வாசிப்பதால் எமக்கு என்ன சார் நன்மை?

இன்றைக்கு இருக்கும் வேமகான உலகில் எல்லோருமே வேகவேகமாக எல்லாவற்றையும் செய்துவிட்டு போவதிலேயே குறியாய் இருக்கிறார்கள் அல்லவா? வாசிப்பின் அளவு குறைந்து வருவது நாம் வாழ்வியல் முறையின் மாற்றத்தால் உருவான ஒரு பக்கவிளைவு என்றாலும் மிகையாகாது.

என்னிடமே பலர், ‘எழுதாமல் YouTube ல வீடியோவை போடுங்க பார்த்துட்டு போகலாம்’ என்றும் கேட்டு இருக்கிறார்கள். வாசிப்பதற்கு நேரம் செலவழிக்கவேண்டும், வீடியோ என்றால் சும்மா பார்த்துட்டு போயிடலாம் என்கிற சோம்பேறித்தனம் தான் இதற்குக் காரணமோ என்றும் நான் சிந்தித்ததுண்டு.

அதற்காக வீடியோவை பார்ப்பது குற்றம் என்று கூறவில்லை. ஆனால் வாசிப்பில் இருக்கும் நன்மைகள் பற்பல. அது பல வழிகளில் உங்கள் மூளையும் மனத்தையும் மேம்படுத்த உதவுகிறது. வெறுமனே பார்ப்பதை விட, வாசிக்கும் போது சற்று சிரமமாக இருக்கிறது அல்லவா? ஒவ்வொரு சொல்லையும் உங்கள் மூளை பிரதியீடு செய்து பொருள் கொள்ளும் அந்த நேரம், கிரகிப்பதர்கான நேரம் – அது உங்களின் சிந்திப்பின் ஆற்றலையும் குறித்த விடையத்தை நினைவில் நீண்ட காலத்திற்கு சேமித்து வைக்கவும் உதவுகிறது.

வீடியோவை பார்த்துவிட்டு பலர் அதே இடத்தில் அந்த விடையத்தை மறந்துவிட்டு செல்கிறோம் என்பதற்குக் காரணம் அதனைப் பார்க்கும் போது அதனைக் கிரகிப்பதர்கான நேரம் குறைவு அல்லது இல்லை என்பதுதான்.

சரி, வாருங்கள் வாசிப்பினால் உங்களுக்கு கிடைக்கும் அனுகூலங்களை பார்க்கலாம்.

ஞாபக சக்தியை அதிகரித்தல்

வாசிப்பு மூளைக்கு ஒரு நல்ல பயிற்சி. தொடர்ச்சியாக வாசிப்பை ஒரு பழக்கமாக கொண்டிருப்பதன் மூலம் உங்கள் மூளை தொடர்ச்சியாக செயற்பாட்டில் இருக்குமாம். எனவே வயது செல்லச் செல்ல ஞாபக மறதி அல்லது அல்ஸைமர் போன்ற நோய் வாசிப்பவர்களுக்கு ஏற்படுவது குறைவு என்கிறது ஆய்வு.

உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க மாதம் ஒரு புத்தகமாவது வாசிக்கவும். வாசிக்கும் புத்தகம் அர்த்தமுள்ளதாக இருந்தால் நீங்கள் புதிய விடையங்களையும் தெரிந்துகொள்ளலாம் இல்லையா? வெறுமனே சினிமா, பொழுதுபோக்கு என்று மட்டுமே வாசிக்காமல் நல்ல புத்தகங்களை, விஞ்ஞான கட்டுரைகளை தெரிந்து எடுத்து வாசியுங்கள்.

பகுத்தறிவுத் திறனை அதிகரித்தல்

வாசிக்கும் போது எமக்கு கிடைக்கும் அனுபவங்கள், அதாவது நாவல்கள், சிறுகதைகள் போன்றவற்றில் வரும் சம்பவங்களை உங்கள் வாழ்வில் பொருத்திப் பார்த்து முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மனித வாழ்வியலை பலரின் கண்களினூடாக பார்க்கும் திறன் வாசிப்பதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும்.

