இன்று கணணியைப் பாவிப்பதில் நமது அளவு அதிகரித்துவிட்டது என்றே சொல்லவேண்டும். அதற்கேற்ப கணனியில் நாம் சேமித்து வைத்திருக்கும் கோப்புக்களின் அளவும் அதிகரித்துள்ளது. நான் முதன் முதலில் கணணியைப் பார்த்தது 1995 இக்கு பிறகுதான், அண்ணனுக்காக கொண்டுவரப்பட்ட கணனியில் இருந்த ஹர்ட்டிஸ்க்கின் கொள்ளளவு வெறும் 350MB தான். பிறகு அது பழுதாகவும், புதிதாக வாங்கிய ஹர்ட்டிஸ்க் 2.5GB! அது அந்தக் காலம்.
இன்று நாம் பயன்படுத்தும் ஹர்ட்டிஸ்க்களின் அளவு டெர்ராபைட் அளவுகளில் அதாவது ஆயிரக்கணக்கான Gigabyte அளவுகளில் கிடைகிறது. இருந்தும் நம் தேவை அதையும் தாண்டி இருக்கிறது.
இனைய வளர்ச்சியில் இடம்பெற்ற பல்வேறு விடயங்களில் இந்த கிளவுட் சேமிப்பும் ஒரு முக்கியமான அங்கமாகிவிட்டது. அதாவது நமது கணனியில் தகவல்களை சேமித்து வைப்பதைப் போல, நாம் வேறொரு இடத்தில் அந்த தகவல்களை சேமித்து வைத்து, இணையத்தின் மூலம் அதனை பயன்படுத்திக்கொள்ளும் முறை இந்த கிளவுட் சேமிப்பு. இதில் பல நன்மைகளும் உண்டு அதேபோல சில பல தீமைகளும் உண்டு.
நன்மைகள் என்று பாத்தால், உங்கள் கணையில் இருக்கும் ஹர்ட்டிஸ்க் பழுதடைந்தாலும், இந்த கிளவுட் சேமிப்பில் இருக்கும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும். மற்றையது பாதுகாப்பு. இந்த கிளவுட் சேமிப்பு சேவையை வழங்கும் நிறுவனங்கள், தங்களது சேமிப்பு பகுதியை மிகவும் சிரத்தையாக ஹக்கர்களிடம் இருந்தும் வைரஸ் போன்ற வஸ்துக்களிடம் இருந்தும் பாதுகாகின்றனர்.
தீமைகள் என்று பார்த்தால் நீங்கள் சேமித்து வைக்கும் தகவல்கள் உங்கள் தனியுரிமைக்கு உட்பட்டதா என்று பார்க்கவேண்டும். பொதுவாக இந்த சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், நீங்கள் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை, அந்த நிறுவன தொழிலாளர்கள் பார்ப்பததை தடை செய்திருப்பினும். நாளை ஒரு கட்டத்தில் உங்கள் தகவல்களை ஒரு அரசாங்கம் கேட்கும் இடத்து அதை கொடுக்கவேண்டிய கட்டாயத்திற்கும் அது ஆளாகலாம்.
சில கிளவுட் சேமிப்பு வழங்கிகள் குறியாக்க முறை (encryption) மூலம் உங்கள் தகவல்களை பாதுகாக்கின்றன. இதனால் உங்கள் கிளவுட் சேமிப்பில் என்ன தகவல்கள் இருக்கின்றன என்று உங்களைத் தவிர அவர்களுக்கு தெரியாது.
இப்படி பல குறை நிறைகள் இருந்தாலும், இந்த கிளவுட் சேமிப்பு பல்வேறு வழிகளில் நமது வேலைகளை இலகுபடுத்துகிறது என்று தான் கூறவேண்டும். உதாரணமாக, இலகுவாக நண்பர்களுடன் சில பல கோப்புக்களை ஷேர் செய்யவும், ஈமெயில் மூலம் அனுப்ப முடியாத கோப்புக்களை இந்த கிளவுட் சேமிப்பு மூலம் நம்மால் இலகுவாக பகிர்ந்துகொள்ள முடியும்.
இப்போதுள்ள ஸ்மார்ட்போன் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் அப்படியே கிளவுட் சேமிப்பில் சேமிப்பதன் மூலம், உங்கள் வேறு கணனியில் இருந்தும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்தப் பதிவின் நோக்கம், இப்படியான கிளவுட் சேமிப்பை வழங்கும் சேவைகளைப் பற்றிப் பார்ப்பதே. இன்று தகவல் தொழில்நுட்ப சேவையில் முன்னணியில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் இப்படியான கிளவுட் சேமிப்பு வசதிகளை வழங்குகிறது. ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் கூகிள் எல்லாமே. ஒன்றொன்றாக பார்க்கலாம்.
Dropbox
உண்மையிலேயே Dropbox தான் இந்த கிளவுட் சேமிப்பு யுகத்தையே ஆரம்பித்து வைத்தது எனலாம். இந்த சேவை வந்தபிறகுதான் மக்களுக்கு, இந்த கிளவுட் சேமிப்பு எவ்வளவு இலகுவானது என்று தெரியவந்தது.
Dropbox இலவசமாக 2GB கிளவுட் சேமிப்பகத்தை உங்களுக்கு தருகிறது. அதேபோல மாதம் ஒன்றுக்கு $9.99 இற்கு 1000GB அல்லது 1TB சேமிப்பகத்தையும் இது வழங்குகிறது. Dropbox கணக்கை நீங்கள் உருவாக்கிய பின்னர், அதனது சாப்ட்வேரை உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளலாம். பின்னர் நீங்கள் Dropbox ஐ ஓபன் செய்து அதில் எதாவது கோப்பை போட்டுவிட்டால், அது தானாக கிளவுட் சேமிப்பகத்தில் சேமிக்கப்பட்டுவிடும்.
