நிலவில் முதல் கால்த்தடம்

நிலாவில் ட்ராக்டர் ஓட்டும் பஸ் அல்ட்ரின் 😂🤣!

முதன் முதலில் மனிதனை நிலவுக்கு கொண்டு சேர்த்த பெருமை நாசாவின் அப்பலோ 11 திட்டத்திற்கு தான் சேரும். ஜூலை 20, 1969 இல் நடந்த இந்த நிகழ்வில், பூமியில் இருந்து அண்ணளவாக 400,000 கிமீ தொலைவில் இருக்கும் நிலவை சென்றடையச் சென்ற வீரர்கள் மூன்று பேர்.

  1. நீல் ஆம்ஸ்ட்ராங் – கமாண்டர்
  2. பஸ் அல்ட்ரின் – தரையிறங்கி பைலட்
  3. மைக்கல் கொலின்ஸ் – கட்டுபாட்டு விண்கல பைலட்
விண்வெளி வீரர்கள் மூவரும். இடப்பக்கத்தில் இருந்து: நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கல் கொலின்ஸ், பஸ் அல்ட்ரின்

இதில் முதன் முதலில் நிலவில் கால் வைத்தவர் யார் என்று குழந்தைக்கு கூட தெரியும் என்கிற அளவிற்கு நீல் ஆம்ஸ்ட்ராங்கின் பெயர் அவ்வளவு பிரபலம். நீல் இறங்கி அடுத்த 20 நிமிடங்களில் நிலவில் கால் வைத்தவர் என்கிற பெருமை பஸ் அல்ட்ரின்க்குத் தான்.

மொத்தமாக இரண்டே கால் மணி நேரம் நிலவில் உலாவி, 22kg எடையுள்ள பாறைகளை சேகரித்து இவர்கள் மீண்டும் பூமிக்கு வந்தனர்.

இதில் பாவப்பட்ட ஆசாமி மைக்கல் கொலின்ஸ் தான். நிலவைச் சுற்றி வந்த கட்டுப்பாட்டு விண்கலத்தில் இவர் இருக்கவேண்டியதால் இவர் நிலவில் தரையிறங்கவில்லை. எனவே அவ்வளவு தொலைவு சென்றும் வெறும் யன்னல் மூலம் நிலவைப் பார்த்துவிட்டு வந்துவிட்டார். ஆனாலும் எம்மை எல்லாம் விட நிலவை மிக அருகில் இருந்து பார்த்திருக்கிறார் இல்லையா? எனவே அதற்கு ஒரு சபாஸ் போடலாம்!

சட்டர்ன் V ராக்கெட்

இதுவரை நாம் உருவாக்கிய ராக்கெட்டுகளில் மிக சக்திவாய்ந்த ராக்கெட் இதுதான். 1967 இல் இருந்து 1973 வரை நாசா இதைப் பயன்படுத்தி தான் அப்பலோ திட்டங்களை வெற்றிகற்றமாக நிகழ்த்தியது.

2018 கூட இயங்கக்கூடிய நிலையில் மிக உயரமான, பாரமான, சக்தி வாய்ந்த என்கிற இதன் ரெகார்ட் முடியடிக்கப்படவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! இதனால் பூமியின் தாழ் வட்டப்பாதை (low earth orbit) இற்கு 140,000kg எடையுள்ள பொருட்களை காவிச்செல்ல முடியும்.

நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் அல்ட்ரின் ஆகியோரை நிலவுக்கு கொண்டு சேர்த்ததும் இந்த ராக்கெட் தான். மேலும் 1968 தொடக்கம் 1972 வரை மொத்தமாக 24 விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு கொண்டு சேர்த்துள்ளது.

அப்பலோ 11

புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ஜூலை 16, 1969 இல் நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது. நிலவை நோக்கிய பயணம் என்பது சில மணி நேரங்களில் முடிவதில்லை. 400,000 கிமீ எனும் தூரத்தை அடைய மூன்று நாட்கள் எடுத்தது.

அப்பலோ 11 திட்டத்தை கொண்டு செல்லும் சட்டர்ன் V ராக்கெட் புறப்படும் போது.

ஜூலை 20, 1989 இல் விண்வெளி வீரர்கள் நிலவின் சுற்றுப்பாதையை அடைகின்றனர். ஜூலை 21 இல் சுற்றுப் பாதையில் சுற்றிவரும் விண்கலத்தில் இருந்து (command module) நிலவில் தரையிறங்கும் கலத்தை (lunar module) பிரித்துக்கொண்டு நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் அல்ட்ரின் இருவரும் நிலவில் கால் பதிக்க புறப்பட்டனர். அடுத்து நடந்தவை எல்லாம் வரலாறு!

நிலவில் லூனார் கலம் தரையிறங்கி ஆறரை மணி நேரத்திற்கு பின்னர் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதன் முதலில் கால் பதித்தார்.

அவரது நிலவில் காலடி பதித்த போது கூறிய வசனம் பிரசித்தமானது.

“That’s one small step for man, one giant leap for mankind.”

நிலவில் கால் பதித்து என்பது ஒரு மனிதனுக்கு சாதாரண காலடி அளவுதான், ஆனால் மனித இனத்திற்கு இது ஒரு மைல்கல் என்பதுதான் அதன் பொழிப்பு.

நிலவில் தரையிறங்கிய lunar module.

நிலவின் மணல் பௌடர் போல மெல்லிய துணிக்கைகளாக இருப்பதாக விண்வெளி வீரர்கள் கூறினார்.

