வாசிப்பு முக்கியம்

எழுதியது: சிறி சரவணா

நாம் நிச்சயமாக இளைய சமுதாயத்திற்கு வாசிப்பின் மகத்துவத்தை கற்றுக் கொடுக்கவேண்டும். ஒரு மனிதனின் வாழ்க்கைப் பாதையை செதுக்குவதில் வாசிப்பு என்பது நிச்சயம் ஒரு மிக முக்கியமான பங்கு வகிக்கும் என்பது எனது கருத்து. வாசிப்பு மட்டும் தான் அப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் என்று இங்கே நன் சொல்லவரவில்லை, மாறாக, வாசிப்பு ஒரு குறிப்பிட்ட அளவு செல்வாக்கை ஒருவரது வாழ்வில் செலுத்தியே தீரும்.

வாழ்க்கை என்றால் என்ன? ஒரு சவாலான கேள்விதான்! அதற்கு பதிலளிப்பது அல்ல எனது நோக்கம்; ஏன் இந்த கேள்வி? வருகிறேன் விசயத்திற்கு! வாழ்க்கை என்ற ஒன்றை நாம் வாழ்வதில்லை. “நாம் வாழ்கையை வாழ்கிறோம்” என்று சொல்வதில் எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. அப்படிச் சொல்லிவிட்டால், வாழ்க்கை என்பது நம்மை விட்டு தனிப்பட்ட வஸ்து ஆகிவிடுகிறது அல்லவா? நாம் ரயிலில் பயணிப்பது போல – ரயிலும் நாமும் ஒன்றல்லவே. ஆக நான் வாழ்வை அப்படி பார்க்கவில்லை.

எனது வாழக்கை ‘நான்’ என்பதில் இருந்தது தான் தோன்றுகிறது. நான் இந்த உலகை, பிரபஞ்சத்தை, ரோட்டில் போகும் ஆட்டை, மாட்டை, அம்மாவை அப்பாவை, மனைவியை, காதலியை, அன்றாட நிகழ்வுகளை எவ்வாறு அனுகுகிறேன் என்பதில் இருந்து என் வாழ்க்கை பிறக்கிறது. வேறுவிதமாக சொல்லவேண்டும் என்றால், நான் பெற்ற அனுபவமே என் வாழ்க்கையாகிறது. நான் பெற்ற அனுபவமே என்னை ‘நான்’ ஆக்குகிறது. அதேபோல்தான், சமூகத்தில் நாம் பெற்ற அனுபவமே, எம்மை ‘நாம்’ ஆக்குகிறது. ஆக, அனுபவம் என்பது மிக முக்கியம். இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால், அனுபவமே, நம் மனமாகிறது.

நம் மனம், எமக்கு சொல்லும் இந்த ‘உள்ளுணர்வுகள்’ எல்லாம் எங்கிருந்து வந்தது? நெருப்பைப் பற்றி கண்டோ, அறிந்தோ, கேட்டோ இல்லாதவனுக்கு, தூரத்தில் இருந்து பார்க்கும் போது மிக அழகாக பிரகாசமாக துள்ளி எழும்பி அபிநயம் பிடிக்கும் அந்த நெருப்பின் சுவாலைகள், தோலைப் பொசுக்கிவிடும் என்று தெரிந்திருக்குமா? சிந்தித்துப் பாருங்கள். வசிப்பதே சிந்திப்பதற்கு தானே! அப்படி இல்லையா?

ஏன் இப்படி தேவையே இல்லாமல், வாசிப்புக்கும் வாழ்க்கைக்கும் முடிச்சுப் போடுகிறேன் என்று சிந்திக்கின்றீர்களா? காரணம் இல்லாமல் இல்லை. மேலே கூறிய விடயங்கள் மூலம், நான் சொல்லவந்தது, வாழ்க்கை என்பது அனுபவம்! அப்படியென்றால் அந்த அனுபவங்களை எப்படி நாம் பெறுகிறோம்?

தினம், தினம் நாம் எவ்வளவு அனுபவங்களை பெறுகிறோம் என்று சிந்தித்துப் பாருங்கள். காலையில் எழுந்ததில் இருந்து, தூங்கும் வரை எவ்வளவு விடயங்கள், எத்தனை சந்திப்புக்கள், எத்தனை உரையாடல்கள், எத்தனை விடயங்களை பார்க்கிறோம். எல்லாமே ஏதோவொரு விடயத்தில் எம்மீது ஆதிக்கம் செலுத்தத்தான் செய்கிறது. சிலவிடயங்கள் ஆழ மனதில் நீங்கள் அறிந்தே பதிகின்றன, சிலவிடயங்கள் நீங்கள் அறியாமலே உங்கள் ஆள் மனதில் பதிகின்றன. அதற்கு நாம் நம்மை சொல்லிக் குற்றமில்லை, இயற்கை விதிப்படி மூளை வேலைசெய்கிறது.

