ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 2

எழுதியது: சிறி சரவணா

இந்தப் பகுதியில் ஹபிள் தொலைநோக்கியின் சாதனைகள் மற்றும் அதுமூலம் நாம் கண்டறிந்த பிரபஞ்சஉண்மைகள் பற்றிப் பார்க்கலாம்.

பாகம் 1 ஐ படிக்க: ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 1

ஹபிள் தொலைநோக்கியின் சாதனைகள்

விண்ணியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய பெருமை இந்த ஹபிள் தொலைநோக்கிக்கே சாரும். இதுவரை 10,000 இற்கும் மேற்ப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதுவதற்கு ஹபிள் தொலைநோக்கியின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஹபிள் தொலைநோக்கி மூலம் நாம் இந்தப் பிரபஞ்சம் தொழிற்படும் பல்வேறுபட்ட முறைகளை அறிந்துள்ளோம், பல்வேறுபட்ட வியப்புக்கள், ஆச்சர்யங்கள் மற்றும் எதிர்பாரா முடிவுகள் பல இந்த ஹபிள் தொலைநோக்கி மூலம் மொத்த மனித குலத்திற்கும் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாது, ஏற்கனவே வெறும் கோட்பாடுகளாக மட்டுமே இருந்த பல்வேறுபட்ட அறிவியல், விண்ணியல் முடிவுகள், இந்த ஹபிள் தொலைநோக்கி மூலம் வாய்ப்புப் பார்க்கப்பட்டுள்ளது. எதிர்கால விண்ணியலுக்கான அடிப்படைத் தளமாக ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி செயற்பட்டுள்ளது என்றும் நாம் கூறலாம்.

ஹபிள் தொலைநோக்கி மூலம் நாம் கண்டறிந்ததில் மிக முக்கியமானது, நம் பிரபஞ்சத்தின் வயது. முன்னர் பல்வேறுபட்ட கோட்பாடுகளைக் கொண்டு நம் பிரபஞ்சத்தின் வயதை 10 பில்லியன் வருடங்களில் இருந்து 20 பில்லியன் வருடங்களுக்குள் இருக்கும் என்று கணித்திருப்பினும், ஹபிள் தொலைநோக்கி மூலம் இந்தப் பிரபஞ்சத்தின் வயது 13-14 பில்லியன் வருடங்கள் இருக்கும் என்று துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாது, பிரபஞ்சத்தில் அளவுக்கதிகமாக காணப்படும் கரும்பொருள் பற்றிய ஆய்வில் ஹபிள் தொலைநோக்கியின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்து வருவதற்கு காரணமாக கரும்சக்தி பற்றியும் தெளிவாக ஹபிள் ஆய்வு செய்துள்ளது. அதுமட்டுமல்ல, இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்துவரும் வேகம் அதிகரித்துவருவதையும் ஹபிள் வழங்கிய தகவல்களில் இருந்தும், பூமியில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் பெறப்பட தகவல் மூலமும் அறியமுடிந்துள்ளது.

பல்வேறுபட்ட விண்மீன் பேரடைகள், நெபுலாக்கள், விண்மீன்கள் என்று ஹபிள் எமக்குக் காட்டிய இந்தப் பிரபஞ்ச அதிசயங்கள் மிக அதிகம். விண்மீன் பேரடைகளின் வளர்ச்சி மற்றும் இந்தப் பிரபஞ்சம் இளமையாக இருந்தபோது உருவாகியிருந்த விண்மீன்கள் மற்றும் விண்மீன் பேரடைகள் என்பன பற்றி எம்மால் தற்போது பலவிடயங்களை தெரிந்துகொள்ள காரணமாக இருந்தது இந்த ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி. கீழே ஹபிள் தொலைநோக்கி எடுத்த சில அற்புதமான படங்களை பாருங்கள்! இயற்கையின் விந்தை அல்லவா.

காமாக்கதிர் வெடிப்புகள், தொலைவில் உள்ள விண்மீன்கள் வெடித்துச் சிதறும் பொது உருவாகின்றன என்று எமக்குக் காட்டியதே இந்த ஹபிள் தொலைநோக்கிதான்!

விண்மீன் பேரடைகளின் மையத்தில் பாரிய கருந்துளைகள் காணப்படும் என்று ஒரு கோட்பாடு இருந்தது. ஹபிள் இது சம்பந்தமாக ஆய்வு செய்தபோது, விண்மீன் பேரடைகளின் மையத்தில் பாரிய திணிவுகொண்ட கருந்துளைகள் இருப்பதற்கான ஆதாரங்கள் அதிகமாக இருப்பதை கண்டறிந்தது.

1994 இல் வியாழனில் மோதிய வால்வெள்ளியை ஹபிள் தொலைநோக்கியால் தெளிவாக படம்பிடிக்க முடிந்தது. வியாழனுக்கு அருகில் சென்று படம்பிடித்த வொயேஜர் 2 விண்கலத்திற்குப் பிறகு, வியாழனை மிகத் தெளிவாக படம் பிடித்தது ஹபிள் தொலைநோக்கி. வியாழனுடன் மோதிய வால்வெள்ளியைப் படம்பிடித்ததன் மூலம் வியாழன் போன்ற வாயு அரக்கனுடன் ஒரு வான் பொருள் மோதும் பொது எப்படியான விளைவுகள் ஏற்படும் என்பதனை ஆய்வாளர்கள் படிப்பதற்கு உதவியது.

வியாழனில் மோதுண்ட வால்வெள்ளியால் ஏற்பட்ட தழும்புகள்.
வியாழனில் மோதுண்ட வால்வெள்ளியால் ஏற்பட்ட தழும்புகள்.

