தங்கக் காற்று

ஒருமுறை ஜப்பானின் அரசருக்கு ஒரு வயது முதிர்ந்த ஜென் ஆசான் ஒருவர் தோட்டக்கலையை கற்பித்தார். மூன்று வருட கற்பித்தலுக்கு பின்னர் அந்த ஆசான், “மூன்று வருடங்களாக நான் கற்பித்ததை நீயும் உனது தோட்டத்தில் செய்து பார்த்திருப்பாய், இனி மதிப்பெண் போடும் நேரம் வந்துவிட்டது. சரி, நீ இப்போது செல், சென்று உனது தோட்டத்தில் நாம் கற்றவற்றை எல்லாம் செய்து பார், அடுத்த சில தினங்களில் நான் உனது தோட்டத்தை பார்வையிட வருவேன்” என்று கூறினார்.

அரசரும் அவரது மாளிகைக்கு சென்று அங்கே இருக்கும் அவரது தோட்டத்தை பராமரித்து, குரு வரும் நாளை எண்ணிக் காத்திருந்தார். கடந்த மூன்று வருடங்களில் படித்ததை எல்லாம் மிகத் துல்லியமாக ஆயிரக்கணக்கான சேவகர்களைக் கொண்டு ஒரு சிறு துளி தவறும் இருந்துவிடக்கூடாது என்று உன்னிப்பாக அவதானித்து, நாளை வரும் ஆசான் தோட்டத்தை பார்த்து அசந்துவிட வேண்டும் என்று பெரும் ஆர்வத்துடன் தோட்டத்தை முழுமையா சுத்தம் செய்து ஒரு சிறு பிழை கூட இல்லாமல் பார்த்துக்கொண்டார்.

ஆசான் வரும் நாளும் வந்தது. அரசருக்கோ மிக்க மகிழ்ச்சி. ஆசான் கற்பித்த அனைத்தையும் அப்படியே தனது தோட்டத்தில் செய்து வைத்திருக்கிறார் இல்லையா? அதான் நிச்சயம் ஆசான் தன்னை பாராட்டிவிடுவார் என்று பெருமிதம் கொண்டார்.

தோட்டத்தை சுற்றிப் பார்த்த ஆசானுடைய முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்தது. அவரது முகத்தில் சொல்லொண்ணா சோகம் குடிகொண்டது. இந்த முக மாற்றத்தைக் கண்ட அரசனுக்கோ ஆச்சரியம். அவர் ஆசானை அப்படி பார்த்ததே இல்லை. ஆசான் எப்போதுமே சிரிப்பும், மகிழ்ச்சியுமாக இருப்பவர் என்றுதான் அரசருக்குத் தெரியும். எதோ தவறு நடந்துவிட்டது என்று அரசருக்கு புரிந்தது.

அடடா, நாம் பரிட்சையில் தோற்றுவிடுவோமோ என்று அரசருக்கு கவலை ஒரு புறம், சோகமான ஆசானின் முகமும், அவரது பேரமைதியும் அரசரை சற்றே நிலைகுலைய வைத்துவிட்டது.

“ஏதாவது குறையா குருவே? உங்களை நான் இப்படி இவ்வளவு சோகமான சிந்தனையுடன் பார்த்ததே இல்லையே. எனது தோட்டத்தை நீங்கள் பார்த்தால், எனது மாணவன் எவ்வளவு அற்புதமாக தோட்டத்தை உருவாக்கியுள்ளான் என்று மகிழ்ச்சி கொள்வீர்கள் என்று அல்லவா நினைத்தேன்” என்று அரசர் ஆசானைப் பார்த்து கூறினார்.

அதற்கு ஆசான் பதிலளித்தார், “எல்லாமே சரிதான், ஆனால் தங்க இலைகள் எல்லாம் எங்கே? நிலத்தில் ஒரு மஞ்சள் இலையோ, காய்ந்த சருகோ என் கண்களுக்கு தென்படவில்லையே… காற்றில் பறக்கும் அந்த சிவந்த பழுப்பு நிற இலைகள் எங்கே? அவை இல்லாமல் இந்த தோட்டமே ஒரு சுடுகாடு போல இறந்து அல்லவா காணப்படுகிறது. காற்றின் பாடல் எங்கே? அசைந்தாடும் அந்த சருகுகள் எங்கே? இந்தத் தோட்டம் ஒரு போலியான இடமாக எனக்குத் தென்படுகிறது.”