சரி, இதற்கும் வாசிப்பிற்கும் என்னையா சம்பந்தம்?

நாம் தகவல்களை உள்வாங்கும் விதத்தில் வாசிப்பும் ஒன்று. ஒருவர் கதைப்பதை கேட்பது மூலமோ, அல்லது டிவி, திரை போன்றவற்றில் பார்ப்பதன் மூலமும் நாம் நிறைய விடயங்களை உள்வாங்கிக் கொள்ளமுடியும் என்றாலும், வாசிப்புக்கு தனிப்பட்ட சில குணதிசயங்கள் உண்டு. அவை பலநேரங்களில் நமது அறிவு விருத்திக்கும், நமது உணர்வுகளை டியூன் பண்ணவும் உதவும்.

ஒருவர் பேசும் போது நாம் கேட்டுக்கொண்டு இருக்கலாம், அல்லது அவரோடு உரையாடலிலும் ஈடுபடலாம். இப்படி நாம் நேரடியாக பேசும் போது, நாம் அவர் முக அசைவில் இருந்து, அவரது தொனி வரை நமது கவனத்தை வைத்திருப்போம். சிலவேளைகளில் உரையாடலில் ஈடுபடும் போது, உரையாடலை தொடர்வதிலோ, அல்லது பதிலுக்கு பதில் சொல்வதில் இருக்கும் ஆர்வம், நடந்து முடிந்த உரையாடலின் சாரத்தினை உள்வாங்க தவறிவிடக் கூடும்.

வாசிப்பதில் இருக்கும் மிகப்பெரிய அனுகூலமே, அதில்வரும் எல்லாவற்றையும் நமது மூளைக்குள்ளே நாம் தான் பிம்பங்களாக உருவாக்கிப் பார்க்கவேண்டும். அந்த எழுத்துகளில் உள்ள உணர்சிகள், அதன் அமைப்பு என சகலத்தையும் நாமே நம் மனக்கண்ணில் திரையிடவேண்டும்! இது மூளைக்கு மிகப்பெரிய சவாலாக அமையும். இதுவே சிலருக்கு சிரமமாகவும் இருக்கலாம். ஆனால் இந்த பயிற்சி மூலம் கிடைக்ககூடிய நன்மைகள் பல.

செஸ் விளையாடுவது போல என்று நினைத்துக்கொள்ளுங்கள். சாதரணமாக செஸ் விளையாடுபவர்கள், அடுத்த காய் நகர்த்தவேண்டிய முறை பற்றி சிந்திப்பார். அனால் திறம்பட்ட கிரான்ட்மாஸ்டர், அடுத்து வரப்போகும் இருபது காய் நகர்த்தலையும் தனது மனக்கணக்கில் போட்டுப் பார்த்துவிடுவார். ஆனால் அதுவொன்றும் இலகு அல்லவே, இதனால் தான் புதியவர்களுக்கு அது கடினமாக இருக்கிறது, ஆனால் போகப் போக பரீட்சியமாகிறது.

இதுபோலதான் இந்த வாசிப்பும், இது மூளைக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள் பல, பார்க்கும் போதோ, கேட்கும் போதோ, கதைக்கும் போதோ, நமக்கு ஏற்படும் சவால்களைவிட வசிக்கும் போது இன்னும் மேலதிகமாக நாம் சிந்திக்கவேண்டி உள்ளது. அந்த எழுத்துக்களில் உள்ளவற்றை மனமென்னும் திரையில் உயிர்கொடுத்து எழுப்பாவிடில் அந்த வாசிப்பில் அர்த்தம் இல்லை. நான் இங்கு சொல்லிக்கொண்டிருப்பது அர்த்தமுள்ள வாசிப்பைப் பற்றி.

இங்கு, நான் வாசிப்பைப் பற்றி பேசுவதால் வாசிப்பு மட்டும் தான் முக்கியம் எனவும், கேட்பதோ, பார்பதோ, அல்லது உரையாடுவதோ முக்கியமில்லை என்ற கருத்தை நான் ஒருபோது முன்வைக்கவில்லை. வாசிப்பில் எவ்வளவு நன்மைகள் உள்ளதோ அதேபோல மற்றைய அனைத்திலும் நன்மைகள் உண்டு. நான் இங்கு வாசிப்பைப் பற்றி எழுத காரணம், வாசிப்பு என்பது குறைந்துகொண்டு போகிறதோ என்ற யோசனையில் தான். குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் வாசிப்பின் வீதம் குறைவடைந்து வருகிறது என்ற கவலையில்.

