முடிவில்லாப் பயணம் 1 – 8

முன் குறிப்பு: அறிவியல் புனைக்கதை எழுதுவதென்பது எனக்கு  ஒரு புதிய முயற்சி. வாசித்து விட்டு எப்படி இருக்கிறது என்று உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். “முடிவில்லாப் பயணம்” ஒரு அறிவியல், அமானுஷம் கலந்து செல்லும் ஒரு கதை. முதல் 8 பாகங்கள் இந்த பதிவில் உண்டு, மற்றவை அடுத்த பதிவில். – சரவணா


“கல்தோன்றி மண் தோன்றாக காலத்தே
முன் தோன்றிய மூத்த மொழி”

பகுதி 1 

பெப்ரவரி 14, 1997

“நீ ஏண்டா அவளோட ஒரே சண்டை பிடிக்கிறே? கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போக வேண்டியது தானே” குமார், கணேஷை பார்த்தவரே நின்றுகொண்டிருந்தான்.

“நீயுமாடா? உனக்கு தெரியாதா மதுவை பற்றி, சும்மா அவளை சீண்டிப் பார்க்கிறதுதானே..” என்று வடிவேலு காமடி போல பல்லைக் காட்டி சிரித்தான் கணேஷ்.

“ஒரு நாளைக்கு காண்டாகப் போறா, அன்னைக்கு இருக்குடீ உனக்கு…” என்று சொல்லியவாறே அந்தப் பாறைகளுக்கு இடையில் இருந்த அந்த ஆறு இஞ்சுக்கு ஆறு இன்ச் சதுரவடிவான கல்லை சற்றே உள்ளுக்கு தள்ளினான் குமார். அதுவும் லாவகமாக ஒரு இன்ச் உள்ளே சென்றதும், புஸ் என சிறிய சத்ததுடன் காற்றோடு கலந்த தூசும் அந்த கல் இடுக்கில் இருந்து வெளியே வந்தது!

கணேஷின் கண் விரிய, முகத்தில் ஒரு ஆனந்தப் புன்னகை.. குமாருக்கு சொல்லவே வேண்டாம், “டேய், திறப்புக் கல்லை கண்டுபிடிச்சிடோம்!!” என்றான் குதுகலமாக!!

அதுசரி யாரிந்த குமார், கணேஷ்? அதென்ன கல்? என்ன செய்துகொண்டிருகிரார்கள்? அதை பார்க்க நாம் ஒரு சில மாதங்கள் வரை முன்னோக்கி செல்லவேண்டும். செல்வோமா?

பகுதி 2

குமார் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் புதைபொருள் ஆராய்ச்சிப் பிரிவில் நான்காம் ஆண்டு PhD செய்துகொண்டிருக்கும் ஆய்வாளன். கணேஷும் அங்கேயே அதே பிரிவில் PhD செய்துகொண்டிருக்கும் இரண்டாம் வருட மாணவன். நீங்கள் எதிர்பார்த்தது போலவே மதுமிதாவும் இந்த பல்கலைகழகத்தில் குறியீட்டுத் துறையில் PhD படிக்கும் மூன்றாம் வருட மாணவி. கணேஷும் மதுமிதாவும் விசித்திரக் காதலர்கள், அப்படின்னா ரெண்டு பேரும் எலியும் பூனையும் மாதிரி எப்பவும் மாறி மாறி வம்பிழுத்துக் கொண்டே இருப்பர். இரண்டு பெயரையும் பார்த்து தலையில் அடித்துக் கொள்வதே குமாரின் வழக்கம். என்னதான் சண்டை பிடித்தாலும் அவளை இவனும், இவனை அவளும் விட்டுக் கொடுத்ததே இல்லை. நம்மட கதைக்கு இப்ப இவங்களோட காதல் முக்கியமில்லை, விசயத்துக்கு வருவோம்.

அதுசரி, இன்னொரு முக்கியமான விடயம், இந்தக் கதையா சொல்லிக்கொண்டிருக்கும் நான் யார் என்று உங்களுக்கு தோணவே இல்லையா? சொல்கிறேன் சொல்கிறேன். நேரம் வரும் பொது சொல்கிறேன். இப்போது கதைக்கு வருவோம்.

