உங்கள் உப்பில் பிளாஸ்டிக் இருக்கா? சூழல் மாசடைவின் அடுத்த பரிணாமம்

உலகில் உள்ள கடலுப்பு தயாரிக்கும் நிறுவனங்களில் 90% மான நிறுவனங்களின் உப்புகளில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதாக புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. கடல் உப்பில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதை பல வருடங்களுக்கு முன்னரே நாம் அவதானித்திருந்தாலும் உலகளாவிய ரீதியில் இதன் தாக்கத்தை அளப்பது இதுவே முதன்முறை.

மைக்ரோபிளாஸ்டிக் என்றால் என்ன?

பிளாஸ்டிக் கழிவுகள் பல வழிகளில் உருவாகின்றது. பிளாஸ்டிக் கப், தண்ணீர் மற்றும் குளிர்பான போத்தல்கள், ஷாப்பிங் பைகள் என்று இன்று பலதுக்கும் நாம் தங்கியிருப்பது பிளாஸ்டிக் எனும் அரக்கனிடம் தான். இதில் மைக்ரோபிளாஸ்டிக் எனப்படுவது 5 மில்லிமீட்டருக்கும் குறைவான அளவில் இருக்கும் பிளாஸ்டிக் துண்டுகளாகும்.

மைக்ரோபிளாஸ்டிக் துண்டுகள் கைவிரலில்…

பெரும்பாலும் இந்த மைக்ரோபிளாஸ்டிக் துண்டுகள் பெரிய பிளாஸ்டிக் கழிவுகள் உக்கலடையும் போது துண்டு துண்டாக உடைவதால் உருவாவதுதான். ஆனாலும் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்களில் மைக்ரோபிளாஸ்டிக் இருக்கிறது.

மைக்ரோபிளாஸ்டிக்கில் இருக்கும் பெரிய ஆபத்தே அதன் அளவுதான். நீங்கள் நிச்சயம் பிளாஸ்டிக் கப்பை கடித்து உண்ணப்போவதில்லை. ஆனால் மைக்ரோபிளாஸ்டிக் உங்கள் கண்களில் படாமலேயே உங்களுக்குள் செல்ல பல வழிகள் இருக்கின்றன.

பிளாஸ்டிக் இருக்கும் பொருட்களை கேட்டால் நீங்கள் மேலே நான் குறிப்பிட்டத்தைப் போல குறிப்பிட்டுவிடுவீர்கள். ஆனால் உங்கள் பற்பசையில் பிளாஸ்டிக் இருக்கிறது என்றால்? உங்கள் பற்பசையில் அந்த பளபளக்கும் புள்ளிகள் – போலிஎத்தலின் எனும் மைக்ரோபிளாஸ்டிக். சோப்புகள், பாடி வாஷ் என்பனவற்றிலும் போலிஎத்தலின் காணப்படுகிறது.

இதையும் தாண்டி மேக்கப் சாதனங்களில் தான் அதிகளவில் மைக்ரோபிளாஸ்டிக் பயன்படுகிறது. பவுண்டேசன், ஐ லாஸ், லிப்ஸ்டிக், மஸ்காரா என்று எல்லாத்திலும் மைக்ரோபிளாஸ்டிக் நிரம்பி வழிகிறது.

கடலில் கலக்கும் மைக்ரோபிளாஸ்டிக் ஆபத்து

பல காஸ்மடிக் பொருட்களில் மைக்ரோபிளாஸ்டிக் காணப்பட்டாலும் நாம் அதை உட்கொள்வதில்லை அல்லவா? ஆனால் கடலில் கலக்கும் மைக்ரோபிளாஸ்டிக் பல வழிகளில் எமது உணவினுள் வந்து விடுகிறது.

குறிப்பாக கடல்வாழ் உயிரினங்களின் உணவுச் சங்கிலியின் அடியில் இருக்கும் பிலாங்க்டன் இந்த மைக்ரோபிளாஸ்டிக்கை உட்கொள்ள, அதனை சிறிய மீன்கள் உட்கொள்ள, அந்த சிறிய மீன்களை பெரிய மீன்கள் உட்கொள்ள அந்த மீன்களை நாம் சாப்பிட இறுதியில் எம்மை யாரும் உண்பது இல்லை என்பதால் பிளாஸ்டிக் இறுதியில் எம்மில் சேர்ந்துவிடுகிறது.

இது போக, மைக்ரோபிளாஸ்டிக்கின் அளவு கடல் நீரில் அதிகரிப்பதால், கடல் உப்பிலும் தற்போது மைக்ரோபிளாஸ்டிக் கலந்துவிட்டது. அதிலும் குறிப்பாக ஆசிய நாடுகளில் தயாராகும் உப்பில் பிளாஸ்டிக் அளவு அதிகமாகவே இருப்பதாக Greenpeace East Asia மற்றும் தென்கொரிய ஆய்வாளர்கள் நடாத்திய புதிய ஆய்வு கூறுகிறது.

அதிலும் குறிப்பாக இந்தோனிசிய உப்பில் மிக அதிகளவில் பிளாஸ்டிக் கலந்திருக்கிறதாம்! ஆசியாவிலேயே மிக அதிகமான பிளாஸ்டிக் மாசடைவில் இருக்கும் இடம் இந்தோனேசியா.

புதிய ஆய்வு அண்ணளவாக ஒரு ஆசாமி ஆண்டுக்கு 2000 மைக்ரோபிளாஸ்டிக் துண்டுகளை உண்பதாக கணக்கிடுகிறது.

இதுவரை மைக்ரோபிளாஸ்டிக் எப்படி உடலில் பாதகங்களை விளைவிக்கிறது என்று பூரணமாக எந்தவொரு ஆய்வும் இல்லை. தற்போதுதான் இப்படியான ஆய்வுகள் தொடங்கியுள்ளன. ஆய்வாளர்கள் தற்போதுள்ள தகவல்களை மட்டும் கொண்டு எந்தவொரு முடிவுக்கும் வரமுடியாது endru

ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக இந்த ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இந்த மைக்ரோபிளாஸ்டிக் ஆபத்து, கடல்வாழ் உயிரினங்கள் தொடங்கி மனிதன் வரை பாரிய சூழலியல் மாற்றத்தை உருவாகும் என்பதுதான் அது.

நன்றி: bbc, natgeo