மனதை வெல்

ஒருமுறை மிகப்புகழ்பெற்ற, பல வில்வித்தைப்போட்டிகளில் வெற்றிபெற்ற இளம் வீரன் ஒரு ஊருக்கு வந்தபோது அங்கே வில்வித்தையில் சிறந்த ஒரு ஜென் ஆசான் இருப்பதாக கேள்விப்பட்டு அவரை போட்டிக்கு வருமாறு சவால் விட்டான். சவாலை ஏற்றுக்கொண்டு போட்டியும் நடை பெற்றது. இளம் வீரன் தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தினான். மிகத்தொலைவில் இருந்த இலக்கை மிகத்துல்லியமாக குறிவைத்து அடித்தான், அவனது அடுத்த அம்பு, முதல் எய்த அம்பை பிளந்து கொண்டு சென்றது. ஜென் ஆசானை திரும்பிப்பார்த்த வீரன், “இப்போது நீங்கள் இதற்கு சமமாக அம்பு எய்யுங்கள் பார்க்கலாம்” என்று நக்கலாக சொன்னான்.

எந்த சலனமும் இல்லாத ஆசான், அந்த வீரனைப்பார்த்து, “என் பின்னாலே வா” என்று சொல்லி, அவனை ஒரு மலைஉச்சிக்கு அழைத்துச்சென்றார். எதாவது காரணம் இருக்கும் என்றே அந்த வீரனும் அவர் பின்னால் போனான். அந்த மலைஉச்சியில் ஒரு பள்ளத்தாக்கு, அதைக்குறுக்கறுக்க ஒரு பழைய மரக்கட்டை ஒன்று மட்டுமே இருந்தது. அதுவும் இப்போவோ அப்போவோ உடைத்துவிடும் போல ஆடிக்கொண்டிருந்தது. படார் என்று அந்த மரக்கடையில் எரிய ஆசான், மரக்கட்டையின் நடுப்பகுதிக்கு சென்று, அங்கிருந்தவாறே தனது வில்லை எடுத்து அதில் அம்பு பொருத்தி, தொலைவில் இருந்த மரமொன்றை குறிபார்த்து எய்தார். அதுவும், சோய் என்று சரியாக மரத்தில் குத்திற்று.

கட்டையில் இருந்து இறங்கிய ஆசான், அந்த வீரனைப்பார்த்து, இப்போது உனது முறை என்று வழிவிட்டு நின்றார். கட்டையில் ஒரு காலை வைத்து எட்டி குனிந்து பார்த்த வீரனுக்கு அந்தப்பாதாளத்தின் அடியே தெரியவில்லை, அந்தக்கட்டையில் ஏறவே பயப்பட்ட அவனால் எவ்வாறு அதில் ஏறி, நடுப்பகுதிக்கு சென்று குறிவைத்து அம்பெய்வது. தயங்கி நின்றான்.

அப்போது அந்த ஜென் ஆசான் சொன்னார், “நீ வில்வித்தையில் சிறந்தவனாக இருக்கலாம், அம்பின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் அறிந்து வில்வித்தை வென்றிருக்கலாம், ஆனால் அந்த அம்பை உனது வில்லில் இருந்து விடுவிக்கும் மனத்தை நீ இன்னும் வெல்லவில்லை”.

ஜென் கதைகளில் இருந்து கொஞ்சம் பெரிதாக்கி தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்.

சிறி சரவணா