யதார்த்த வாழ்வில் மது – பாகம் 03

எழுதியது: முருகேசு தவராஜா

இந்நாட்டிலே, சாதாரண வகையைச் சேர்ந்த சாராயம் அதிகளவு விற்பனையாகும் பிரதேசத்தில் மட்டக்களப்பும், மன்னாரும் முன்னிலையில் உள்ளன. இது பற்றிய தகவல்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கே வெளிச்சம்.

பஞ்சமா பாதகங்களையுப் பக்குவப்படுத்திய பழச்சாறு போன்று ஆக்கி அனுபவித்த சில அரசிகள், மனித இரத்தத்தில் குளித்துக் களித்ததாயும், இவ் அழகிகள் பாலிலே குளித்து குதூகலித்ததாகவும் செய்திகளை நாம் படிக்கின்றோம். அது விரலிற்கு தகுந்த வீக்கமாகவும் கொள்ளப்படுகிறது. இங்கு யதார்த்த வாழ்வின் சில அம்சங்கள் தொட்டுச் செல்லப்பட்டன.

இந்நிலையில் பின் நவீனத்துவவாதிகள் கூடிக்குடியுங்கள் ஆனால் குடிகாரனாகினால் பெரியோரின் (ஆட்சியாளரின்) அடிமையாவீர்கள் என்று கூறுகின்றனர். சில எழுத்தாளர்கள் மதுபாவனை என்பது, விமர்சனங்களுக்கு மத்தியில் தானாக வளர்ந்து வரும் ஆளுமைமிக்கதோர் “அழகியல்” என வர்ணிக்க முற்படுகின்றனர்.

உலகியல் இவ்வாறு இருக்கும் வேளையில் சட்டத்தால் மதுபாவனையைக் கட்டுப்படுத்துவது என்பது ஒரு சிறு செயற்பாடு என்றுதான் சொல்லவேண்டும். நோய்களிலிருந்து மனிதனின் உயிர் பிரியாமலிருக்க பல இலத்திரனியல் சாதனங்கள் தரப்பட்டாலும், வைத்திய முறைகள் பெறப்பட்டாலும் புதிய புதிய வைரசுகள் தோற்றம் பெற்றுப் கொண்டே இருக்கின்றன. அண்மைக் காலமாக நமது சூழலில் பரவி வரும் தாவர நோய்க்கே தீர்வு இல்லையே!

பௌதீக மாற்றங்களும் இரசாயன மாற்றங்களும் வேகமாக பரவிவரும் இவ்வேளையில், நமது நாடும் பல்தேசிய கம்பனிகளுக்கு ஈடுகொடுத்து தன்னை சமன் செய்துகொள்ளவதோடு, வேகத்தோடு செயற்பட வேண்டிய வேளையில், மதுபாவனையை குறைத்தல், தவிர்த்தல் என்பது பாமர மக்களுக்கு மட்டும் உரியதா? எனும் கேள்வி இங்கு தொக்கி நிற்கிறது.

இருபத்தைந்து இலட்ச வருடமாக நமது உடல் அமைப்பில் மாற்றம் இல்லை என எலும்புக் கூடுகளின் கண்டுபிடிப்புக்கள் கூறுகின்றன. ஆனால் மன மாற்றம் பெருமளவில் இடம்பெற்றுள்ளது. தொழில்களின் தன்மைகள் பெருமளவு மாறியுள்ளது. ஆனால் சுயநலம் மட்டும் அப்படியே இருக்கின்றதே! எயிட்ஸ் பரவாமலிருக்கும் பிரதான வழிமுறை ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதானே. இதுதானே இராமயணக் கருப்பொருள். கடவுளுக்கும் இது பொருந்தும் என்றுதானே அங்கு அகலிகை தரப்பட்டாள். இவ்வாறு பார்க்கும் போது வழிமுறைகளுக்கு ஒரு விதியுண்டு அல்லவா? ஆனால் இன்றைய இளைஞர்கள் போயா தினங்களில் தவறணை வசதியில்லாததால் இந்த நாட்டில் ஒடிக்கோலனை மதுவாக அருந்துகிறார்கள் என்று ஒரு போதகர் ஊடகத்திலே தெரிவித்துள்ளாரே. இதுவும் அறியாமையின் உச்சமில்லையா?

இருப்பினும் காட்டுத் தீ போல் பரவிவரும் மதுபாவனைக்கு எதாவது செய்யவேண்டும். இன்று கிராமிய ரீதியாக பாடசாலைக் குழந்தைகள் ஊடாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் செயற்படுத்தப்பட்ட திட்டங்களால் நாம் அறிந்தவை என்ன? ஏழ்மை, அறியாமை, அரசின் இரட்டைவேடம் என்பன. இவை, ஏழைகளின் வாழ்வை மேலும் மேலும் கேள்விக்குறியாக்கியே வருகின்றன.

“வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயர குடியுயரும்
குடியுயர கோனுயரும்
கோனுயர (செங்) கோலுயரும்.”

