எழுதியது: சிறி சரவணா
இந்தப் பதிவில் கொஞ்சம் வரலாற்றையும் பார்க்கலாம். நமக்கு கொஞ்சம் தூக்கலாகவே பரீட்சியமான வரலாற்றுப் பெயர், மாவீரன் அலக்சாண்டர். நமது உள்ளூர் வரலாற்றில் இடம்பெராவிடினும், இவனது மாவீரமும், துணிச்சலும் அக்காலத்திலேயே ஐரோப்பாவில் இருந்து தற்கால பாகிஸ்தான் வரை தனது ஆட்சியை நிலைநிறுத்திய விதமும் இவனை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய சாதனைகள் எனலாம்.
தனது 13 வருடகால ஆட்சியில் (கிமு 336 – 323) கிரேக்கம் தொடங்கி, எகிப்து, துருக்கி, ஈரான் மற்றும் பாகிஸ்தான் வரை படையெடுத்து வெற்றிகண்ட மாவீரன் அலக்சாண்டர் III, மக்கேடோன் நாட்டைச் சேர்ந்தவன். வரலாற்றின் தலைசிறந்த இராணுவத் தலைவன் என்று பல வரலாற்று ஆசிரியர்கள் இவனைக் கருதுகின்றனர்.
32 வயதிலேயே இறந்த இவனைப் பற்றி பல உண்மைக்கதைகளும் புனைவுக்கதைகளும் பரவலாகஉண்டு. நாம் அதில் சில சம்பவங்களைப் பார்க்கலாம்.
அலக்சாண்டருக்கு கல்வி புகட்டியவர், கிரேக்க வரலாற்றில் முக்கிய அறிஞர் அரிஸ்டாட்டில்! அலக்சாண்டர் 13 வயதாக இருக்கும் போதே, அவனது தந்தை, மக்கேடோனின் பிலிப் II, அரிஸ்டாட்டிலை அழைத்து அலக்சாண்டருக்கு கற்றுக்கொடுக்க உத்தரவிட்டார், மூன்று வருடங்கள், அரிஸ்டாட்டிலின் தத்துவங்களும், அறிவுரைகளும் அலக்சாண்டருக்கு மிகப்பெரிய அறிவுத் தூண்களாக இருந்திருக்கவேண்டும்! ஆனாலும் அவரை மட்டுமே குருவாக கொள்ளாமல் பல்வேறு தத்துவ ஆசிரியர்கள் மீதும் மதிப்பும் மரியாதையும் கொண்டவனாக அலக்சாண்டர் இருந்திருக்கிறான்.
இவன் டயோகனிஸ் என்ற ததுவவியலாலரை சந்தித்த கதை பிரசித்தி பெற்றது. இந்தக் கதையின் உண்மைத்தன்மை கேள்விக்குரியதாயினும் செவிவழியாக இந்தக் கதை காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது. இதோ அந்தக் கதை:
அலக்சாண்டர், கிரேக்கத்தில் இளவரசனாக இருக்கும் போது, டயோகனிஸ் என்ற அறிஞர் அலது துறவி அந்த ஊரின் ஒரு மூலையில் வாழ்வதை கேள்விப்பட்டு அவரைப் பார்க்கச் சென்றானாம். டயோகனிஸ் சற்று வித்தியாசமான துறவி என்றே சொல்லலாம், சமூகவியல் என்பதை எல்லாம் மூட்டைகட்டிவிட்டு, ஒரு பெரிய மண் சட்டியினுள் வாழ்ந்துவந்தார். மனிதர் வாழ வேண்டும் என்றால் பெரிய அண்டா அளவு சட்டி என்று வைத்துக்கொள்ளுங்கள். சிலவேளை உடையும் அணியமாட்டாராம் – பரம ஏழை! அலக்சாண்டர் யார்? இளவரசன்! இவன் அழகாக உடைகள் எல்லாம் அணிந்து டயோகனிஸ் முன் சென்று நின்றுகொண்டு, “உங்கள் திறமையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்றேன், உங்களுக்கு நான் எவ்விதத்திலும் உதவ முடியுமா?” என்று கேட்டிருக்கிறான். அதற்கு நம் டயோகனிஸ், “ஆமாம்!” என்றவுடன், அலக்சாண்டருக்கு மகிழ்ச்சி! டயோகனிஸ் தொடர்ந்து, “பார்ப்பா.. அப்படி கொஞ்சம் தள்ளி நில்லு! சூரியனை மறைக்கிறே பாரு” என்று சொல்லிவிட்டு அவர் இருந்தபாட்டில் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார். ஆனாலும் அலக்சாண்டர் கோபம் கொள்ளவில்லை, அவனே அரசனாகிய பின்னர், “நான் அலக்சாண்டர் ஆகியிருக்காவிடில், நிச்சயம் டயோகனிஸ் போலாகியிருப்பேன்” என்று சொல்லியிருக்கிறான்.
அதுமட்டுமல்லாது, பின்னர் அவன் இந்தியா மீது படையெடுத்தபோதும், சமூக வாழ்வில் இருந்து விடுபட்டு, உடையே அணியாமல் துறவறம் சென்ற இந்து மற்றும் ஜயன மதத் துறவிகளைக் கண்ட மாத்திரத்தில், போரை நிறுத்திவிட்டு அவர்களுடன் நீண்ட உரையாடியிருக்கிறான்.
