செவ்வாயில் கடலா?

செவ்வாய்க் கோளில் கடல் இருந்ததற்கு அடையாளம் இருப்பதாக NASA மற்றும் ESO ஆய்வாளர்கள் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அதாவது செவ்வாயில் நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்பு அதனது வட அரைகோளத்தில் பாதியளவு இந்த கடல் இருந்ததாம். அண்ணளவாக முழுச் செவ்வாயையும் 140 மீற்றர் அளவு ஆழத்திற்கு நிரப்பக்கூடியளவு நீர். இப்போது இல்லை, பெரும்பாலும் எல்லாம் விண்வெளிக்கு போய்விட்டது. செவ்வாய் இப்போது ஒரு பாலைவனம் தான்.

இந்த அளவு நீர் இருந்ததை எப்படி இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்பது தான் கொஞ்சம் வியக்க வைக்கும் விடயம். இவர்கள் செவ்வாயில் ஊர்ந்து திரியும் தளவுளவிகளையோ அல்லது செவ்வாயை சுற்றி ரவுண்டு அடிக்கும் விண்கலங்களையோ பயன்படுத்தி செவ்வாயில் இருந்த கடலை கண்டுபிடிக்கவில்லை. மாறாக இங்கு நாசாவிற்கு சொந்தமான ஹவாயில் இருக்கும் Infrared Telescope Facility மற்றும் ESO விற்கு சொந்தமான சில்லியில் இருக்கும் VRT தொலைக்காட்டி மூலம் தான் இதை கண்டறிந்துள்ளனர். தொழில்நுட்ப மற்றும் அறிவியல் வளர்ச்சி அந்தளவுக்கு இருக்கிறது.

செவ்வாயில் இருந்த இந்தக் கடல் கிட்டத்தட்ட பூமியில் இருக்கும் ஆர்டிக் சமுத்திரத்தின் அளவுக்கு இருக்குமாம். 20 மில்லியன் கணக்கிலோமீட்டர்கள் அளவு நீர் இருந்திருக்கவேண்டும் என்றும் கணக்கிட்டுள்ளனர்.

இன்று செவ்வாயில் இரண்டுவிதமான நீர் மூலக்கூறுகள் காணப்படுகின்றன. ஒன்று நமக்கு பரிட்சியமான நீர், அதான் H2O. இரண்டு ஹைட்ரோஜன் அணுக்களும் ஒரு அக்சிஜன் அணுவாலும் ஆக்கப்பட்ட நீர் மூலக்கூறு. மற்றது HDO, இதக் குறைக் கனநீர் என்று அழைகின்றனர். இது ஒரு ஹைட்ரோஜன் ஒரு தியுற்றியம் மற்றும் ஒரு அக்சிஜன் அணுவால் ஆக்கப்பட்டது. டியுற்றியம் ஹைட்ரோஜனின் ஒரு சமதானி.

பூமியிலும் இந்த HDO காணப்படுகிறது. இங்கு இருக்கும் சமுத்திரங்களில் இருக்கும் 3200 H2O மூலக்கூறுகளுக்கு ஒரு HDO மூலக்கூறு என்ற விகிதத்தில் உண்டு. ஆனால் செவ்வாயில் கொஞ்சம் கூட காணப்படுகிறது. இதற்கு காரணம் H2O வை விட HDO கொஞ்சம் அடர்த்தியானது, ஆக HDO ஆவியாகிவிடுவதைக் காட்டிலும் வேகமாக H2O ஆவியாகிவிடும். எனவேதான் பூமியில் H2O விற்கும் HDO விற்கும் இருக்கும் விகிதாசாரத்தைவிட செவ்வாயில் அதிகமாக காணப்படுகிறது.

அடுத்த விடயம், இந்த கடல் இருந்த காலத்தில் செவ்வாயில் சிறிய காலநிலை மாற்றம் கூட இருந்ததாம். ஆக உயிர்வாழத் தேவையான காரணிகள் அப்போது இருந்திருக்க வாய்ப்புக்கள் இருந்திருக்கலாம். ஆனால் இன்று அது ஒரு இறந்த பாலைவனக் கோள். ஆனாலும் செவ்வாயின் மேட்பரபுக்கு கீழாக இன்னும் நீர் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

இன்னும் நிறைய ஆய்வு செய்யவேண்டி உள்ளது மட்டும் உறுதி. கீழே இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றிய நாசாவின் வீடியோ. (ஆங்கிலத்தில்)