அண்ணளவாக 40,000 வருடங்களுக்கு முன்னரே நியண்டதால் இனம் முற்றாக அழிந்துவிட்டது. இதற்குக் காரணமே புதிய மனிதன் தான் என்பது வரலாற்று, கூர்ப்பு உயிரியல் விஞ்ஞானிகளின் கருத்து. ஆனாலும் தற்கால ஐரோப்பியர்கள் இன்னும் நியண்டதால் DNA இல் 2% ஐ கொண்டுள்ளனர். இது ஒருகாலத்தில் மனிதன் நியண்டதால் இனத்தோடு கூடியதால் இடம்பெற்றிருக்கவேண்டும் என்பது பொதுக்கருத்து.
தற்போதைய புதிய ஆய்வுகள், மனிதனில் உள்ள நியண்டதால் DNA மனித இனத்தை மாபெரும் நோய்த்தாக்கத்தில் (flu) இருந்து காப்பாற்றியுள்ளது என்று கூறுகிறது.
ஸ்டாண்ட்போர்ட் பல்கலையை சேர்ந்த ஆய்வாளர்களின் ஆய்விலேயே ஆபிரிக்காவில் இருந்து வெளியேறிய மனிதனை நியண்டதால் DNAக்கள் பயங்கரமான நோய்த் தொற்றில் இருந்து காப்பாற்றியுள்ளது தெரிகிறது. அதாகப்பட்டது மனிதனில் இருக்கும் நியண்டதாலில் இருந்து வந்த 152 ஜீன்கள் தற்கால influenza A மற்றும் hepatitis C ஆகிய ஆபத்தான வைரஸ்களுடன் செயலாற்றுகிறது. இதன் காரணமாக மேற்கூறிய வைரஸ்களால் வரக்கூடிய ஆபத்தான நோய்களில் இருந்து எம்மை இவை பாதுகாக்கின்றன.
எனவே நியண்டதால் DNA மனிதன் முதன் முதலில் ஆபிரிக்காவை விட்டு வெளியே வந்த போது அவனுக்கு பாதுகாப்பாக இருந்துள்ளது எனலாம்.
நியண்டதால் இனத்திற்கு இந்த வைரஸ் எதிர்ப்பு சக்தி எப்படி வந்தது?
மனிதனுக்கு முந்திய இனம் நியண்டதால் இனம். மனிதன் ஆபிரிக்காவை விட்டு வெளியே வருவதற்கு பல நூறாயிரம் வருடங்களுக்கு முன்னரே நியண்டதால் ஆபிரிக்காவிற்கு வெளியே குறிப்பாக ஐரோப்பாவில் வசித்துள்ளனர். எனவே இந்த வைரஸ் இவர்களை தாக்கி, அதனிடம் இருந்து உடலில் நோயெதிர்ப்பு சக்தியை கூர்ப்படையச் செய்ய இவர்களுக்கு நீண்டகாலம் அவகாசம் கிடைத்துள்ளது.
ஆனால் புதிதாக ஐரோப்பாவிற்கு சென்ற மனிதனுக்கு இந்த கால அவகாசமோ, குறித்த வைரஸ்களுக்கு எதிரான போதுமானளவு நோயெதிர்ப்பு சக்தியோ இருந்திருக்காது, எனவே மனிதனைப் பொறுத்தவரை மேற்படி வைரஸ்களை சந்திப்பது என்பது மிகப்பெரிய ஆபத்தில் முடிந்திருக்கும் என்று ஸ்டாண்ட்போர்ட் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேற்படி ஆய்வுக்காக விஞ்ஞானிகள் மனிதனில் இருக்கும் ஜீன்களில் குறித்த வைரஸ்களுடன் செயலாற்றும் 4500 ஜீன்களை பிரித்தெடுத்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இந்த 4500 ஜீன்களில் 152 ஜீன்கள் நியண்டதால் இனத்திலும் இருந்துள்ளது.
புதிய மனிதனுக்கும் நியண்டதால் மனிதனுக்கும் இடையில் பாரிய உயிரியல் வித்தியாசம் இல்லை என்பதால் நியண்டதால் மனிதனை தாக்கிய வைரஸ்கள் மனிதனையும் தாக்கியிருக்கும். அதேபோல கூர்ப்பின் அழகு என்னவென்றால், மீண்டும் முதலிருந்து குறித்த வைரஸ்களுக்கான நோயெதிர்ப்பு சக்தியை மனிதனில் உருவாக்காமல், நெருங்கிய உருவான நியண்டதால் இனத்திடம் இருந்து அந்த சக்தியை கடன்வாங்கிவிட்டது என்பதுதான்!