பலதும் பத்தும் 4: கனவு முதல் நாய்கள் வரை

கனவுகள் பலவிதம் அதில் ஒவ்வொன்றும் நீங்கள் தூங்கும் விதம்!

தூங்கும் போது வரும் கனவுகளுக்கும், படுக்கும் நிலைக்கும் (position) சம்பந்தம் இருபதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2004 இல் நடைபெற்ற ஆய்வில், 63 நபர்களைத் தெரிவு செய்து அவர்களை இரு குழுக்களாகப் பிரித்து, ஒரு குழுவில் உள்ளவர்களை இடப்பக்கம் திரும்பியவாறு தூங்கவும், மற்றயவர்களை வலப்பக்கம் திரும்பியவாறும் தூங்கச்செய்து, அவர்களின் கனவுகள் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

இடப்பக்கம் திரும்பியவாறு நித்திரை செய்தவர்களில் 40.9% பேர், பயங்கரக் கனவுகள் வந்ததாக கூறியுள்ளனர். ஆனால் வலப்பக்கம் திரும்பிப் படுத்திருந்தவர்களில் வெறும் 14.6% மட்டுமே பயங்கரமான கனவுகள் வந்ததாகக் கூறியுள்ளனர்.

இதனை அடிப்படியாக கொண்டு ஹாங்ஹாங் பல்கலைக்கழகத்தில் 2012 இல் 670 பேரைக் கொண்டு மீண்டும் செய்யப்பட்ட ஆய்வில், இன்னுமொரு விடயமும் தெரியவந்துள்ளது. அதாகப்பட்டது தலையணையில் முகம் புதைத்து ‘குப்புறப்’ படுத்து உறங்குபவர்களுக்கு பல்வேறுபட்ட விசித்திரக்கனவுகள் வருகிறது. ஏலியன்ஸ், காதல் கனவுகள், மூச்சுத் திணறல் கனவுகள், இறப்பு இப்படி பல…

இதில் ஆய்வாளர்களின் கருத்து என்னவென்றால், தனி மனிதனின் குணநலன்கள் மட்டுமே இந்தக் கனவுகளை விளக்கமுடிவதில்லை என்பதாகும். எனவே தூங்கும் போது நீங்கள் என்ன நிலையில் தூங்குகின்றீர்களோ அதனைப் பொறுத்து கனவுகள் வரலாம்!

சோலார் பனல் ஆய்வில் அடுத்த கட்டம்

பெட்ரோல் டீசல் போன்ற கனிய எண்ணெய்கள் சூழலுக்கு மிக ஆபத்தானவை என்பது தெரிந்தவிடயம், ஆகவே பல நாடுகளும், அரசுகளும் புதுப்பிக்கப்படக்கூடிய சக்திமுதல்களைப் பயன்படுத்துவதில் ஈடுபாடு காட்டுகின்றன. ஆனாலும் இந்த சக்திமுதல்களின் வினைத்திறன் மிகக் குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக சோலார் பனல்.

சூரியனில் இருந்துவரும் ஒளியை மின்சக்தியாக மாற்றவல்ல சோலார் பனல்கள் நீண்டகாலமாக பாவனையில் இருந்தாலும், வினைத்திறன் என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது எனலாம். முக்கிய காரணம் சோலார் பனல்கள் சூரியனின் ஒளி விழும் திசைக்கு ஏற்றவாறு இருக்கவேண்டும். அப்படியில்லாவிடில் சோலார் பனல்களில் இருந்து உருவாகும் சக்தியின் அளவு பெருமளவு குறைகிறது.

இதனைத் தடுக்கும் முகமாக சவூதி அரேபிய தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தாய்வான் பல்கலைக்கழகத்தோடு இணைந்து புதிய பூச்சு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பூச்சு, சோலார் பனல்களில் விழும் ஒளியின் திசை வேறுபட்ட கோணங்களில் மாறினாலும் மிக வினைத்திறனாக சக்தியை உருவாக்கக்கூடியதாக இருப்பதுடன், சோலார் பணல்களை சுத்தமாக பேணவும் உதவுகிறது. இதன்மூலம் சோலார் பனல்களின் வினைத்திறன் நீண்ட நாட்களுக்கு நீடிக்கிறது.