குமார், கணேஷ், மதுமிதா இந்த மூவருக்கும் ஒரு முக்கிய தொடர்பு, தமிழில் இருந்த காதல். அமெரிக்காவிலே பிறந்து வளர்ந்தாலும், சிறு வயதில் இருந்து படித்த தமிழ், அதன் மேல் இருந்த பற்றாக மாறி, இன்று இந்த மூவரையும் ஒன்று சேர்த்ததே தமிழ் தான்.

குமார் தமிழின் தொன்மையை பற்றி ஆய்வு செய்யவே இந்தப் பிரிவில் சேர்ந்தான், பின்பு வந்த கணேஷுக்கும் இவனது ஆய்வுகள் பிடித்துவிடவே குமாருடன் ஒட்டிக்கொண்டான். இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டனர். இந்தியா, தாய்லாந்து, மியன்மார் என்று குமார் புதைபொருள் ஆய்விற்கு சென்றபோதெல்லாம் கணேசையும் அழைத்துச் சென்றுவிடுவான்.

குமார் நின்று நிதானித்து செயல்படும் இயல்புடையவன் என்றால், கணேஷ், குறிகிய நேரத்தல் சடார் என சரியான முடிவை எடுப்பான். அது மட்டுமில்லாது மிக விரைவாக கண்முன் இருக்கும் புராதன புதிர்களுக்கு விடையை ஊகித்துவிடுவன். இவனது இந்த ஆற்றல் குமாருக்கு மிக மிக வசதியாக இருந்தது என்றே சொல்லவேண்டும்.

பகுதி 3

பெப்ரவரி 12, 1997

குமாரும், கணேஷும் பொலிவியாவில் உள்ள பூமா பூங்கு என்னும் இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய பெப்ரவரி 9ஆம் திகதியே பொலிவியா வந்துவிட்டனர். மேற்கு பொலிவியாவில் இருக்கும் டிவாணாக்கு என்னும் இடத்தில் உள்ள கொலம்பிய காலத்திற்கு முற்பட்ட கோவில் தொகுதியே இந்த பூமா பூங்கு என்னும் இடம் கிமு 600 களில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.

கோயிலைப் பற்றி ஆராய்ச்சி செய்ய இங்கு குமாரும், கணேஷும் வரவில்லை. அவர்கள் வந்தது கோவிலை கட்டுவித்தவர்களைப் பற்றி கண்டறிய.

“தேடிவந்த அறையை நம் கண்டுபிடித்துவிட்டால், மிகப்பெரிய உண்மையில் நாம் இந்த உலகதிற்கு சொல்லிவிடலாம் கணேஷ்..”

கணேஷ், “நீங்கள் சொல்வது சரிதான், இறுதியில் தமிழ் வென்றுவிடும்” என சிரிக்க, குமாருக்கும் மனதினுள் சந்தோசமாகவே இருந்தது. அப்படி ஒன்று நடந்துவிட்டால், எவ்வளவு பெரிய உண்மைகள் இந்த உலகம் அறியும், அதுமட்டுமலாது, பல கேள்விகளுக்கு விடை கிடைத்துவிடுமே என மனதினுள் நினைத்தவாறே, கையில் இருந்த கடதாசிக் குறிப்பையும், அங்கு குறுக்கும் நெடுக்குமாக அழகாக செதுக்கப்பட்ட கற்களையும் மாறி மாறி பார்த்தவரே நடந்து கொண்டிருந்தான்.

கணேஷ், “பூமா.. பூங்கு.. கிமு 600 களில் இவ்வளவு துல்லியமாக கற்களை வெட்டமுடியுமா, இது மனிதர்கள் மட்டுமே செய்த வேலை இல்லை என்பது பாத்தவுடனே புரிகிறது”

குமார், “இன்று இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கூட வெட்ட முடியாது என்று கருங்கல் சிற்பிகள் அடித்துக் கூறுகிறார்களே!”

“உண்மைதான், படங்களில் பார்க்கும் போதே தெளிவாக தெரிந்தது, இன்று நேரே பார்க்கும் போது, தெள்ளத்தெளிவாக விளங்கி விட்டது” என்று சொல்லியவாறே வியப்பில் சதுரமாக வெட்டப்பட்ட கற்களின் ஓரத்தை கைகளால் தடவி அதன் துல்லியத் தன்மையை சோதித்தவாறே நடந்துகொண்டிருந்தான் கணேஷ்.