அலக்சாண்டர் கல்விக்கு அதுவும் உலக வாழ்வியலைத் துறந்த கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளது தெரிகிறது.
அடுத்து, அவன் தனது 18 ஆவது வயதில் முதல் போரில் வெற்றிபெற்றான், அதன் பின்னர் அவன் இறக்கும் வரையில் எந்தவொரு போரிலும் தோற்றதே இல்லை. எதிரிகள் தயாராவதற்கு முன்னரே வேகமாகத் செயற்பட்டு எதிரிப் படைகளை நாசமாகிவிடுவானாம். 20 வயதில் அரசனாக முடிசூடிக் கொண்டதன் பின்னர், கிமு 334 இல் கிழக்கு ஐரோப்பாவைக் கடந்து ஆசியாவுக்குள் நுழைந்து பெர்சியா நாட்டுடன் பல யுத்தங்கள் செய்து வெற்றிபெற்றுள்ளான்.
இவனது வெற்றிக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, அவன் வைத்திருந்த 15000 படைவீரர்களைக்கொண்ட வியுகமாகும். ஒவ்வொரு படைவீரரும், அண்ணளவாக 20 அடி நீளமான ஈட்டியைக் கொண்டு எதிரிப் படைகளை தாக்கும் வல்லமை கொண்டிருந்தனர்.
அலக்சாண்டருக்கு இருந்த இன்னொரு விசித்திரப் பழக்கம், போரில் வெற்றிபெற்ற இடத்தில் உள்ள ஊர்களுக்கெல்லாம் தனது பெயரை வைப்பது! அலக்சான்றியா என்ற பெயரைக் கொண்ட நகரங்கள் இவனது ஆட்சியில் அதிகம் இருந்தன, அதில் புகழ்பெற்ற உதாரணம், நைல் நதிக்கு அருகில் கிமு 331 இல் இவன் உருவாக்கிய அலக்க்சான்றியா நகரம். தற்போது எகிப்தின் இரண்டாவது பெரிய நகரமாகும்.
அவனது பெயரைத்தான் வைத்தான் என்று பார்த்தால், ஒரு நகரத்திற்கு தனது குதிரையின் பெயரான பியுசிபாலாவையும் வைத்திருக்கிறான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
கண்டதும் காதல்! அலக்சாண்டர் வாழ்கையிலும் நடந்துள்ளது! கிமு 327 இல் சொக்டியன் என்ற மலைக்கோட்டையைக் கைப்பெற்றியவுடன், 28 வயதான நம் ஹீரோ அலக்சாண்டர் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்களில் ரோக்ஸ்சேன் என்ற இளம் பெண்ணைக் கண்டு உடனே காதல்வயப்பட்டு திருமணமும் செய்துகொண்டான்.
அலக்சாண்டர் இறந்து சில மாதங்களின் பின்னரே ரோக்ஸேன், அலக்சாண்டரின் மகனான அலக்சாண்டர் IV ஐ பெற்றெடுத்தாள்.
இன்றுவரை புரியாத புதிராக இருப்பது அலக்சாண்டரின் மரணம். தனது 32ஆவது வயதில் அவன் இறந்தான். அலக்சாண்டரின் தந்தையும் அவரது மெய்ப்பாதுகாவலனால் கொல்லப்பட்டமையால், இவனுக்கும் அப்படியே எதாவது எக்குத்தப்பாக நடந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அலக்சாண்டரின் தளபதி அண்டிபட்டார் மற்றும் அவரது மகன் கசண்டர் மீது பலத்த சந்தேம் இருக்கிறது. கசன்டரே, அலக்சாண்டரின் மனைவி ரோக்ஸேன் மற்றும் மகன் அலக்சாண்டர் IV ஐ கொல்லுமாறு பணித்தவன்.
சில ஆய்வாளர்கள், மலேரியா, மஞ்சள் காமாலை போன்ற நோயால் அலக்சாண்டர் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். பாபிலோனியாவில் இருந்த நேபுக்கநாசர் என்ற அரண்மனையில் அவர் தனது உயிரை விட்டார். அவரின் திடீர் இறப்பு இன்றும் மர்மமாகவே இருகின்றது.
ரோமச்சக்கரவர்த்தி ஜூலியஸ் சீசர், மார்க் ஆண்டனி மற்றும் அக்டவியன் ஆகியோர் அலக்சாண்டரின் கல்லறைக்கு விஜயம் செய்தவர்களாவர்.
வெறும் 13 வருட ஆட்சியில் அவன் செய்த சாதனைகள் அளப்பரியது, நமக்கு செல்போன் இல்லாமல் பக்கத்துக் கடைக்கு போல முடியல, கிமு காலத்திலேயே அத்தனை வியூகங்களை அமைத்து பல கண்டங்களை தனது ஆட்சிக்குக் கீழ் கொண்டுவந்தவன் – மாவீரன் அலக்சாண்டர். அவனை மாவீரன் என்று சொல்வதில் தவறில்லையே?
தகவல்கள்: history.com, wikipedia