எழுதியது: சிறி சரவணா
நண்பர்களே, இது ஒரு புதிய முயற்சி, சில நாட்களுக்கு ஒரு முறை, அறிவியல் உலகில் நடந்த மாற்றங்கள், புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகள் பற்றிய ஒரு தொகுப்பாக இந்த பலதும் பத்தும் என்ற பகுதியை எழுதப் போகிறேன்.
இணையத்தைப் பாதிக்கும் லீப் செக்கன்
லீப் வருடம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள், அதென்ன லீப் செக்கன்? இன்று எமக்கு நேரத்தை அளக்க பல்வேறுபட்ட முறைகள் உண்டு. மிக மிகத் துல்லியமாக அணுக்கடிகாரங்களைக் கொண்டு நம் நேரத்தை அளக்கிறோம். இது சீசியம் (cesium) என்ற அணு துடிக்கும் எண்ணிக்கையைக்கொண்டு அளக்கப்படுகிறது. இந்த சீசியம் அணு ஒரு செக்கனுக்கு 9 பில்லியனுக்கும் அதிகமான தடவைகள் துடிக்கிறது. மறுபக்கத்தில் பார்த்தால், இந்த சீசியம் அணு 9 பில்லியன் தடவை (9,192,631,770 தடவைகள்!) துடிக்க எடுக்கும் நேரம் ஒரு செக்கன்!
ஆனால் இதிலொரு பிரச்சினை இருக்கிறது, நாம் எப்போது இந்த சீசியம் அணுவை எல்லாம் பார்த்துள்ளோம்? நமக்கு சூரியன் உதித்தால் நாள் தொடங்கிற்று, அதிலிருந்து 12 மணித்தியாலத்தில் சூரியன் மறையத்தொடங்கும் அப்படித்தானே, ஆக மொத்ததில் நமது சாதாரண நேரக்கணிப்பு என்பது பூமியின் சுழற்சியில் தங்கியுள்ளது. அதிலென்ன பிரச்சினை என்று கேட்கிறீர்களா? பூமியின் சுழற்சிவேகம் குறைந்துகொண்டு வருகிறது! ஆம் ஒரு நாள் என்பதன் அளவு அதிகரித்துக்கொண்டே வருகிறது.
ஆக இந்த பூமியின் சுழற்சிவேகத்தின் வித்தியாசத்தை சமப்படுத்த, அணுக்கடிகாரம் மூலம் கணக்கிடப்படும் நேரத்தில் சிறிய மாற்றத்தை சேர்க்கவேண்டும். அதற்குத்தான் இந்த லீப் செக்கன். 1972 இல் இருந்து 25 முறை இப்படி லீப் செக்கன், நேரத்தோடு சேர்க்கப்பட்டுள்ளது. இப்படி மேலதிக செக்கன்கள், நேரத்தோடு சேர்க்கப்படுவதால், பூமியின் சுழற்சிவேகம் குறைவதால் உருவான நேர இடைவெளி நீக்கப்படுகிறது.
இதற்கும் இணையத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்டால், இணையம் வேலைசெய்வது மிகத்துல்லியமான நேரக்கணக்கிநூடாகவே. அதுமட்டுமல்லாது, இணையம் தொழிற்படத்தேவையான கணனிகளில் இருக்கும் நேரத்தைக்கணிக்கும் செயலிகள், பொதுவாக இப்படியான மேலதிக செக்கன்களைக் கையாளும் வண்ணம் தயாரிக்கப்படவில்லை. ஆகவே புதிதாக ஒரு செக்கன் சேரும்போது, அவற்றை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் அவை ஸ்தம்பித்துவிடுவதால் முழு செயல்நிரலுமே அல்லது முறைமையும் செயலிழக்கிறது.