இப்படியே எவளவு நேரம் நின்றுகொண்டிருந்தான் என்று தெரியாது, அனால் தூரத்தில் “கணேஷ்.. கணேஷ், இங்க வாடா” என்று குமாரின் குரல் கேட்டது.

“வாறன் வாறன்” என்று சொல்லிவிட்டு, கொஞ்சம் வேகமாகவே குமாரின் குரல் வந்த திசையை நோக்கி நடந்தான்.

பகுதி 4

டிசம்பர் 21, 1996

“டேய் நான்போட்ட கணக்கு சரி, நமக்கு அங்கோர்வாட்டில் கிடைத்த இந்த இந்த கல்வெட்டுப் பிரதியில் இருக்கும் தகவல்கள் உறுதிப் படுத்தப்பட்டால், தமிழ் நிச்சயமாக பூமியில் உருவாகவில்லை என்பதை நிருபித்து விடலாம்” என்று கண்கள் விரிய சொன்னான் குமார்.

“பேஸ் பேஸ்” என கண்களை உருட்டி தலையாட்டிய கணேஷ், தொடர்ந்து “ஆனாலும், கிடைத்த அந்த ஏட்டில் இருக்கும் விடயத்தை ஆய்வுசெய்தால் தான் நமக்கு பூரணமும் விளங்கும்”

“என் செல்லக் குட்டி, உனக்கே இவ்வளவு தோணுதுன்னா எனக்கு தெரியாதா? போடா போய் மது எங்க இருக்கான்னு பார்த்திட்டு அவ ப்ரீயா இருந்தா ஒரு மூணு மணிபோல காண்டீனுக்கு வரச் சொல்லு… நானும் வாறன்”

“ஓலையை எடுக்க மட்டும் நாங்க வேணுமாம்” என்று முனுமுனுத்தவன், குமாரை பார்த்து “சரி பாஸ்” என ஈ என்று இளித்துவிட்டு சென்றான்.

பதினோரு ஓலைகளில் எழுதப்பட்டு கட்டப்பட்ட இந்த ஏடு, அங்கோர்வாட்டில் சென்ற மாதம் குமாரும், கணேஷும் அகழ்வாராய்ச்சி செய்யும் போது கிடைத்தது. கடந்த இருவருடங்களில் குமாரும், கணேஷும் நிறையவே தடயங்களை சேர்த்துவிட்டனர். அவர்களது ஆராய்ச்சி…

தமிழ் எங்கே தோன்றியது? என்பது தான்.

தமிழிற்கான தடயங்கள், ஆசியாவையும் தாண்டி உலகம் முழுதும் இருப்பதும், இவர்கள் ஆய்வுசெய்த எல்லா இடங்களிலும், தமிழ் மொழியின் குறிப்பு இருப்பது, இவர்களை நிறையவே குழப்பியது. ஆசியாவில் இருந்தால் கூடி ஒத்துக்கொள்ளலாம், ஆனால் கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே எப்படி அமெரிக்க கண்டத்தில்?

விடையற்ற கேள்வி, இருந்தும், இந்த கடைசியாய் கிடைத்த ஏட்டில் நிச்சயம் மிகப்பெரிய துப்பு இருக்கும் என்று குமார் நம்பினான். இரண்டு வருடங்களாக அவர்கள் செய்த ஆய்வில், இந்த ஏட்டில் தான் “ஆரம்பத்தின் வாசல்கதவு” என்ற ஒரு இடத்தின் குறிப்பு இருப்பதாகவும், அங்கு சென்றால் அந்த வாசல்கதவை திறந்து உண்மையை அறியலாம் என்றும் குறிப்புகள் இருந்தன.

“ஆரம்பத்தின் வாசல் கதவு, ஆரம்பத்தின் வாசல் கதவு” என்று மீண்டும் மீண்டும் எண்ணியவாறே ஓலைச்சுவடியை பக்கம் பக்கமாக திருப்பிக் கொண்டிருந்தவனது கண்ணில் பட்டுவிட்டது அது!