இவை மனிதன் மனிதத்துவம் வளர்வதற்கான மகாவாக்கியங்கள். இன்றைய நவீன முகாமைத்துவத்திற்கும் இது நூறு வீதம் பொருந்தும். வெவ்வேறுபட்ட காலகட்டங்களில் சொற்களையும், படங்களையும் மாற்ற முடியுமே தவிர ஞானம் ஒன்றுதான். உண்மை எப்பொழுதும் ஒன்றே, நேர்மை எப்பொழுதும் ஒன்றே, அழகு எப்பொழுதும் ஒன்றே. ஒரு குழந்தையில் இவை மூன்றும் எப்பொழுதும் பொருந்தியிருக்கும். மனிதனின் வளர்ச்சியின் போக்கில் இவை குழம்பியிருக்கும். உடல், உள வைத்தியங்கள் மனிதனிற்கு கிடைக்கும் சாத்தியங்கள் அதிகம் இருப்பினும் வாழும் சூழல் மீண்டும் மீண்டும் விச சூழலிற்குள் மனிதனை வீழ்த்திக் கொண்டே இருக்கும்.

அன்பையும், கருணையையும் ஆயுதங்களாக ஏந்திய அன்னை திரேசா வீதியில் இறந்து கொண்டிருந்த ஏழைகளுக்கு மரியாதையுடனான மரணத்தை வழங்கினார். இதனால், இவர் இன்று புனிதராக்கப்பட்டார். மண்ணுள் மறைந்து கிடக்கும் போது வெறும் கல். பட்டை தீட்டப்பட்டால் ஜொலிக்கும் வைரம். அத்திவாரத்திற்கும் கல், கல்கட்டிடத்திற்குள் இருக்கும் கருங்கல் சிலைக்கும் கல். பக்குவப்படுத்தலின் முக்கியம் பரிமாணத்தின் படிமுறைகளில் தங்கியுள்ளது. உண்மையும், நேர்மையும், அழகுமே செயற்பாடுகளின் படிமுறைகளாக தொடர்ந்து செயற்படும் போது மட்டும் முடிவின் இலக்கு அடையப்படும்.

தியானமும், யோகப் பயிற்சிகளும், முறையான போதனைகளும் குற்றமற்றவர்களால் தரப்படும் போது குடிநோயாளர்களின் மனதிலே ஒளிக்கீற்றுக்களுக்கான இடைவெளி தோற்றம் பெறுகிறது. இவை நிலைத்திருப்பதற்கும், குடிநோயாளர்களையே மறு போதனையாளர்களாக மாற்றக்கூடிய தன்மைக்கும் வித்திடக்கூடிய உண்மை, நேர்மை, அழகு ஆகிய பண்புகள் செறிந்த போதனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது ஏழைக்குடிகாரனின் எண்ணிக்கை ஓரளவாவது குறையும் சாத்தியம் உண்டு. மதுபாவனையைக் குறைப்பதாக வேறு அடிமைத்தனங்களைப் புகுத்துவது உண்மைக்கும், நேர்மைக்கும், அழகிற்கும் ஒத்துவராது.
இப்போது எம்மிடையே காணப்படும் மது ஒழிப்பு அமைப்புக்களின் செயற்பாடுகளை இராமர் அணையில் சிறு மணல் துணிக்கைகளைத் தூவிய அணிலுக்கு ஒப்பாகவே கூறமுடியும். சிறு துணிக்கைகள் தொடர்ந்து வந்தால் பெருவெள்ளம்.
“ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று
போற்றினும் பொத்துப்படும்.”- வள்ளுவர்.

ஒரு செயலை நிறைவேற்றுவதற்கான சரியான வழிமுறைகளை அறிந்து செய்யாவிட்டால் பலர் துணைபுரிந்தாலும் செயல் நிறைவேறாது.

செதில் அகன்ற மீனை சந்தையில் நாம் வாங்க விரும்புவதில்லை. ஆனாலும் செதிலை நாம் உண்பதில்லை. அவை எங்கு செல்கின்றன என்பது ஆராயப்பட வேண்டியதல்ல. ஆனாலும் மீனின் அளவிற்கு செதில்களின் அளவும், செறிவும் அதிகரித்தும் வளர்ந்தும் செல்லும். அவையே பெரிய மீனிற்கும் சிறிய மீனிற்கும். மிகப் பிரதானமான பாதுகாப்புக் கவசங்கள்.

கரையுள்ள கடல், காலையும் மாலையுமுள்ள நாள், எவ்வளவு அழகாக இருக்கின்றதோ அவ்வாறே கட்டி அழகு பார்க்கும். பெண்களின் சேலையின் கரைகளும் அழகு காட்டும்.

கரையோர மக்களோ!, காட்டோர மக்களோ! சுரண்டப்பட்டும், சூறையாடப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும் வைத்திருப்பதுதான் யதார்த்தமெனில், அவர்களின் வாழ்வியல் நிலைகளையும் யதார்த்தமாகவே கொள்ளவேண்டும்சகலவிதமான உணவு உற்பத்திகளுக்கும் கரையோரமோ, காட்டோரமோ தேவை. ஆனால் அங்குள்ள மக்களோ மீன் செதில்கள் போன்று புறக்கணிக்கப்படுவது ஏன் என்றே விளங்கவில்லை.

கிராமங்களில் அவ்வப்போது மது அழிக்கப்படலாம், அது ஒழிக்கப்படுமா? சீனியிலும், தானியங்களிலும், பழங்களிலும் இருக்கின்ற மயக்கம் தரும் மதுவே உன்னால் தான் ஒழிய முடியுமா?

முருகேசு தவராஜா
முருகேசு தவராஜா

படம் : இணையம்