2012 இல் இப்படி ஒரு லீப் செக்கனை சேர்த்தபோது, இணையத்தில் பாரிய ஸ்தம்பிதம் ஏற்பட்டது. கூகிள் போன்ற நிறுவனங்கள் புதிய செயலிகளைப் பயன்படுத்தித் தப்பித்துக்கொண்டாலும், அதிகளவான சிறிய மற்றும் நடுத்தர இணையத்தளங்கள் பாதிப்படைந்தன. ஆனால் இந்த முறை, அதாவது 2015, ஜூன் 30 அன்று சேர்க்கப்பட்ட லீப் செக்கன், பெரிதாக எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை, இதற்குக்காரணம் ஏற்கனவே பல முறைமைகளில் புதிய நிரல்கள் மாற்றப்பட்டு விட்டதும் ஒரு காரணம். இருந்தும். இந்தமுறை, பல இணையத்தளங்களுக்கு 5 நிமிடங்கள் வரை செயலிழப்பு ஏற்பட்டதாக Dyn என்னும் இனைய ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நமக்கெல்லாம், “என்னவோ போடா மாதவா… நாங்க எல்லாம் கழுதை வாலைத் தூக்கிப்பார்த்தே டைம் சொன்னவங்கடா” பீலிங் தானே!
தொழில்நுட்பத்திற்கு துல்லியமான நேரக்கணிப்பீடு எவ்வளவு முக்கியம் என்பதற்கு, எனது GPS – ஏன், எதற்கு, எப்படி என்ற கட்டுரையை வாசித்துப் பாருங்கள்.
ஸ்பேஸ்எக்ஸ்இன் பால்கன்-9 : முதல் விபத்து
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை ஏற்றிச் சென்ற பால்கன் 9 என்ற ராக்கெட், புறப்பட்டு சில நிமிடங்களில் வெடித்துச் சிதறிவிட்டது. 2010 இல் முதன் முதலில் வெற்றிகரமாக தனது விண்வெளிச் சாதனையை தொடக்கி வைத்த பாலகன் 9 ராக்கெட் இதுவரை வெற்றிகரமாக 18 முறை விண்வெளிக்கு செய்மதிகளையும், ISS இற்கு உபகரணங்கள் மற்றும் பொருட்களையும் கொண்டு சென்றுள்ளது.
கடந்த 28 ஆம் திகதி, ISS இற்கு ஆய்வு உபகரணங்களை ஏற்றிக்கொண்டு செல்லும்போதே இந்த ராக்கெட் வெடித்துச் சிதறியுள்ளது. கடந்த 8 மாதங்களில் ISS இற்கு சரக்கை ஏற்றிச்சென்ற மூன்றாவது ராக்கெட் இப்படி வெடித்துச்சிதறியுள்ளது. மற்ற இரண்டும் ரஷ்சிய விண்வெளி ஆய்வுக்கழகத்திற்கு சொந்தமான ராக்கெட்கள்.
பால்கன் 9 இன் வெடிப்புக்குக் காரணம், அதனது ஒக்சீசன் தொட்டியில் உருவாகிய அதிக அழுத்தம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர், ஆனாலும் முழு விபரம் மேலதிக ஆய்வுக்குப் பின்னரே வெளிவரும்.
தொழில்நுட்பத்தில் எவ்வளவு வளர்ந்துவிட்ட பின்னரும், விண்வெளிப் பயணம் எவ்வளவு ஆபத்து நிறைந்தது என்று இப்படியான விபத்துக்கள் எமக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றன.
ப்ளுட்டோவை நோக்கி ஒரு பயணம் – நியூ ஹொரைசன்
இன்னும் 12 நாட்களில் ப்ளுட்டோ மற்றும் அதன் பெரிய துணைக்கோளான சரோனை நாசாவின் நியூ ஹொரைசன் என்ற விண்கலம் நெருங்கிவிடும். 2006 இல் தொடங்கிய பயணத்தில் அண்ணளவாக 5 பில்லியன் கிமீ தூரத்தைக் கடந்து தற்போது செக்கனுக்கு 16 கிமீ என்ற வேகத்தில் ப்ளுட்டோவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. “முன்னாள் கோள்” என்ற அடிப்படையில், நாம் இதுவரை எந்தவொரு விண்கலம் மூலமும் அருகில் சென்று பார்த்திராத ஒரு குறள்கோள் இந்த ப்ளுட்டோ.
முக்கிய தகவல் என்னவென்றால், ப்ளுட்டோவில் மீதேன் வாயு கண்டறியப்பட்டுள்ளது! இன்னும் சில பல தினங்களில் எமக்கு அழகிய ப்ளுட்டோவின் படங்கள் கிடைக்கும், பொறுத்திருந்து பார்ப்போம்.