விதிக்கு விதி என்று தானாக உண்டு
மதிக்கு பசிபோல என்று எண்ணிவிடாதே
ஆரம்பத்தின் ஆரம்பம் அது சூக்குமத்தில் உண்டு
சூக்குமம் அறிவார் சுமை களைவாரே

விதி அவன் கண்ணில் அதைக் காட்டிவிட்டது என்று சொல்லலாம், ஆனால் விதி? நீங்கள் விதியை நம்புகிறீர்களா? வாசகரே? கவலை வேண்டாம், நான் தான், நான் தான் உங்களுக்கு கதை சொல்லிக்கொண்டிருப்பவன், கதை சொல்லும் போது இடையில் கதைத்தது என் குற்றம்தான், என்னைப் பற்றி பிறகு விரிவாக சொல்கிறேன். இப்போது மீண்டும் கதைக்கு!

பகுதி 5

பெப்ரவரி 14, 1997

“ஒரு மாதிரியாக இந்த அறைக்குள் நுழைந்துவிட்டோம்.. இதற்குள் தான் அந்த கதவிற்கான திறக்கும் பொறி இருக்கவேண்டும்” என்றான் குமார்.

குமாரும், கணேஷும் இப்போது இருப்பது நிலமட்டத்தில் இருந்து 30 மீட்டர்கள் ஆழத்தில் உள்ள ஒரு கருங்கல்லால் கட்டப்பட்ட குகை போன்ற ஒரு அறையில். கணேஷ் ஒருவாறாக இந்த அறை இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டான். அனால் அங்கே தான் இந்த வாசல் கதவு இருக்கும் என்று சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அந்த கல்லறையில் வேறு எதுவுமே இல்லை. இந்த அரை வெறுமையாக இருந்ததே முதலில் குமாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் இத்தனை வருட பூமா பூங்கு தொல்பொருள் அகழ்வில் எவருமே இந்த அறையை காணவில்லை. இப்போதுதான் முத்தம் முதலில், ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு பிறகு முதன் முதலாக இரு மனிதர்கள் நுழைகின்றனர்.

மல்மட்ட கோவில் கட்டிடத்தில் இருந்த ஒரு சிறிய துவாரம் மூலம் உள்ளே இறங்க அங்கே வழி இருந்தது. அதனுள் இறங்கி, ஒரு இருபது அடி தவண்டு செல்ல, அங்கே இன்னுமொரு சிறிய துவாரம் இருப்பது தெரிந்தது, அதே நேரம் அங்கு வெளிச்சமும் இருந்தது. அந்த துவாரத்தை நோக்கி செல்ல, அங்கே ஒரு பெரிய அறை இருப்பது தெரிந்தது, இருவரும் அந்த துவாரத்தின் மூலம் அந்த அறையை அடைந்தனர்.

வெளியே வந்து முதுகைப்பிடித்து வளைந்து எழுந்தான் கணேஷ். கணேஷுக்கு முதல் அந்த துவாரத்தில் இருந்து வெளிவந்து அந்த அறையின் கட்டமைப்பில் பிரமித்துப் போய் நின்ற குமாரால் எதுவும் பேசமுடியவில்லை.

கிட்டத்தட்ட ஒரு கூடம் போலவே இருந்த அந்த அறையில் மேட்பகுதில் வெளியில் இருந்து ஒளி வருவதற்கான அமைப்புக்கள் இருந்தன, சிறிய சிறிய ஒரு இன்ச் துவாரங்கள், ஒவ்வொரு துவாரதிற்கும் முன்னால், பளபளப்பான கல் ஒன்றும் இருந்தது, அது அந்த சிறிய துளை மூலம் வந்த ஒளியை பலமடங்கு பிரகாசமாக்க அந்த அறையே ஒளியில் நனைத்தது.

கணேஷ், “குமார் அங்கே பாரு, ஒரு கதவு தெரிகிறது” என்று இவர்கள் வந்திறங்கிய துவாரம் இருந்த மூலைக்கு எதிர் திசையில் இருந்த கற்சுவரில் கதவுபோல இருந்த அமைப்பை சுட்டிக்காட்டவும், அவனைப் பார்த்து சிரித்த குமார், “ஆரம்பத்தின் வாசல் கதவு” என்று சொல்லிக்கொண்டே அந்த கதவை நோக்கி விரைந்தான்.

பகுதி 6

டிசம்பர் 21, 1996

“என்னைக் காணவில்லையே நேற்றோடு…” என்று தனக்குள்ளே பாடியவாறே குறியியல் பிரிவில் உள்ள வகுபறையின் கதவடியில் நின்று வகுப்புக்குள் எட்டிப் பார்த்தவனது கண்கள், மதுவை தேடியது. கரும்பலகையில் வகுப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தவன், வாசிகசாலைக்கு சென்றான்.