நாம் இன்று தொழில்நுட்பவளர்ச்சியின் விளிம்பில் நிற்கிறோம். ஒவ்வொருவர் கையிலும் ஸ்மார்போன். ஒவ்வொருவரும் சோசியல் மீடியா என்பதில் மூழ்கிக் கிடக்கிறோம். அன்றன்றைய விடயங்களை அப்போதே பார்த்து, அப்போதே பொங்கி, அப்போதே ஷேர் பண்ணி அப்போதே மறந்துவிட்டு போய்க்கொண்டிருகிறோமோ என்ற எண்ணம் மேலோங்குகிறது. எத்தனை பேர் ஒரு விடயத்தை ஆழ அமர அலசி முடிவெடுகின்றனர்? எல்லோருக்கும் அவசரம், ஆகவே அவர்கள் சார்ந்துள்ள ஒரு குழு முடிவெடுத்துவிட்டால், அதில் ஒட்டிக்கொள்கிறார்கள். அனால் அந்த முடிவுகளைப் பற்றி சிந்திக்கிறார்களா?

வாசிப்பு இந்த பிரச்சினைகளை எதிகொள்ள நல்லதொரு மனநிலையை ஏற்படுத்தும் என்பது எனது எண்ணம், அவ்வளவே. வாசிப்பு என்பது வெறும் எழுத்துக்கூட்டி சொற்களை வாசித்துவிட்டு போவதில்லை. வாசிப்பதில் இருக்கும் இன்னுமொரு மிகப்பெரிய நன்மை. அதை எழுதியவரிடம் உடனடியாக கேள்விகளை கேட்க்க முடியாது. உடனடியாக ஒரு உரையாடலை தொடங்க முடியாது ஆக எழுதியிருப்பதை ஒன்றுக்கு பத்துவிதமாக யோசிக்க, அதனை அலசி ஆராய நமக்கு நேரம் கிடைக்கும். ஆழமான யோசனையில் கருத்துக்கள் பிறக்கும்!

இப்படியாக வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதால், வாழ்க்கை என்ற அந்த அனுபவத்தில், பலவிடயங்களை சமாளிக்க நமக்கு ஒரு ஆற்றல் உருவாகும். வாசிப்பதால் மட்டும்தான் அது உருவாகவேண்டும் என்று நான் சொல்லவில்லை. வேறுவழியில் உருவாக வாய்ப்புக்கிடைக்காவிடில், நிச்சயம் வாசிப்பு கைகொடுக்கும். அது உங்கள் மனக்குதிரையை அல்லவா தட்டிவிடுகிறது!

இன்று தொழில்நுட்பம் வளர்ந்தவேலையில் கட்டாயம் அச்சுப் புத்தகங்களைத்தான் வசிக்கவேண்டும் என்றில்லை, நிறைய மின்வாசிப்பான்கள், பெரிய திரை போன்கள் போன்றவை கிடைகின்றனவே. நிறைய புத்தகங்கள் தற்போது மின்புத்தகங்களாக கிடைகின்றன. நான் கூட இப்போது வாசிப்பவை அனைத்தும் மின்புத்தகங்கள்தான். முக்கியமான விடயம் – வாசிக்கவேண்டும், குறைந்தது ஒருநாளைக்கு 10 பக்கங்களையாவது வாசித்துவிடுங்கள், வாசிப்பதோடு நிறுத்திவிடாமல், அதை கிரகித்துக்கொள்ளவும் வேண்டும்.

உங்கள் வீடுகளில் சிறுவர்கள் இருந்தால், அவர்களுக்கும் வாசிக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுங்கள். நிச்சயம் அவர்களை அரைமணி நேரமாவது வாசிக்க வையுங்கள். வாசிப்பு நிச்சயம் அவர்களது எதிர்கால வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நானும் சிறுவயதில் வசிக்க தொடங்கியவன்தான், என்னால் கூறமுடியும் எனது வாழ்வில் இது மிகப்பெரிய மாற்றத்தை உண்டுபண்ணியுள்ளது என்று. இப்போது சிறிதுகாலமாக தான் எழுதுகிறேன். எழுத்தை, வாசிப்பின் அடுத்த அத்தியாயம் என்று வேண்டுமென்றால் வைத்துக்கொள்ளலாம்.

முக்கியமான விடயம் – முதலில் வாசிக்கத் தொடங்கவேண்டும். வாசித்ததை கிரகித்துக்கொள்ளவேண்டும்.