டாக்டர் மிச்சியோ காகுவின் கட்டுரை, “The Physics of Extraterrestrial Civilizations” இன் தமிழாக்கம். சில புதிய விடயங்களையும் சேர்த்து எனது பாணியில் இங்கு தருகிறேன். கட்டுரை சற்று நீளமாக இருப்பதால், பகுதிகளாக எழுதுகிறேன்.
காலம்சென்ற பிரபல வானியலாளர், கார்ல் சேகன் ஒரு மிக முக்கியமான கேள்வியை முன்வைத்தார்.
“மில்லியன் வருடங்கள் வாழ்ந்துவிட்ட நாகரீகங்கள் எப்படி இருக்கும்? எம்மிடம் இப்பொது ரேடியோ தொலைகாட்டிகள், விண்வெளி ஓடங்கள் என்பன சில தசாப்தங்களாக மட்டுமே உண்டு; எமது தொழில்நுட்ப நாகரீகம் வெறும் சில நூற்றாண்டுகள் மட்டுமே கண்டது. இப்படி இருக்கும் போது, சில பல மில்லியன் வருடங்களாக இருக்கும் தொழில்நுட்ப நாகரீகங்கள் எப்படி இருக்கும்? அவற்றுக்கு நாம், அதாவது இந்த மனித இனம் குரங்குபோல தெரியுமோ?”
இன்றுவரை விடை தெரியாத ஒரு குருட்டு விடயமாக இருப்பது என்னவென்றால், இந்த விரிந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டுமா இருக்கிறோம் என்பதே. பூமியைத் தவிர வேறு எங்கும் உயிர் இருப்பதற்கான எந்தவொரு தடயமும் இல்லாதிருப்பினும், இந்த பாரிய பிரபஞ்சத்தில் நிச்சம் எம்மைப் போலவே வேறு அறிவுள்ள உயிரினங்கள் இருக்கவேண்டும் என்பது பெரும்பாலான அறிவியலாளர்களின் கருத்து.
இப்போதைக்கு இப்படியான வேற்று கிரக நாகரீகங்களை அவதானிக்க முடியாவிட்டாலும், எம்மால் நிச்சயம், நாம் அறிந்த அறிவியல், இயற்பியல் விதிகளைப் பயன்படுத்தி, ஒரு நாகரீகத்தில் இருக்கக்கூடிய விடயங்களை கணிக்க முடியும். நாம் இப்போது தெரிந்து வைத்துள்ள குவாண்டம் இயற்பியல், பொதுச் சார்புக்கோட்பாடு, மற்றும் வெப்பஇயக்கவியல் விதிகளைப் பயன்படுத்தி, நம்மை விட காலத்தால் முற்பட்ட நாகரீகங்கள் எந்தளவு பெரிதாக இருக்கும் என்றும், அவற்றின் தொழில்நுட்ப எல்லை என்னவென்றும் எம்மால் ஊகிக்க முடியும்.
“பூமியைவிடவும் வேறு எங்கும் உயிர்கள் உண்டா?” எனக் கேட்கப்படும் கேள்வி வெறும் ஊகத்தினால் வந்த கேவியாக இருந்தாலும், இப்போது நாம் நமது சூரியத்தொகுதிக்கு வெளியே பல கோள்களை கண்டறிந்துகொண்டு இருக்கிறோம். சிலவேளைகளில், கூடிய விரைவிலேயே வேற்றுகிரக உயிரினங்களுக்கான ஆதாரங்களையும் கண்டுபிடித்துவிடலாம். வியாழனைப் போல காற்று அரக்கனாக பல கோள்கள் இருந்தாலும், பூமியைப் போல ஒத்த கோள்களையும் நாம் கண்டு பிடித்துள்ளோம். இனிவரும் காலங்களில் நாம் இரவு வானைப் பார்க்கும் போது, அது நமது முன்னோர்கள் பார்த்த பார்வையை ஒத்ததாக இருக்காது. எதிர்காலத்தில் வானில் தெரியும் அந்தப் நட்சத்திரப் புள்ளிகளை சுற்றிவரும் கோள்களில் இருக்கும் உயிரினகளின் அமைப்பைப் பற்றிய கலைக்களஞ்சியம் எம்மிடம் இருக்கலாம்.
சரி, இப்படி இருக்கும் கோள்களில் இருக்கும் முன்னேறிய நாகரீகங்களின் துல்லியமான அம்சங்களை எம்மால் எம்மால் எதிர்வுகூற முடியாவிட்டாலும், அவற்றின் அடிப்படை அம்சங்களை எம்மால் கோடிட்டு காட்டிவிட முடியும். ஒரு நாகரீகம் எவ்வளவுதான் தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அடிப்படை இயற்பியல் விதிகளை அவைகளால் மீற முடியாது. நாம் இன்று அணுத்துகள்கள் தொடக்கம், விண்மீன் பேரடை வரை உள்ள இயற்பியல் விதிகளை நன்கு தெரிந்து வைத்திருப்பதால், எம்மால் நிச்சயமாக அறிவியல் தளத்துக்கு உட்பட்டு இந்த முன்னேறிய நாகரீகங்கள் எப்படி இருக்கலாம் என்று ஆராய முடியும்.
நாகரீகங்களின் தரப்படுத்தல் – வகை 1, 2, 3 நாகரீகங்களின் இயற்பியல் அடிப்படைகள்
ஒரு நாகரீகத்தை, அதன் சக்தி தேவைப்பாட்டை கொண்டு பின்வரும் காரணிகளின் அடிப்படையில் எம்மால் வகைப்படுத்த முடியும்.