பழைய முறையில் தூசுகள் விழுவதால், காலபோக்கில் சோலார் பனலின் வினைத்திறன் குறைவடைகிறது; ஆகவே அதனை அடிக்கடி சுத்தம் செய்யவேண்டிய தேவை ஏற்படுகிறது. ஆனால் இந்தப் புதிய பூச்சைப் பயன்படுத்துவதால், நீண்ட காலத்திற்கு சோலார் பனல்கள் சுத்தமாக இருக்கும்.

சைனாவின் தளவுளவி நிலவில் புதிய வகையான பாறையைக் கண்டுபிடித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ரஷ்சியாவிற்குப் பிறகு வெற்றிகரமாக ஒரு தளவுளவியை நிலவில் இறக்கிய பெருமை சீனாவிற்கே சேரும் (மேட் இன் சைனாவா என்று முகம் சுளிப்பவர்கள் கவனத்திற்கு!)

யுடு (Yutu) என பெயரிடப்பட்ட இந்தத் தளவுளவி இரண்டு வருடங்களுக்கு மேலாக நிலவில் உலாவித்திரிவது ஒருவிடயம் என்றால், நிலவில் மிக நீண்டகாலம் உலாவிய பெருமை இதனையே சாரும். சரி யுடு கண்டறிந்ததைப் பற்றிப் பார்க்கலாம்.

யுடு புதிய வகையான ஒரு பாறையை நிலவில் கண்டறிந்துள்ளது. இது மூன்று பில்லியன் வருடங்களுக்கு முன்னர் எரிமலைக் குழம்பால் உருவான ஒரு பாறையாகும். இதில் என்ன விசேசம் என்றால் இந்தப் பாறையின் கனிமப் படிவம் இதுவரை நாம் அறிந்திராத ஒன்று. ஆகவே இது விஞ்ஞானிகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

யுடு அனுப்பிய தகவல்களை ஆய்வுசெய்த சீன மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள், இந்தப் பாறை 2.96 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.

நிலவு உருவாகி 4.5 பில்லியன் வருடங்கள் ஆகின்றது மேலும் அது உருவாகி 500 மில்லியன் வருடங்களில் பாரிய எரிமலை வெடிப்புகள் அங்கு இடம்பெறத் தொடங்கின என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் புதிய பாறையின் கண்டுபிடிப்பு நமக்கு சொலவது என்னவென்றால், பூமியைப் போல அல்லாமல், நிலவின் மேற்புறப் பகுதி வேறுபட்ட கனிமவீதங்களில் அமைந்துள்ளது என்பதே.

இந்த ஆய்வு, நிலவின் உருவாக்கம் பற்றி மேலும் தெளிவாக விளங்கிக்கொள்ள உதவும் என்று நம்பலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

மனிதர்களை காப்பியடிக்கும் நாய்கள்

மனிதர்களின் முகபாவங்கள் மற்றும் உணர்சிகளை நாய்கள் ‘காப்பி’ அடிப்பதாக புதிய ஆய்வு ஒன்று சொல்கிறது. ஒரு மனிதனோடு மிக நெருக்கமாக இருக்கும் நாய், அவரைப் போலவே உணர்வுகளை பிரதிபலிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

நாய்கள் பொதுவாக தங்களுக்குள் உணர்வுகளை மிக வேகமாகப் பரிமாற்றிக்கொள்ளும். உதாரணமாக, ஒரு நாய் விளையாடத் தயாராக இருபதாக சிக்னல் செய்தால், அதாவது வாலாட்டி “வல்..வல்” என்று குரைத்தால், மற்றைய நாயும் உடனே அந்த ‘மூடிற்கு’ மாறிவிடுமாம். அதேபோல் மனிதர்களையும் அவை தொடருகின்றன.

படம் சொல்லும் கதை

சீனியா எனப்படும் ஒரு வகை பூக்கும் தாவரம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் வளர்க்கப்படுகிறது. ஈர்ப்புவிசை இல்லா இடங்களில் எப்படி தாவரங்கள் வளரும் என்பதைப் பற்றிய ஆய்வுக்காகவே இவை அங்கு வளர்க்கப்படுகின்றன.

iss046e001336

படம்: நாசா


 

மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.

https://www.facebook.com/parimaanam