அவன் எதிர்பார்த்தது போலவே மது அங்கே ஒதுக்குப் புறமான மேசையில் இரண்டு பெரிய புத்தகங்களை வைத்துக்கொண்டு எதோ எழுதிக்கொண்டிருந்தாள்.

“கழுதை கெட்டா குட்டிச் சுவரு என்ற மாதிரி வகுப்பு இல்லைனா இங்க வந்துடுவாளே, ஒரு நடை என்ன வந்து பார்த்து, சாப்பிட்டியா, நல்லா இருக்கியா எண்டு கேட்டா என்ன குறைஞ்சா போயிடுவா” என்று நினைத்தவாறே சத்தமில்லாமல், அவள் பின்னல் போய் நின்றான் கணேஷ்.

குனிந்து அவள் காதருகில் முகத்தை கொண்டு வந்து எதோ சொல்ல நினைத்தவன், “ம்..ம்” என இரண்டு முறை மூக்கை உறிஞ்சியவன், “ஏய் என்ன ஷாம்பூவை திரும்பவும் மாத்திட்டியா?” என்றான்.

“எழுதிக் கொண்டிருந்தவள், அவனை திரும்பி பார்க்காமலே, “நான் என்ன ஷாம்பூ போட்டால் உனக்கென்ன?” என்றாள்.

கணேஷ், “நீ இப்படி ஷாம்பூவை மாற்றி மாற்றி போட்டு, முடியெல்லாம் கொட்டிடிச்சின்னா? அந்த கேவலத்தை என்னால நினைச்சிக்கூட பார்க்கமுடியல”

அதை பத்தி நீ ஏன் நினைக்கிற? அதைப்பத்தி நான் நினைக்கணும், இல்ல என்னை கட்டிக்கபோறவன் நினைக்கணும்” என்று சொன்ன மதுவின் வார்த்தைகளில் எந்தவொரு அவசரமும் இல்லை, அவள் இன்னும் அவனை திரும்பி பார்க்காமல் எழுதிக்கொண்டே இருந்தாள்.

“உன்னயெல்லாம் மனிசன் கட்டிப்பானா? உன்னை மனிசன் காதலிகிறதே பெரிய விஷயம்!”

“அப்ப நீ, மனிசன் இல்ல என்று சொல்லுறீயா?” என்று இன்னமும் எழுதிக்கொண்டே கேட்டாள் மதுமிதா.

“அச்சச்சோ, அப்ப மாட்டிக்கிட்டது நான்தானா?” என்று சின்னப் பிள்ளைபோல கணேஷ் பாசாங்கு செய்ய, அவனை முதன் முறையாக திரும்பி பார்த்தவள், “இதுக்குத்தான், சின்ன பசங்க கூட சகவாசம் வச்சிக்கக்கூடாது என்று சொல்லுறது” என்று, தன் கையில் இருந்த பென்சிலால் கணேஷின் தலையில் தட்டினாள்.

“ஏய், என்ன சின்னப்பையன் அது இது என்று ஏதாவது சொன்னே, நடக்கிறதே வேற” என பாசாங்குக்கு கணேஷ் முறைத்தான்.

மது, “உண்மைதானே சொன்னேன், நீ என்னை விட சின்னப்பையன் தானே” என்று சொல்லிவிட்டு வாய்க்குள் சிரித்தாள்.

“ரெண்டு வயது குறைய என்றால் சின்ன பையனா?” என்று கண்ணை விரித்துக் கேட்டவன், சட்டென அவளது தலைமுடியை அவளுக்கு வலிக்காத மாதிரி இழுத்துவிட, அவளும் “ஆ..” மெல்லிதாக கத்தி பின் அவனது கையை அடிக்க, அதையும் வாங்கிக் கொண்டு, அவளுக்கு முன் இருந்த கதிரையில் அமர்ந்தான்.

“இப்ப உனக்கு என்ன வேணும்?” என கேட்டவள் மீண்டும் தனது வேலைக்குள் நுழைந்துவிட்டாள்.

“நீ தான் வேணும்” என சொன்னவன், “ஆனா அதுக்கு முதல் எனக்கு காபி வேணும்” என்று எழுந்தவனை பார்த்துவிட்டு மீண்டும் எழுதத்தொடங்கிவிட்டாள் மது.

எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தவன் அருகில் இருந்த மேசைகள் அனைத்தும் காலியாக இருந்ததால், இங்கு கதைபப்தில் பிரச்சினை இல்லை என்று உணர்ந்தவன். “இரு மது, நான் போய் காபி கொண்டு வாறன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

பகுதி 7

பெப்ரவரி 14, 1997

வேகமாக ஓடிச்சென்று அந்த கதவு போன்ற அமைப்பை அடைந்தவன், மூச்செடுப்பதற்கு கூட நேரம் செலவழிக்காமல், அந்த கதவை எப்படி திறப்பது என்று ஆராய்ந்தான். பின்னால் மெதுவாக அந்த அறையின் அமைப்பையும், அதன் சுவற்றில் இருந்த ஓவியம் போன்ற எழுத்துக்களையும் பார்த்தவாறே குமாரின் அருகில் வந்து சேர்ந்தான் கணேஷ்.

ஆரம்பத்தின் வாசல்கதவை கண்டு பிடித்துவிட்டோம் என்ற மனநிலையில் இருந்தவன், அந்த கதவின் மேலே சிறிய எழுத்தில் பொறிக்கப்பட அந்த வாசகத்தை காணத் தவறிவிட்டான். அனால் கணேஷின் கழுகுக்கண்களுக்கு அவை தப்பவில்லை.

ஆனாலும் அதைப் பார்த்த கணேஷுக்கு பேச வாய்வரவில்லை, குமாரின் தோலை தட்டியவன், குமாரின் தாடையைப் பிடித்து அந்த எழுத்து பொறிக்கப் பட்ட பக்கத்துக்கு திருப்பினான். இருவரும் வாயடைத்துப் போய் நின்றனர்.

அதைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாத குமார், கண்களை கசக்கிவிட்டு மீண்டும் பார்த்தான், மீண்டும் கண்களை கசக்கினான். கணேஷுக்கும் அதிர்ச்சி, அனால் என்னவென்று சொல்லமுடியாமல் இருந்தது அவனால், ஒரு கணம் சிலையாய் நின்றவன் தன்னை சுதாகரித்துக் கொண்டே எழுதி இருந்த வாசகத்தை வாசித்தான்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்று வசித்த கணேஷ், பூமா பூங்குவில் திருக்குறளா? என யோசிக்க, குமார், “நாம் சரியாகத்தான் வந்திருக்கிறோம்” என்றான்.

கணேஷ், “இங்கு வேறு எந்த இடத்திலும் தமிழ்..” என சொல்லிக்கொண்டிருக்கும் போதே புஸ்ஸ் என சத்தமிட்டவரே கொஞ்சம் தூசியும் காற்றும் சேர்ந்துவர அந்தக் கதவு திறக்க ஆரம்பித்தது.

குமார், “டேய் கணேஷ், ஏதாவத தொட்டநீயா” என கேட்ட கேள்வியை மனதில் வாங்காமல் நின்றிருந்த கணேஷ், “குமார் நான் நினைக்கிறன், ‘தமிழ்’ என நான் சொன்னதால் தான் இது திறந்திருக்கிறது” என்றான்.

ஒத்துக்கொள்வதைப் போல தலையை ஆட்டிய குமார், திறந்த அந்தக் கதவிற்கு பின்னால் இன்னுமொரு அரை இருப்பதைக் கண்டான். கடும் இருளாக இருந்தது. இந்த அறையில் இருந்தது போல எந்த சிறு துவாரங்களும் அங்கே இல்லாதது போல, மிக துல்லியமாக பூரனாமாக அடைக்கப்பட்ட அறைபோல இருந்தது.

கையில் இருந்த டோர்ச்சை சரிபார்த்த கணேஷ், அந்த அறைக்குள் செல்ல தயாரானான்.

பகுதி 8

டிசம்பர் 21, 1996

“ஹாய் குமாரண்ணா, என்ன பார்க்கவேண்டும் என்று சொன்னீங்களாமே” என்று கேட்டவாறே கண்டீனில் குமார் இருந்த மேசைக்கு எதிரில் இருந்த கதிரையில் அமர்ந்தாள் மது.

அவளைப் பார்த்து சிரித்த குமார், “நான் நல்லா இருக்கன் நீ எப்படி இருக்க?” என்று கேட்டவன், அவன் முன்னாள் இருந்த இன்னொரு காபி கப்பை அவளுக்கு முன் நகர்த்தினான்.