- வெப்பஇயக்கவியலின் (thermodynamics) தத்துவங்களின் அடிப்படையில்: எவ்வளவு முன்னேறிய நாகரீகங்கள் கூட வெப்பஇயக்கவியலை, அதுவும் வெப்பஇயக்கவியலின் இரண்டாவது விதியை மீறிவிட முடியாது.
- நிலையான பருப்பொருளின் தத்துவ விதிகள்: பொதுவான அணுக்கள் சார்ந்த பருப்பொருட்கள், கோள்கள், நட்சதிரங்கள் மற்றும் நட்சத்திரப் பேரடைகள் ஆகிய மூன்று அம்சங்களாக இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படுகின்றன. ஆக ஒரு நாகரீகத்தின் சக்திமுதலாக ஒன்றில் கோள், அல்லது நட்சத்திரம் அல்லது நட்சத்திரப் பேரடை காணப்படலாம்.
- கோள்களின் பரிமாண வளர்ச்சித் தத்துவங்கள்: ஒரு வளர்ந்த நாகரீகத்தின் சக்தித் தேவையானது, அந்த நாகரீகம் இருக்கும் கோளில் ஏற்படும் பாரிய உயிர்ப் பேரழிவுகளை (விண்கல் மோதல், சுப்பர்நோவா போன்றவை) விட அதிகமாக / வேகமாக இருக்கவேண்டும். அப்படி இல்லாவிடில் அந்த நாகரீகம், முழு உயிரினப்பேரழிவில் மாட்டிக்கொள்ளக்கூடும்.
1964 இல் வெளிவந்த ‘சோவியத் விண்ணியல்’ சஞ்சிகையில், நிகோலாய் கர்டாசிவ், மேற்சொன்ன அடிப்படையில் நாகரீகங்களை பின்வருமாறு மூன்று வகையாக பிரித்தார். வகை 1, வகை 2, மற்றும் வகை 3. இந்த வகையான நாகரீகங்கள், தாங்களின் சக்தித் தேவையைப் பொறுத்து வகைப் படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது நிகோலாய் கர்டாசிவ், இந்த நாகரீகங்களுக்கு இடையிலான சக்தி தேவையின் இடைவெளி பல பில்லியன் மடங்கு இருக்கும் எனவும் கணித்தார்.
சரி நமது நாகரீகத்தை இந்த அடிபடையில் பொருத்திப் பார்ப்போமா?
நமது பூமியானது சூரியனது மொத்த சக்தியில், ஒரு பில்லியனில் ஒரு பங்கை மட்டுமே பெறுகிறது, அதிலும் மனிதன், மில்லியனில் ஒரு பங்கை மட்டுமே பயன்படுத்துகிறான். இது டான் கோல்ட்ஸ்மித் என்ற வானியலாளர் கூறியது. அதாவது நாம், 1/1,000,000,000,000,000 பங்கு சூரிய சக்தியையே பயன்படுத்துகிறோம். அதிலும் நாம் பூமியில் மொத்தமாக உருவாகும் சக்தி ஒரு செக்கனுக்கு நூறு பில்லியன் ஜூல்ஸ்.
நமதி இந்த சக்தி தேவையும், உற்பத்தியும் மிகவேகமாக அதிகரித்து வருகிறது, இதிலிருந்து எம்மால் வகை 2, வகை 3 நாகரீகங்களை எப்போது அடைவோம் என்று கணக்கிடமுடியும்.
வானியலாளர் கோல்ட்ஸ்மித் பின்வருமாறு கூறுகிறார், “நாம் இன்று படிம-எரிபொருட்களை பயன்படுத்தக் கற்றுக்கொண்டுள்ளோம், நீரில் இருந்து எப்படி மின்சாரம் தயாரிப்பது என்று அறிந்துள்ளோம். இந்த குறுகிய காலத்தில் எவ்வளவு முன்னேறி உள்ளோம் என்பது நாம் கண்கூடாக அவதானித்த ஒன்று. சில நூற்றாண்டு காலமாக தான் எமக்கு இந்த சக்தி முதல்கள் எல்லாம் தெரியும், சிந்தித்துப் பாருங்கள், நம் பூமி அண்ணளவாக 4.5 பில்லியன் ஆண்டுகளாக இருக்கிறது, மனித இனம், சில லட்சம் ஆண்டுகளாக இருக்கிறது, நாகரிக மனிதன் என்றால் கூட ஐந்தில் இருந்து பத்தாயிரம் வருடங்கள் வரை இருக்கும், ஆனாலும் கடந்த சில நூற்றண்டுகளாகத்தான் எம்மால் இந்த அளவுக்கு சக்தியை உருவாக்கவும் பயன்படுத்தவும் முடிந்துள்ளது. இதே போன்ற கருத்தை நாம் வேற்றுகிரக நாகரீகங்களுக்கும் பொருத்திப்பார்க்கலாம்.”
இயற்பியலாளர் ப்ரீமன் தய்சன் (Freeman Dyson), நமது நாகரீகத்தின் சக்தித் தேவையும், சக்தி உற்பத்தி செய்யும் அளவையும் வைத்து, நாம் இன்னும் ஒரு 200 வருடங்களில் வகை 1 நாகரீகமாக மாறிவிடுவோம் என்று கணக்கிட்டுள்ளார். இதுமட்டும் இல்லது, வருடத்துக்கு 1% படி சக்தி உற்பத்தியில் நாம் வளர்ந்தால், இன்னும் 3200 வருடங்களில் வகை 2 நாகரீகமாக மாறிவிடலாம் என்றும், அதுவே 5800 வருடங்களில் வகை 3 நாகரீகமாகவும் மாறிவிடலாம் என்று நிகோலாய் கர்டாசிவ் கணக்கிட்டார்.
தொடர்ந்து வேற்றுகிரக நாகரீகங்களைப் பற்றிப் பார்ர்க்கலாம்.