வாசிக்காவிட்டால் உங்கள் அனுபவம் மட்டுமே உங்களை செலுத்தும் கருவியாக இருக்கும். ஆனால் வாசிப்பதால் பலரின் அனுபவங்கள், பல சம்பவங்கள் என்பன பற்றிய அறிவு உங்களின் பகுத்தறியும் திறனைக் கூட்டி உங்கள் வாழ்வில் உதவும்.

குறிப்பாக மாணவர்களுக்கு இந்தத் திறன் அவசியமில்லையா? அவர்கள் எதிர்காலத்தில் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை வெற்றிகரமாக முகம்கொடுக்க இந்த அறிவு உதவும்.

உங்களுக்குத் தெரிந்த சொற்களின் அளவு அதிகரிக்கும்

வாசிப்பதில் இருக்கும் முக்கியமான அனுகூலம் புதிய சொற்கள், புதிய சொற்தொடர்கள் என்பவனவற்றை அறியக்கூடியவாறு இருக்கும். புதிய உவமைகள், புதிய வழியில் ஒரு கருத்தை எடுத்துரைக்கும் முறை என்பன எமக்குத் தெரிவரும்.

வாசிக்கத் தொடங்கியவுடனே இதெல்லாம் நடந்துவிடாது, ஆனால் காலப்போக்கில் பல புதிய சொற்கள், சொற்தொடர்கள் என்று எமது மொழித்திறன் அதிகரிக்கும்.

குறிப்பாக இது மாணவர்களுக்கு மிக முக்கியம் அல்லவா

உங்கள் எழுதும் திறன் அதிகரிக்கும்

எழுதிப் பழகுவதால் நிச்சயம் எழுதும் திறன் அதிகரிக்கும், ஆனால் வாசிப்பு உங்களுக்கு எழுதும் திறனை அதிகரிக்கும் ஆற்றலை உருவாக்கும். பல புத்தகங்கள், கட்டுரைகள் என்று வாசிக்கும் போது மற்றவர்களின் எழுத்துநடை, அவர்கள் கையாளும் எழுத்துமுறை என்று பல விடையங்களை எம்மால் கிரகித்துக்கொள்ள முடியும். இதனை அடிப்படையாக வைத்து நாமும் எழுதிப் பழகுவதன் மூலம் எமது எழுத்துத் திறனை அதிகரிக்கலாம்.

நான் சுஜாதா விசிறி! அவர் எழுதிய விஞ்ஞானப் புத்தகங்கள், கதைகள், கணேஷ்-வசந்த் நாவல்கள் என்று பலத்தையும் வாசித்துத் தான் நாமும் எழுதவேண்டும் என்ற ஆசையே எனக்கு வந்தது என்று சொன்னால் அது பொய்யல்ல.

மனத்தை ரிலாக்ஸ் செய்ய ஒரு அற்புத வழி

வாசிப்பு மன அழுத்தத்தை குறைத்து நிம்மதியை அதிகரிக்கிறது. நாம் அன்றாட வாழ்வில் இருக்கும் தொல்லைகளை சற்று நேரத்திற்கு மறந்துவிட்டு ஒரு நாவலிலோ, கதையிலோ மூழ்கி அந்த உலகிற்கு சென்று வரலாம்.

இதற்கு பேசாமல் டீவி, வீடியோ, படம் என்று பார்த்துவிட்டு செல்லலாம் என்று எண்ணுகிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கும் இன்று வரும் பல படங்கள் நாவல்கள், புத்தகக் கதைகள் என்பவற்றை தழுவியே எடுக்கப்படுகின்றன. லோர்ட் ஒப் தி ரிங்க்ஸ், ஹரி பாட்டர் என்பவற்றை சில உதாரணங்களாக கூறலாம். இப்படியான படங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், அந்தப் புத்தகங்களை வாசித்தவர்களைக் கேட்டுப்பாருங்கள், புத்தக் கதையில் இருக்கும் சுவாரஸ்யத்தில்/நுணுக்கங்களில் 30% கூட படத்தில் வந்திருக்காது என்று கூறுவார்கள்.