“கொஞ்சம் பொறு மது, இத எழுதி முடிச்சிட்டு வாறன்” என்று சொன்னவன், மீண்டும் எழுதத் தொடங்கினான்.

“ஓகே” என்று சொன்னவள் காபி கப்பை கையில் எடுக்க “ஆ….ய்” என சத்தமிட்டாள். அவள் கத்தியதற்கு காரணம் வேறு யாருமல்ல, நம்ம கணேஷ் தான், அவள் பின்னால் சத்தமில்லாமல் வந்தவன் அவள் கூந்தலை பிடித்து இழுத்துவிடவும் இவள் வலியில் கத்திவிட்டாள்.

ஆழமாக எழுதிக்கொண்டிருந்த குமார், சடார் என முகத்தை தூக்க, மதுவின் பின்னல் கணேஷ் நின்றதைப் பார்த்து புரிந்துகொண்டான்.

“டேய் என்னடா இது சின்னப்பையன் மாதிரி” என்று குமார் அலுத்துக்கொள்ள,

தலையில் கையை வைத்து தேய்த்துக் கொண்டிருந்தவள் குபீரென வேண்டும் என்றே சிரிப்பை வரவழைத்து சிரித்தாள்.

“சின்னப் பசங்கள எல்லாம் ஏன் அண்ணா பக்கத்தில வச்சிருக்கீங்க.. தம்பி போ போ ஸ்கூலுக்கு லேட் ஆவுது பாரு” என்று கணேஷை மது கலாய்க்க, குமார் சிறிதாக புன்னகைத்தவன் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தான்.

இதற்கிடையில் மதுவுக்கு அருகில் வந்து அமர்ந்தவன், “என்ன ரெண்டுபேரும் என்ன ஓட்டுறீங்களா?” என கேட்டவன், மதுவை பார்த்து “நீ என்ன எப்ப பார்த்தாலும் என்னை சின்னப்பையன், சின்னப்பையன் என்று சொல்லிக்கொண்டே இருக்கே? என்ன நினைச்சிடிருக்கே உன் மனசில, பெரிய ஜான்சி ராணின்னு நினைப்போ” என்று பொய்க்கோபம் கொண்டான்.

“போடா, எவ்வளவு வலிக்குது தெரியுமா?”

“போடி, தத்தி” என்று பல்லைக் காட்டியவன், திடீரென அவள் காதருகில் வந்து, “ரொம்ப வலிக்கிறதோ? வேணும்னா நீயும் என் தலை முடியை பிடிச்சி எழுத்துவிடேன், கணக்கு சரியாயிரும்” என்றான்.

“போடா சின்னப்பய்யா” என்றவள், அவன் தலையில் குட்டிவிட்டு சிரித்தாள்.

“ஆ… தத்தி, தத்தி..” என்று கணேஷ் தலையை கசக்கிக்கொண்டிருக்கும் போது, குமார் “ரெண்டுபேரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா? நீங்க எல்லாம் கல்யாணம் கட்டி, எனக்கு நினைச்சாலே பகீர் என்று இருக்கு! சரி விசயத்துக்கு வருவோம்” என்றவன், மதுமிதாவிடம் ஒரு ஓலைச்சுவடியை கொடுத்தான்.

ஆர்வமாக வாங்கியவள், “என்னன்னா, இதுலயும் எதாவது குறியீடுகளை மொழிபெயர்க்க வேண்டுமா?” என்று கேட்டுவிட்டு ஓலைச்சுவடியில் எழுதி இருப்பவற்றை வாசிக்க தொடங்கினாள்.

உண்மையின் உறைவிடம் அது மேற்கில் உண்டு
உண்மையை அறிய ஓடோடி வரலாம்
உண்மையை அறிவிக்க தாசனும் உள்ளான்
உண்மையை அறிவார் உயிரரிவாறே

“என்னன்னா இது? எங்க எடுத்தீங்க?” மது கேட்க,

“அந்த சுவடில தமில்லையா எழுதி இருக்கு?” என்று கணேஷ் கேட்க,

“அந்த சுவடில, அந்த அறை எங்கு இருக்கு என்றும் இருக்கு!” என்று குமார் சொல்ல, மதுவும், கணேஷும் கண்கள் விரிய குமாரையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.

தொடரும்…

சிறி சரவணா