வாசிப்பு முக்கியம்
எழுதியது: சிறி சரவணா
நாம் நிச்சயமாக இளைய சமுதாயத்திற்கு வாசிப்பின் மகத்துவத்தை கற்றுக் கொடுக்கவேண்டும். ஒரு மனிதனின் வாழ்க்கைப் பாதையை செதுக்குவதில் வாசிப்பு என்பது நிச்சயம் ஒரு மிக முக்கியமான பங்கு வகிக்கும் என்பது எனது கருத்து. வாசிப்பு மட்டும் தான் அப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் என்று இங்கே நன் சொல்லவரவில்லை, மாறாக, வாசிப்பு ஒரு குறிப்பிட்ட அளவு செல்வாக்கை ஒருவரது வாழ்வில் செலுத்தியே தீரும்.
வாழ்க்கை என்றால் என்ன? ஒரு சவாலான கேள்விதான்! அதற்கு பதிலளிப்பது அல்ல எனது நோக்கம்; ஏன் இந்த கேள்வி? வருகிறேன் விசயத்திற்கு! வாழ்க்கை என்ற ஒன்றை நாம் வாழ்வதில்லை. “நாம் வாழ்கையை வாழ்கிறோம்” என்று சொல்வதில் எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. அப்படிச் சொல்லிவிட்டால், வாழ்க்கை என்பது நம்மை விட்டு தனிப்பட்ட வஸ்து ஆகிவிடுகிறது அல்லவா? நாம் ரயிலில் பயணிப்பது போல – ரயிலும் நாமும் ஒன்றல்லவே. ஆக நான் வாழ்வை அப்படி பார்க்கவில்லை.