் இருந்து வெளியே வந்து சரியான முறையில் விரியவேண்டும். இது சரியாக இடம்பெறாத பட்சத்தில் தற்போதுவரை செலவழித்த 10 பில்லியன் அமெரிக்க டாலர்களும் அத்தனை வருட உழைப்பும் வீணாய்ப்போகும்!

ஏற்கனவே பல்வேறுபட்ட சோதனைகளை ஜேம்ஸ் வெப் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. பூமியில் இருந்து அண்ணளவாக 1.6 மில்லியன் கிமீ தொலைவில் இது இருக்கப்போவதால் மிகவும் உன்னிப்பாக இந்தச் சோதனைகள் இடம்பெறவேண்டும்.

தாமதம் என்பது எமது ஊக்கத்தை கெடுப்பதாக இருந்தாலும், நிறைய சோதனைகள் என்பது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டு இயங்கும் நிகழ்தகவைக் கூட்டும் என்பதில் சந்தேகமில்லை.