பலதும் பத்தும் 2 : ப்ளுட்டோ, சுறாமீன்கள், சூரிய நடுக்கம்

எழுதியது: சிறி சரவணா

கடந்த வாரத்தில் அறிவியல் உலகில் இடம்பெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்பு.

ப்ளுட்டோவை நெருங்கிக்கொண்டிருகிறது நாசாவின் New Horizons

நாசாவின் New Horizons என்ற ஆளில்லா விண்கலம் தற்போது ப்ளுட்டோவை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. ஜூலை 11 இல் New Horizons விண்கலம் பிடித்த படம் இதோ. ப்ளுட்டோவில் இருந்து அண்ணளவாக 3 மில்லியன் கிமீ தூரத்தில் இருக்கும் போது  இந்தப் படம் எடுக்கப்பட்டது.

ப்ளுட்டோவின் மேற்பரப்பில் பல்வேறுபட்ட நிலவியல் தடங்கள் காணப்படுவதை நீங்கள் இந்தப் படத்தில் பார்க்கமுடியும். இன்று New Horizons விண்கலம் ஒரு மில்லியன் கிமீ தூரத்தினுள் ப்ளுட்டோவை நெருங்கிவிடும். ஜூலை 14 இல் இந்த விண்கலம் ப்ளுட்டோவிற்கு மிக மிக அண்மையில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அது மணிக்கு 49600 கிமீ வேகத்தில் பயணிப்பதால் வெகு விரைவாக ப்ளுட்ட்வையும் கடந்து சென்றுவிடும்.

New Horizons விண்கலத்தில் ஏழு விதமான விஞ்ஞான ஆய்வுக்கருவிகள் உண்டு. இவை ப்ளுட்டோவைக் கடக்கும்போது தகவல்களைத் திரட்டிக்கொள்ளும், அதனை மீண்டும் பூமிக்கு அனுப்பிவைக்கும்.

மோதும் விண்மீன்பேரடைகள்

இரண்டு வின்மீன்பேரடைகள் மோதும் போது, அந்த இரண்டு வின்மீன்பேரடைகளில் சிறிய விண்மீன்பேரடையில் அதன் பின்னர் விண்மீன்கள் உருவாகுவது இல்லை என்று புதிய ஆய்வுமுடிவுகள் சொல்கிறது!

அண்ணளவாக 20000 வின்மீன்பேரடைகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்ததில் கிடைக்கப்பெற்ற முடிவே இது!

நாம் வாழும் சூரியத் தொகுதியைக் கொண்டுள்ள பால்வீதி என்னும் விண்மீன்பேரடையும், அதன் அருகில் உள்ள மிகப்பெரிய விண்மீன்பேரடையான அன்றோமீடாவை நோக்கி முட்டுவதர்காக மணிக்கு 400,000 கிமீ வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது.

இருந்தாலும் கவலைப்பட அவசியமில்லை, இந்தவேகத்தில் சென்றாலும், இரண்டும் முட்டிக்கொள்ள அடுத்த 4 பில்லியன் வருடங்கள் எடுக்கும்!

காலநிலை மாற்றத்தால் சுறா மீன்களுக்கு ஆபத்து

காலநிலை மாற்றத்தினால் கடல் நீரின் வெப்பநிலை மற்றும் நீரின் அமிலத்தன்மை அதிகரிப்பதால் சுறா மீன்களின் வாழ்க்கைக்கோலம் பாதிக்கப்படும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சுறா மீன்களுக்கு இப்படியாக வெப்பம் அதிகரித்த நீரில் வாழ்வது கடினம் என்பது ஒரு பக்கம் இருக்க, அவை பிடித்து உண்பதற்கான இரைகள் இந்த காலநிலை மாற்றத்தால் வேறு கடல் பகுதிகளுக்கு இடம்பெயர்வதால், உணவுக்குத் திண்டாடவேண்டிய நிலை இன்னொரு பக்கம்.

மனிதன் பூமியில் தோன்ற முன்பிருந்தே கடலில் வாழும் பங்காளி இந்த சுறா மீன்கள். ஒர்டோவீசியன் என்ற காலத்தைச் சேர்ந்த (450 மில்லியன் வருடங்களுக்கு முன்னர்!) சுறா மீன்களுக்கான தடயங்களை நாம் பார்த்துள்ளோம்!

பூமியில் இதுவரை இடம்பெற்ற உயிரினப் பேரழிவுகளைப் பேரழிவுகள் – இந்தக் கட்டுரையையும் வாசித்துப் பாருங்கள்!

இப்படிப்பட்ட ஆதி உயிரினத்திற்கே ஆபத்து என்னும் போது சற்று மனம் சங்கடப்படுவது திண்ணம்! எல்லாம் எம்மால் வந்த வினைதான்! 97% மான சூழலியல் விஞ்ஞானிகள் பூமியின் காலநிலை மாற்றத்திற்கு மனிதனின் செயற்பாடுகள் தான் காரணம் என்கின்றனர்.

அலாஸ்காவின் காட்டுத்தீ

அமெரிக்க மாநிலமான அலாஸ்காவில் வந்த காட்டுத்தீயினால் அண்ணளவாக 5 மில்லியன் ஏக்கர் அளவுள்ள காடு அழிந்துள்ளது. அளவுக்கதிகமான வெப்பநிலை மாற்றம் மற்றும் வறட்சி என்பனவே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டில் மட்டும், அலாஸ்கா மற்றும் கனடாவில் 4,600 இற்கும் அதிகமான காட்டுத்தீ இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கதைசொல்லும் படம்

20150625_082600_blend131.171

இந்தப் படத்தில் நீங்கள் பார்ப்பது நம் சூரியனைத்தான்! சூரியனின் அகப்பகுதியில் நல்ல வெளிச்சமாக மற்றும் பிரகாசமாகத் தெரிவது சூரிய நடுக்கம் (solar flare) ஆகும். M 7.9 என்ற நடுத்தர வகையைச் சேர்ந்த இந்தச சூரிய நடுக்கம் ஜூன் 25, 2015 இல் சூரியனில் இருந்து வெளிப்பட்டது.

படங்கள், தகவல்கள்: நாசா, phys.org