இது விண்டோஸ், மாக், லினக்ஸ் மற்றும் ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் மற்றும் விண்டோஸ் போன் ஆகிய இயங்குமுறைகளுக்கு கிடைக்கிறது.
Dropbox கணக்கை உருவாக்க இங்கு கிளிக் செய்யவும்.
OneDrive
இது மைக்ரோசாப்ட்இன் சேவை, நீங்கள் சிலவேளை SkyDrive என்று கேள்விப்பட்டு இருக்கலாம். இதைதான் இப்பது OneDrive என்று பெயர் மாற்றி இருக்கிறார்கள். நீங்கள் விண்டோஸ் 8 அல்லது 8.1 பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சேவை உங்கள் கணனியில் ஏற்கனவே இருக்கிறது. OneDrive என்று தேடிப்பாருங்கள் அல்லது உங்கள் டாஸ்க்பாரில் இரண்டு மேகங்கள் இருப்பதுபோல ஒரு ஐகன் தெரியும். அதுதான் OneDrive.
OneDrive இலவசமாக 15GB கிளவுட் சேமிப்பகத்தை தருகிறது! அதுமட்டுமல்லாது 100GB இற்கு மாதாந்தம் $1.99 ம், 1000GB இற்கு மாதாந்தம் வெறும் $6.99 டொலர் மட்டுமே.
OneDrive இல் இருக்கும் ஒரு மிகப்பெரிய அனுகூலம், இது மைக்ரோசாப்ட் ஆபீஸ் வெப் பதிப்பை கொண்டிருப்பது. நீங்கள் மைக்ரோசாப்ட் ஆபீஸ் கோப்புக்களை OneDrive இல் வைத்திருந்தால், அவற்றை உங்களால் உங்கள் கணனியில் ஆபீஸ் ப்ரோக்ராம் இல்லாமலேயே, OneDrive மூலம் ஓபன் செய்து எடிட் செய்துகொள்ள முடியும்!
நீங்கள் மைக்ரோசாப்ட் கணக்கு அல்லது லைவ்.காம் ஈமெயில் கணக்கு அல்லது அவுட்லுக் ஈமெயில் கணக்கு என்று எதாவது ஒன்றை வைத்திருந்தால், OneDriveஇக்கு என்று தனியாக கணக்கு திறக்கவேண்டியதில்லை.
அதுமட்டுமல்லாது, OneDrive இலவசமாக உங்கள் இலவச சேமிப்பகத்தின் அளவை அதிகரிக்க சில வழிகளையும் தருகிறது.
- நீங்கள் உங்கள் விண்டோஸ் போன் கேமரா மூலம் எடுக்கும் படங்களை OneDriveஇல் சேமித்தால் உங்களுக்கு இலவசமாக 3GB கிடைக்கும்!
- நீங்கள் OneDrive பற்றி உங்கள் நண்பருக்கு சொல்லி அவர் OneDrive கணக்கை ஆரம்பித்தால் உங்களுக்கு 500MB இலவசமாக கிடைக்கும், இப்படி ஆகக்கூடியது 10 நண்பர்களை நீங்கள் இணைத்து 5GB இலவசமாக பெறலாம்.
OneDrive கணக்கை உருவாக்க இங்கு கிளிக் செய்யவும்.
Google Drive
இது கூகிள் நிறுவனத்தின் சேவை. இதுவும் இலவசமாக 15GB வரை கிளவுட் சேமிப்பு வசதியை தருகிறது! அதேபோல 100GB இற்கு $1.99ம், 1000GB இற்கு $9.99ம் வசூலிக்கிறது.
OneDrive போலவே கூகிள் டிரைவ், அதனது சொந்த கூகிள் டாக்ஸ் என்ற ஆபீஸ் ப்ரோக்ராம்களை தன்னகத்தே கொண்டுள்ளது, ஆக நீங்கள் கூகிள் டாக்ஸ் பயன்படுத்துபவராக இருந்தால், கூகிள் டிரைவ் உங்களுக்கு மிக இலகுவான ஒரு தேர்வாக இருக்கும்.
அதுமட்டுமல்லாது, நீங்கள் ஏற்கனவே ஒரு ஜிமெயில் கணக்கு வைத்திருந்தால், இந்த கூகிள் டிரைவ்இற்கு என்று தனியாக கணக்கு திறக்க வேண்டியதில்லை. அது மட்டுமல்லாது நீங்கள் ஜிமெயிலை பயன்படுத்தி, 20MB இற்கும் பெரிய கோப்பு ஒன்றை அனுப்பும் போது அது தானாகவே கூகிள் டிரைவ் மூலம் ஷேர் செய்யப்பட்டு அனுப்பப்படும்.
கூகிள் டிரைவ், கூகுளின் பல்வேறு சேவைகளில் இணைக்கப்பட்டுள்ளது.
கூகிள் டிரைவ் கணக்கை உருவாக்க இங்கு கிளிக் செய்யவும்.
இது மூன்றும் புகழ்பெற்ற கிளவுட் சேவை வழங்குனர்கள் என்றாலும், அமேசான், பாக்ஸ் ஸ்பைடர்ஓக் போன்ற பல நிறுவனங்கள் இப்படியான சேவைகளை வழங்குகின்றன. ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட கிளவுட் சேமிப்பகங்கள் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தும் சேவைகளை தங்களுக்குள் அடக்கி இருப்பதால், உங்களுக்கு அவற்றைப் பயன்படுத்துவது இலகுவாக இருக்கும்.