ஆசான் வருகையை எண்ணி அரசர் தோட்டத்தை சுத்தம் செய்வதாக எண்ணி நிலத்தில் விழுந்த எல்லா இலைகளையும் எடுத்துவிட்டார். மஞ்சள் நிறமாக மரத்தில் தனது இறுதிக் காலத்தை எண்ணிக் காத்திருந்த இலைகளைக் கூட அவர் விட்டுவைக்கவில்லை.

இறப்பு என்பது வாழ்வின் ஒரு அம்சமே என்பதை அரசர் உணர்ந்திருக்கவில்லை. இறப்பு என்பது வாழ்வின் எதிர்மறை அல்லவே! அது வாழ்வை பூரணப்படுத்தும் ஒரு அங்கம். இறப்பு இல்லாமல் இங்கே பிறப்பு ஏதும் இல்லை என்பதை உணரவேண்டுமே!

ஆசான் கூறியதின் உண்மை அரசருக்கு புலப்பட்டது.

“தோட்டம் மிக அழகாக சுத்தமாக இருக்கிறது, ஆனால் இங்கே இந்தத் தோட்டத்தில் உயிரில்லை! இது ஒரு வரைந்த படமாக காட்சியளிக்கிறது.”

எவ்வளவு பெரிய பேருண்மை! அரசர் சிந்தித்தார், அதனை உணர்ந்தார்.

அரசரின் முக மாற்றத்தை கண்டுகொண்ட ஆசான், அவரின் அருகில் இருந்த ஒரு கூடையை எடுத்துக்கொண்டு தோட்டத்தின் வெளிப்புறத்தில் அப்புறப்படுத்தி வைக்கப்பட்டிருந்த காய்ந்த மஞ்சள், சிவப்பு, பழுப்பு நிற இலைகளை எல்லாம் அள்ளிக் கொண்டு, வரும் வழியில் தோட்டத்தில் தூவிக்கொண்டே வந்தார்.

இங்கும் அங்கும் தூவ, அப்போது அடிக்கும் காற்று அந்த இலைகளை அங்கும் இங்குமாக சிதறடித்தது. காய்ந்த சருகுகளும் இலைகளும் காற்றில் அடிபட உருவான அந்த சந்தமும், இலைகளின் அசைவுகளும் பெரும் ஆடலும் பாடலும் நிறைந்த இடமாக அந்த தோட்டத்தைக் காட்டியது அரசருக்கு.

“ஆ! இதோ, தோட்டத்திற்கு உயிர் வந்துவிட்டது. காற்று தங்கமாகிவிட்டது” என்று ஆசான் அறிவித்தார்.

இதுதான் ஆசானின் பாடம் – அந்த காய்ந்த இலைகள் தான் உங்கள் நினைவுகளும், சிந்தனைகளும், அது மரமாகியை உங்களிடம் இருந்து விழுந்த பின்பு உங்கள் மனமும்,  உணர்வும் ஆடைகளைக் களைந்து வெறுமையாக நிற்கும். ஆனாலும் உங்கள் ஆழ்மனத்தின் கீழே நிலத்தில் விழுந்த இலைகளாக காற்றில் அந்த நினைவுகளும் சிந்தனைகளும் அசைந்து ஆடலாம். அவை இனி உங்களில் அங்கமில்லை. ஆனாலும் அவை தோட்டத்திலேயே இருக்கிறது. ஆனால் நீங்கள் அவற்றுக்கு மேலே இருக்கிறீர்கள், உங்களை நீங்களே அந்த நினைவுகளில் இருந்து உயர்த்திக்கொள்கிறீர்கள்.

அந்த நினைவுகளையும், சிந்தனையையும் அழிப்பது என்பது உங்களையே நீங்கள் அழிப்பதாகும். அது முடியாத காரியம். அப்படி விழுந்த இலைகளும் உங்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் வாழ்வியலின் பாதையில் ஒரு அங்கமே என்பதை புரிந்துகொள்வதே தியானமாகும்.

இதுதான் அந்த ஆசான் உன்மென் டைஷி யின் தங்கக் காற்று.

ஓஷோவின் தர்ஷான் டைரி குறிப்பில் இருந்து.