நிலவில் உலாவிய இரண்டு மணி நேரத்தில் பல பரிசோதனைக் கருவிகளை இவர்கள் நிலவில் பொருத்தினர். அதில் ஒன்று கண்ணாடி! ஆம் கண்ணாடி. பூமியில் இருந்து லேசர் கற்றைகளை நிலவு நோக்கி அடித்து, இந்த கண்ணாடியில் அது பட்டுத் தெறித்து மீண்டும் பூமியை நோக்கி வரும், அதனை துல்லியமாக அளந்து நிலவிற்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் தொலைவை கணக்கிட முடியும்.

பூமியில் நாம் கால் வைத்ததற்கு மிகப்பெரிய சான்றே இது தான். இன்றுவரை நாம் இதனை அளக்கிறோம். அதனால் தான் ஒவ்வொரு வருடமும் பூமியை விட்டு நிலவு ஒரு இன்ச் அளவு விலகிப் போகிறது என்பதனைக் எம்மால் உறுதியாக கூறக்கூடியவாறு இருக்கிறது.

மொத்தமாக 21 மணித்தியாலங்கள் 38 நிமிடங்கள் நிலவில் தங்கிவிட்டு மீண்டும் லூனார் கலத்தை பயன்படுத்தி நிலவைச் சுற்றிக்கொண்டிருந்த கட்டுப்பாட்டு விண்கலத்திற்கு இரு விண்வெளி வீரர்களும் வந்து சேர்ந்தனர். அடுத்து பூமியை நோக்கிய அவர்களது பயணம் தொடங்கிற்று.

ஜூலை 24, 1969 இல் ஹவாய் தீவில் இருந்து 1400 கிமீ மேற்கில் உள்ள கடல் பரப்பில் இவர்களது விண்கலம் பூமியில் விழுந்தது. மீட்புப் படைக் கப்பல் மூலம் இவர்கள் மீட்கப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் அமேரிக்கா வந்தடைந்தனர்.

நிலவில் இருந்து வந்த இவர்களை ஒருவரும் அவ்வளவு வேகமாக கட்டிப்பிடித்து வாழ்த்து எல்லாம் கூறிவிடவில்லை. சொல்லபோனால் 21 நாட்கள் அடைத்த குவாரண்டின் அறையில் இவர்கள் மூவரும் தங்க வைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. நிலவில் இருந்து ஏதாவது நோயை, வைரஸை இவர்கள் காவிக் கொண்டு வந்திருந்தாள் என்கிற பயம்தான்! ஆனால் அப்படியொன்றும் ஆகவில்லை.

மறுக்க முடியா வரலாறு

இன்று பலபேர் நிலவில் மனிதன் கால் பதிக்கவே இல்லை, மனிதன் தரையிறங்கியது எல்லாம் ஹாலிவூட் கலைஞர்களை வைத்து செய்த போலி வேலை என்று கூறுகின்றனர்.

இதற்குக் காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியால், ஸ்மார்ட்போன்களை நோண்டிவிட்டு, மீம்களை பார்த்துவிட்டு சுயசிந்தனை அன்று இருப்பதால் இன்றைய சமுதாயத்தின் அறிவு மங்கிப் போய்விட்டதோ என்று எனக்கு சந்தேகம் வருகிறது.

ஏன் தற்போது நாம் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதில்லை என்று கேட்கும் கேள்விக்கு பதில், அவ்வளவு காசு செலவழித்து அனுப்பவேண்டிய அவசியம் மீண்டும் வரவில்லை என்பதுதான். நிலவுக்கு மனிதனை அனுப்ப அமேரிக்கா முனைந்த காலம் பனிப்போர் இடம்பெற்ற காலம். சோவியத் ஒன்றீயத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இடம்பெற்ற நீயா நானா போட்டியில் தங்கள் தொழில்நுட்ப உயரத்தை காட்டவே அமேரிக்கா பில்லியன் கணக்கில் செலவு செய்து அப்பலோ திட்டத்தை உருவாக்கியது.

விண்வெளிக்கு முதன்முதலில் செய்மதி விட்டது சோவியத் ஒன்றியம். விண்வெளிக்கு முதன் முதலில் மனிதனை அனுப்பியது சோவியத் ஒன்றியம். எனவே நிலவுக்கு முதலில் மனிதனை அனுப்பியே ஆகவேண்டும் என்றும் தங்களது மானத்தை காக்கவேண்டும் என்றும் கங்கணம் கட்டிக்கொண்டு அமேரிக்கா கோதாவில் குதித்தால் உருவானதே இந்த அப்பலோ திட்டம்.

ஆனால் இன்று சோவியத் ஒன்றியமும் இல்லை, பனிப்போரும் இல்லை, அப்பலோ திட்டமும் இல்லை.

சற்றே சிந்தித்துப் பாருங்கள், அக்காலகட்டத்தில் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய எதிரி சோவியத் ஒன்றியம் தான் – நாசா நிலவிற்கு உண்மையில் மனிதர்களை அனுப்பவில்லை என்றால் முதன் முதலில் அதனை வெளிக்கொண்டு வர சோவியத் ஒன்றியம் தான் முன்னின்றிருக்கும். ஆனால் அவர்களின் விண்வெளிக் கழக விஞ்ஞானிகள் கூட நிலவில் இருந்து வந்த ஒளிபரப்பை பார்த்ததை நினைவு கூறுகின்றனர்.

இதற்குத் தான் வாசிப்பு முக்கியம் என்கிறேன்! வெறும் YouTube வீடியோக்களை பார்த்துவிட்டு பூமி தட்டை, நிலவில் மனிதன் இறங்கவில்லை என்று கேவலமான சதிக்கோட்பாடுகளை நம்பிவிடாமல் ஆய்ந்து பார்ப்பது முக்கியம்.

பஸ் அல்ட்ரினின் கால்தடம். நிலவில் வளிமண்டலம் இல்லை என்பதால் அழியாமல் தொடர்ந்து இருக்கும் தடம்!