உலகின் மிகப்பெரிய உயிரினம் என்ன?

இந்தக் கேள்வியைப் பார்த்த உடனே நமக்கு ஆப்ரிக்க யானை, நீலத் திமிங்கிலம் போன்ற பெரிய விலங்குகள் ஞாபகம் வரலாம். சிலருக்கு அவற்றையும் விட பல மடங்கு பெரிய உயிரினமான முன்னூறு அடிக்கும் அதிகமான உயரம் வளரும் ரெட்வூட் மரங்கள் நினைவுக்கு வந்திருக்கலாம். ஆனால் நீங்கள் எதிர்பார்த்தது போலவே இந்தக் கட்டுரை அவற்றைப் பற்றி அல்ல. நாம் பார்க்கப் போகும் உயிரினத்தோடு ஒப்பிட்டால் மேலே கூறிய வகையறாக்கள் வெறும் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் அளவுக்குத்தான்!

1980களில் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய ஒரு உயிரினம் எதுவென்றால் அது காளான். தேன் காளான் என அழைக்கப்படும் Armillaria gallica தனித்த உயிரினம் என்றால் என்ன என்று எம்மை மீண்டும் ஒரு முறை சிந்திக்க வைத்தது.

பிரவுன்-மஞ்சள் நிறக் கலவையான இந்தக் காளான் பார்க்க அதன் மேல் தேன் வடிந்தது போல தொட்டால் பசையாக இருக்கும், அதனால் தான் அதனை தேன் காளான் என பொதுவாக அழைக்கின்றனர். தென் அமெரிக்க காடுகளில் பொதுவாக இந்தக் காளான்கள் இறந்துவிட்ட மரங்களில் படர்ந்து காணப்படும்.

தேன் காளான்

மிச்சிகனில் உள்ள கிறிஸ்டல் பால்ஸ் காட்டில் குழுக் குழுவாக ஆங்காங்கே காணப்படுகிறது என்றுதான் முதலில் விஞ்ஞானிகள் கருதினர். ஆனால் கண்களுக்குத் தெரியாத ஒரு மேஜிக் அங்கே நடந்துகொண்டு இருந்துள்ளது. இந்தக் காளான்கள் மண்ணுக்கு கீழே, மரக்கிளைகளின் ஊடே என்று கண்களுக்கு புலப்படாத ஒரு பாரிய வலைப்பின்னலின் ஒரு அங்கமாக 30 ஏக்கர் பரப்பளவில் இந்தக் காட்டில் பரந்துவிரிந்து இருந்திருகின்றன.

1988 இல் ஆய்வாளர்கள் செய்த மரபணுப் பரிசோதனையில் இந்தக் காட்டில் இருக்கும் அனைத்து தேன் காளான்களும் ஒரே மூல மாதிரியின் குளோன் காப்பிகள் என்று தெரியவந்தது. அதாகப்பட்டது ஒரு பாரிய உயிரினத்தின் இனப்பெருக்கும் உறுப்புகளாக ஆங்காங்கே இவை முளைவிட்டு இருந்துள்ளன.

ஆரம்பத்தில் இவற்றின் மொத்த உயிர்த் திணிவு (biomass) அண்ணளவாக 100,000 கிலோகிராம் என்று கணக்கிட்டாலும், தற்போதைய புதிய ஆய்வுகளின் முடிவுகள் இந்தப் பாரிய அசுரன் 400,000 கிலோகிராம் எடை கொண்ட, 90 ஏக்கர் நிலத்தில் பரந்து காணப்படும் ஒரு பாரிய உயிரினம் என்று தெரிகிறது.

400,000 கிலோகிராம் என்றால் இதனை நாம் நீலத்திமிங்கிலம், ஆபிரிக்க யானை என்பனவற்றோடு ஒப்பிடுவது தவறுதானே!

ஒரே நாளில் இப்படி பூதாகரமாக இந்த உயிரினம் வளர்ந்திருக்க முடியாதில்லையா? விஞ்ஞானிகளும் அப்படித்தான் சிந்தித்தனர். ஆரம்பத்தில் இதன் வயது 1500 வருடங்கள் எனக் கணக்கிட்டாலும், இதன் வளர்ச்சியை தொடர்ச்சியாக கண்காணிக்கும் போது குறைந்தது இது 2500 வருடங்களாவது வயது கொண்டதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த உயிரினத்தில் இன்னொரு சுவாரஸ்யமான விடையம், இதன் 15 வேறு இடங்களில் இருந்து எடுத்த மாதிரியை DNA வரிசைமுறையில் ஆய்வு செய்தபோது இதில் இருக்கும் 100 மில்லியன் ஜினோமில் வெறும் 163 மட்டுமே மாறுதல் அடைந்துள்ளது. அப்படியென்றால் இந்த உயிரினம் அதுவாழ்ந்த காலத்தில் கூர்ப்பு அடையவில்லை.

எதோ ஒரு காரணம் அல்லது காரணி இந்தக் காளானை கூர்ப்படைவதில் இருந்து தடுத்துள்ளது.

சரி இவ்வளவு நேரமும் நாம் ஒரு பெரிய பங்கஸ் / காளான் பற்றி அல்லவா பார்த்தோம். ஆனால் உலகின் மிகப்பெரிய உயிரினம் அது அல்ல. அல்லது இன்னும் தெளிவாக கூறவேண்டும் என்றால் உலகின் மிகப்பெரிய காளான் இது அல்ல.

1988 இல் கண்டரியப்பட்டதில் இருந்து பல வருடங்களுக்கு சாம்பியன் பட்டத்தை கிறிஸ்டல் பால்ஸ் காட்டில் உள்ள தேன் காளான் வைத்திருந்தாலும், 1998 இல் ஒரிகோன் பிரதேசத்தில் உள்ள ப்ளூ மவுண்டன் எனும் பிரதேசத்தில் பரந்து காணப்படும் தேன் காளான் தான் தற்போதைக்கு சாம்பியன் பட்டம் வென்றவர்.

ஒரிகோன் காடு

அண்ணளவாக 2384 ஏக்கர் பரப்பில் விரிந்து கிடக்கும் இந்த உயிரினம் கிட்டத்தட்ட 8500 வருடங்களுக்கு மேலாக பூமியில் வாழ்கிறது என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.

ஆனாலும் , இதை விடப்பெரிய பங்கஸ் வகை உயிரினம் இன்னும் கண்டறியப்படாமல் இருக்கலாம் என்பதும் கண்கூடுதான். காரணம் இவை நிலத்திற்கு கீழே வலைப்பின்னலாக இருப்பதும், இவற்றை கண்டறிவதற்கு DNA பரிசோதனை செய்துதான் அவை அனைத்தும் ஒரே உயிரினத்தின் கூறுகள் என்று நிறுவவேண்டும்.

நன்றி : sciencealert.com