ஹபிள் தொலைநோக்கியின் சாதனைகளின் உச்சத்தில் இருக்கும் ஒன்று, Hubble Extreme Deep Field என்ற புகைப்படம். அதாவது தெளிவாக சொல்லவேண்டும் என்றால், ஹபிள் இந்தப் பிரபஞ்சத்தின் ஆழத்தில் இருக்கும் விண்மீன் பேரடைகளை எடுத்த புகைப்படங்கள் இவை. தெளிவாக சொல்கிறேன்.

ஹபிள் தொலைநோக்கி டிசம்பர் 18, 1995 தொடக்கம் டிசம்பர் 28, 1995 வரையான காலப்பகுதியில் 342 தனிப்பட்ட படங்களை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்ட படம் தான் Hubble Deep Field (HDF). இது வானின் மிகச் சிறிய ஒரு பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம், அதாவது ஒரு டென்னிஸ் பந்தை 100 மீட்டார் தொலைவில் வைத்துவிட்டு பார்த்தால் எவ்வளவு சிறிதாக தெரியுமோ, அந்தளவுதான் ஹபிள் படம் பிடித்த வானின் அளவு.

இது மிக மிக சிறிய அளவு என்பதால், இந்தப் படத்தில், பால்வீதியில் உள்ள சில விண்மீன்கள் மாத்திரமே தெரிகின்றன. நீங்கள் கீழே உள்ள HDF படத்தில் பார்க்கும் புள்ளிகள் மற்றும் அமைப்புகள் அனைத்தும் விண்மீன் பேரடைகள். அண்ணளவாக இந்தப் படத்தில் 3000 விண்மீன் பேரடைகள் உண்டு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

Hubble Deep Field: 3000 விண்மீன் பேரடைகள்
Hubble Deep Field: 3000 விண்மீன் பேரடைகள்

இது வெறும் ஆரம்பம்தான், மீண்டும் ஹபிள் தொலைநோக்கியின் பாகங்கள் புதிதாக மாற்றப்பட்டு, மீண்டும் செப்டம்பர் 24, 2003 தொடக்கம் ஜனவரி 16, 2004 வரையான காலப்பகுதியில் மீண்டும் ஒரு முயற்சி எடுக்கப்பட்டது. இப்போது அண்ணளவாக 13 பில்லியன் வருடங்களுக்கு முன்னரான விண்மீன் பேரடைகள், அதாவது பிரபஞ்சம் தோன்றி வெறும் 400 – 800 மில்லியன் வருடங்களில் உருவாகியிருந்த விண்மீன் பேரடைகள் மற்றும் பாரிய பிரபஞ்ச அமைப்புக்களை பார்க்ககூடியதாக இருந்தது. இதனை நாசா Hubble Ultra-Deep Field (HUDP) என அழைத்தனர்.

இந்த HUDP படத்தில் 10000 இற்கும் மேற்பட்ட விண்மீன் பேரடைகள் இருப்பதை ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். இந்தப்படத்தின் அளவை ஒப்பிட்டுப்பார்கவேண்டும் என்றால், ஒரு 1mm நீளஅகலம் கொண்ட கடதாசியை 1 மீட்டார் தூரத்தில் வைத்துவிட்டுப் பார்த்தால் எவ்வளவு சிறிதாக தெரியுமோ, அவ்வளவுதான் இந்தப் படத்தின் அளவும். இப்போது உங்களால் நிச்சயமாக ஹபிள் தொலைநோக்கியின் தொழில்நுட்பத்தைப் பற்றி வியக்காமல் இருக்க முடியாது!

900px-Hubble_ultra_deep_field_high_rez_edit1
இந்த HUDP படத்தில் 10000 இற்கும் மேற்பட்ட விண்மீன் பேரடைகள் இருப்பதை ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

மீண்டும் 2012 இல் நாசா இந்தப் படத்தில் மேலும் சில அம்சங்களை சேர்த்து, அதாவது புறவூதாக்கதிர், அகச்சிவப்புக் கதிர் போன்ற அலை நீளங்களையும் உள்ளடக்கி மேலும் துல்லியமாக புதிய படத்தை வெளியிட்டது, இதில் ஏற்கனவே HUDP இல் இருந்த விண்மீன் பேரடைகளை விட அதிகமாக 5500 விண்மீன் பேரடைகள் தென்படுகின்றது. இதை Hubble eXtreme Deep Field (XDF) என அழைக்கின்றனர்.

இதுவரை மனிதன் பார்த்த மிகத்தொலைவில் இருக்கும் பொருட்களைக் கொண்ட படம் இதுதான்!

986px-NASA-HS201427a-HubbleUltraDeepField2014-20140603
ஹபிளின் XDF படம்: இதில் 15500 இற்கும் மேற்பட்ட விண்மீன் பேரடைகள் உண்டு. ஒவ்வொன்றிலும் பில்லியன் கணக்கான விண்மீன்கள் உண்டு என்பதை கருத்தில்கொள்க!

ஹபிள் தொலைநோக்கிக்கு வயது 25 ஐ தாண்டிவிட்டது, அதன் வாழ்வுக்காலம் பலமுறை நீடிக்கப்பட்டு பல்வேறுபட்ட விண்ணியல் ஆய்வில் அது பங்கேற்றுஇருகின்றது. அதனது சாதனை இன்னும் சில வருடங்களுக்கு தொடரும்.

அடுத்ததாக ஹபிள் தொலைநோக்கியின் கட்டமைப்பு மற்றும் அதன் கருவிகள் பற்றிப் பார்க்கலாம்.