வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3

இந்தப் பிரபஞ்சம் மிக மிக பெரியது, அதுவும், இரண்டு நட்சத்திரங்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளி ஒளியாண்டுகள் தூரத்தில் அளவிடப்படுகிறது. அதுமட்டும் அல்லாது, அதிகமான நட்சத்திரத்தொகுதிகள், உயிரினம் வாழ தகுதியற்ற கோள்களையே கொண்டுள்ளன. ஆகவே மூன்றாம் வகையை சேர்ந்த நாகரீகமானது, எண்ணிலடங்கா நட்சத்திர, கோள்த் தொகுதிகளை ஆய்வு செய்ய மிகச்சரியான முறையை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி எவ்வாறான முறையைப் பயன்படுத்தி பில்லியன் கணக்கான நட்சத்திரங்களையும், கோள்களையும் ஆராய முடியும்?

நாம் அடிக்கடி அறிவியல் புனைக்கதைகளிலும், திரைப்படங்களிலும் பார்த்திருப்போம், ஒரு விண்கப்பல், அதில் ஒரு ஐந்து பேர்கொண்ட குழு, அவர்கள் எதோ ஒரு கோளை நோக்கி பயணிப்பார்கள். ஆனால் இந்த முறை நடைமுறைக்கு ஒத்துவராது. பில்லியன் கணக்கான நட்சத்திரங்களையும் கோள்களையும் ஆராய இப்படி பெரிய பெரிய விண்கலங்களையும் மனிதர்களையும் அனுப்புவதென்பது முடியாத காரியம்.

பூமியின் தற்போதைய சனத்தொகை 7 பில்லியன். நமது பால்வீதீயில் இருக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை 200 பில்லியனை விட அதிகம், ஆக, இப்போது பிறந்த குழந்தை குட்டிகளையும் ஒவ்வொருவருக்கும் ஒரு விண்கலம் என்று ஏற்றி அனுப்பினால் கூட, பால்வீதியில் உள்ள 10% ஆன நட்சத்திரங்களை கூட ஆராய முடியாது! எனவே நமக்கு தேவை “வான் நியூமான் ஆய்வி” (Von Neumann probes).

அதென்ன வான் நியூமான் ஆய்வி? பார்ப்போம். இவை ஒரு விதமான ரோபோ காலங்கள். தன்னைப் போல பல பிரதிகளை உருவாக்கக் கூடிய வல்லமை படித்தவை. வான் நியூமான் என்ற கணிதவியலாலரால் முன்மொழியப் பட்ட கணித விதிகளுக்கு அமைய இவை செயற்படுவதால், அவரது பெயரையே இந்த ரோபோக்களுக்கு வைத்துவிட்டனர்.

வான் நியூமான் ஆய்விகள் தொலைவில் இருக்கும் நட்சத்திரத்தொகுதிகளுக்கு செல்லும் வண்ணம் வடிவமைக்கப் பட்டவை. மண் துணிக்கை அளவே உள்ள இவை நட்சத்திரதொகுதியை அடைந்து அங்குள்ள கோள்களிலோ அல்லது துணைக்கோள்களிலோ தொழிற்சாலைகளை அமைத்து, தம்மைப் போலவே பல பிரதிகளை உருவாக்கும். கோள்களை விட இவை இறந்துபோன துணைக்கோள்களையே, அதாவது நமது நிலவைப் போல, தெரிவு செய்யும், ஏனெனில் அவை சிறிதாக இருப்பதனால் ஈர்ப்பு விசை குறைவு, ஆகவே பறப்பதற்கு இலகுவாக இருக்கும். மற்றும் துணைக்கோள்களில் காலநிலை மாற்றங்கள் இல்லாதிருப்பதும் ஒரு முக்கிய காரணி. அந்த துணைக்கோள்களில் கிடைக்கும் நிக்கல், இரும்பு போன்ற தாதுப் பொருட்களை வைத்தே, இவை தொழிற்சாலைகளை உருவாக்கி தம்மைப் போல ஆயிரக்கணக்கான பிரதிகளை இலகுவாக செய்துகொள்ளும். பின்பு இப்படி புதிதாக உருவாக்கப்பட்ட ஆய்விகள், மீண்டும் வேறு நட்சத்திரத் தொகுதிகளை நோக்கி தனது பயணத்தை தொடங்கும். இப்படி அங்கு சென்று அங்குள்ள துணைக்கோள்களில் தொழிற்சாலைகளை உருவாக்கி… மீண்டும் மீண்டும் அதே செயற்பாடு… மீண்டும் அதே போல வேறு நட்சத்திரத்தொகுதிகளை நோக்கி பயணம்.

வைரஸ் பரவுவதுபோல இந்த வான் நியூமான் ஆய்விகள், ட்ரில்லியன் கணக்கில் எல்லாத் திசைகளிலும் பரவிச் செல்லும். இந்த வேகத்தில் இவை பரவிச்சென்றால், 100,000 ஒளியாண்டுகள் விட்டமுள்ள ஒரு நட்சத்திரப் பேரடையை, அதாவது நமது பால்வீதியைப் போன்ற ஒரு நட்சத்திரப் பேரடையை, அரை மில்லியன் வருடங்களில் முழுவதுமாக அலசி ஆராய்ந்துவிட முடியும்.

43953026e09a2c73c6cb5fbc372982b8.1000x454x1

இப்படி பல நட்சத்திர தொகுதிகளுக்கு பரவிய வான் நியூமான் ஆய்விகள், அங்கு உயிரினங்களை கண்டறிந்தால், அதுவும் அடிப்படையான நாகரீகங்களை, அதாவது நம்மைப் போல பூஜ்ஜிய வகை நாகரீகங்களை கண்டறிந்தால், அவற்றுக்கு தங்களின் இருப்பை தெரிவிக்காமல், துணைக்கோள்களில் இந்த வான் நியூமான் ஆய்விகள் இருந்துவிடக் கூடும். அப்படி அங்கு இருந்தவாறே இந்த அடிப்படை நாகரீகம், குறைந்தது முதலாம் வகையை அடையும் வரை கண்காணித்துக் கொள்ளக்கூடும்.

இயற்பியலாளர் பவுல் டேவிஸ், நமது சந்திரனிலும் இப்படியான வான் நியூமான் ஆய்விகள் இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார். அதாவது வேறு ஒரு தொழில்நுட்பத்தில் வளர்ந்த மூன்றாம் வகையை சேர்ந்த நாகரீகம், எனது நிலவுக்கும் இப்படி வான் நியூமான் ஆய்விகளை, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அனுப்பி இருக்கக்கூடும். அவை இப்போது நிலவில் தூங்கிக்கொண்டிருக்கலாம். ஆனால் இவற்றைக் கண்டுபிடிப்பது அவ்வளவு இலகு அல்ல. இதற்கு காரணம் இவை மிக மிக சிறியவை, நாம் முழுச் சந்திரனையும் சோதிக்கவேண்டும், மற்றும் இவற்றின் தொழில்நுட்பம் எப்படிப்பட்டது என்பதை அறியாமல் தேடுவது என்பது, கடலில் ஊசியைப் போட்டுவிட்டு தேடுவதைப் போன்றதே.

இப்போது எம்மிடம் இருக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதை தேட முடியாது, ஆனால் எதிர்காலத்தில் நிச்சயம் இந்த வான் நியூமான் ஆய்விகள் சந்திரனில் இருக்கிறதா என்று தேடிப்பார்க்கலாம் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

அடுத்த பகுதியோடு முற்றும்.

முன்னைய பகுதிகள்

  1. வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1
  2. வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 2