புத்தகத்தில் எழுதிய எல்லாவற்றையும் அப்படியே காட்டிவிட முடியாதே! அந்தளவுக்கு தொழில்நுட்பமும் இல்லை மற்றும் குறித்த நேரத்தினுள் எல்லவிடையங்களையும் படத்தில் கோர்க்கமுடியாது இல்லையா? எனவே கற்பனை என்னும் குதிரை அதற்கு அவசியம், அந்தக் கற்பனை உலகை நீங்கள் வாசிப்பதன் மூலம்தான் அனுபவிக்க முடியும்.

மனதை ஒருமுகப்படுத்த உதவுகிறது

வாசிக்கும் போது உங்களுக்கு என்ன வாசிக்கிறோம் என்பதில் கவனம் இருந்தால்தான் வாசிப்பதை உங்களால் கிரகித்துக்கொள்ள முடியும். ஆனால் வீடியோ பார்ப்பதில் இந்தச் சிக்கல் கிடையாது.

வாசிக்கும் போது உங்கள் அருகில் உள்ளவர்களுடன் அர்த்தமற்ற உரையாடல் இருக்காது. ஒரு நாவலை வாசிக்கத் தொடங்கினால் அதனை முடிக்கும் வரை அதை கைகளில் இருந்து வைக்க மனம் வராது. இதனைச் செய்ய கவனம், ஒருமுகத்தன்மை தேவை. எனவே வாசிக்க வாசிக்க இந்த இயல்புகள் உங்களுக்கு வந்து சேரும்.

இந்த இயல்புகளை நீங்கள் பின்னர் உங்கள் வாழ்வின் பல இடங்களில் பயன்படுத்தலாம்.

ஊக்குவிக்கும் ஒரு காரணி

உங்கள் உளம் மற்றும் வாழ்வியல் சார்ந்த வளர்ச்சிக்கு கூக்கிவிக்கும் புத்தகங்களை வாசிப்பது பெருமளவு உங்கள் வாழ்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க உதவும்.

என்னடா வாழ்க்கை இது / இப்படி ஆகிடிச்சே என்று மனமுடைந்து போகும் வேளைகளில் வாழ்கையை ஊக்குவிக்கும் புத்தகங்களை வாசிப்பது ‘எம்மால் முடியும்!’ என்கிற ஒரு மனநிலைக்கு எம்மைக் கொண்டுசெல்லும்.

சாதிக்கவேண்டும் ஆவல் இருப்பினும் அதனை எப்படி சாதிப்பது என்று தெரிந்திருக்கவேண்டிய அவசியம் உள்ளது. இப்படியான புத்தகங்கள் எமக்கு அதனைக் கற்பிக்கின்றன.

இறுதியாக…

இன்று குறிப்பாக இளைய சமுதாயத்தினரது வாசிப்பின் அளவு மிக மிகக் குறைவாகவே காணப்படுகிறது. இது நல்ல எதிர்கால சந்ததிக்கு உகந்ததல்ல.

இன்று தகவல்கள் எமது கைகளிலேயே கிடைக்கும் வண்ணம் ஸ்மார்ட்போன், டப்ஸ் என்று பல கருவிகள் எம்மிடம் உள்ளன. விக்கிபீடியா போன்ற கற்றற்ற கலைக்களஞ்சியங்கள் இலவசமாகவே எமக்கு பயன்பாட்டுக்கு கிடைகின்றன. இந்தக் காலத்தில் தான் conspiracy theoryகளும், flat earther (பூமி தட்டையானது என்று நம்புபவர்கள்) என தங்களை பெருமை படவே அழைத்துக்கொள்ளும் ஆசாமிகளும் அதிகரித்துள்ளனர். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று நீங்களே சற்று சிந்தித்துப் பார்க்கலாம்.

வாசிப்பு முக்கியம்! உங்களுக்கு இனி அது தேவையில்லை என்று நீங்கள் கருதினாலும், அடுத்த சந்ததிக்கு அது நிச்சயம் தேவை என்பதைப் புரிந்து எம் குழந்தைகளுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் வாசிப்பின் அவசியத்தை உணர்த்தி அவர்களின் வாசிப்புக் கோலத்தை அதிகரிக்க நீங்கள் முன்வரவேண்டும்.

இந்தக் கட்டுரை பரிமாணத்தின் ‘வாசிப்பின் அவசியம்’ என்கிற திட்டத்தின் ஒரு படியாகும்.