ஒன்பதாவது கோள் – மீண்டும் ஒரு கண்டுபிடிப்பு

நானெல்லாம் பாடசாலையில் கல்விகற்கும் போது சூரியத்தொகுதியில் ஒன்பது கோள்கள் இருக்கின்றன என்றுதான் படித்தேன். அப்போது புளுட்டோவும் ஒரு கோளாக இருந்தது. பின்னர் 2006 இல் சர்வதேச விண்ணியல் கழகம் (IAU), புளுட்டோவை குறள்கோள் (dwarf planet) என அறிவித்தது. அதன்பின்னர் பல் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள், சமாதானத் தூதுகள் என்று புளுட்டோவை ஆதரிப்பவர்கள் ஒரு பக்கம், புளுட்டோவை எதிர்ப்பவர்கள் ஒரு பக்கம் என்று ஒரு பிரிவே வந்துவிட்டது. எப்படியோ இன்றுவரை புளுட்டோ மீண்டும் கோளாக பதவியுயர்வு பெறவில்லை.

ஆனால் தற்போது ஒன்பதாவது கோள் என்று கூறிக்கொள்ளத்தக்க ஒரு கோள் சூரியத்தொகுதியில் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதற்கான ஆதாரங்களும் மிக ஆணித்தனமாக இருகின்றன.

கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் (California Institute of Technology) விண்ணியல் ஆய்வாளர்கள் மைக்கல் பிரவுன் (Michael E Brown) மற்றும் கொன்ஸ்டன்டின் பட்டிஜின் (Konstantin Batygin) இருவருமே இந்த புதிய ஒன்பதாவது கோள் இருப்பதற்கான ஆதாரத்தைக் கண்டறிந்துள்ளனர்.

21PLANET-superJumbo-v2
ஒன்பதாவது கோள் எப்படி இருக்கலாம் என்று ஓவியரின் கற்பனை. நன்றி: Caltech

அப்படி என்ன ஆதாரத்தை இவர்கள் கண்டறிந்துவிட்டனர் என்று பார்க்கலாம்.

நெப்டியுநிற்கும் அப்பால் சூரியனைச் சுற்றிவரும் ஆறுக்கும் மேற்பட்ட விண்பொருட்களை ஆய்வுசெயத்தில், அவற்றின் பயணப்பாதையில் ஒரு முரண்பாடு தெரிவதை விஞ்ஞானிகள் அவதானித்தனர். இந்த ஆறு விண்கற்கள்/ விண்பொருட்களும் சூரியனை ஒரு குறித்த பக்கத்தில் இருந்தே சுற்றுகிறது. மேலும் இவை அண்ணளவாக ஒரே கோணத்தில் சூரியனைச் சுற்றிவருகின்றன. Caltech ஆய்வாளர்களைப் பொறுத்தவரை எதேர்ச்சையாக இப்படி இருப்பதற்கான நிகழ்தகவு 14,000 இற்கு 1 மட்டுமே, ஆகவே இந்த சற்று முரனான சுற்றுப்பாதைக்கு வேறு ஒரு காரணம் இருக்கலாம் என்று இவர்கள் கருதுகின்றனர். அந்தக் காரணம் – ஒன்பதாவது கோள்!

ஒன்பதாவது கோள், தனது ஈர்ப்புவிசையினால் இந்த சிறிய விண்பொருட்களின் பாதையை தனது ஆதிக்கத்தில் வைத்துள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்து. நீண்டகால அவதானிப்பு மற்றும் கணணி மாதிரி அமைப்புகள் நிச்சயம் ஒரு கோள் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

இவர்களது கணக்குப்படி இந்தப் புதிய ஒன்பதாவது கோள், அண்ணளவாக நெப்டியூன் கோளின் அளவு அல்லது பூமியின் திணிவைப் போல பத்துமடங்கு திணிவைக் கொண்டிருக்க வேண்டும்.

மேலும் இது சூரியனில் இருந்து 32 பில்லியன் கிமீ தொலைவில் சுற்றிவரவேண்டும், அதுவும் அதனது நீள்வட்டப் பாதையில் சூரியனுக்கு அருகில் இருக்கும் போதுதான், அது சூரியனுக்கு தொலைவில் செல்லும் போது சூரியனில் இருந்து 160 பில்லியன் கிமீ தொலைவில் இருக்கும். மேலும் ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 10000 – 20000 வருடங்கள் வரை எடுக்கும்.

ஒரு ஒப்பீட்டுக்கு புளுட்டோவை கருதினால், இது சூரியனுக்கு மிகத்தொலைவில் இருக்கும் போது வெறும் 7.4 பில்லியன் கிமீ தொலைவிலேயே இருக்கிறது. சூரியனைச் சுற்றிவர 248 வருடங்கள் எடுக்கிறது. இப்போது உங்களுக்கு புதிய ஒன்பதாவது கோள் எவ்வளவு தொலைவில் சூரியனைச் சுற்றிவருகிறது என்று புரிந்திருக்கும்.

இப்போது இருக்கும் சிக்கல் என்னவென்றால், இதனை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் இந்த ஒன்பதாவது கோளின் சுற்றுப்பாதையை கண்டறிந்துவிட்டனர். ஆனால் அந்தப் பாதையில் இந்தக் கோள் தற்போது எங்கே உள்ளது என்பது தெரியாத விடயம் மற்றும் கண்டறியக் கடினமான விடயம்! ஆகவே இப்பொது இருக்கும் முக்கியமான வேலை, இந்தக் கோளைக் கண்டறிவதுதான்.

சூரியத் தொகுதியில் 8 கோள்களும் புளுட்டோவும் இருப்பது நாமறிந்த விடயம். புளுட்டோ இருக்கும் பிரதேசத்தை கைப்பர் பட்டி (Kuiper belt) என்று விண்ணியலாளர்கள் அழைக்கின்றனர். இப்பிரதேசத்தில் பில்லியன்கணக்கான பனியால் ஆன விண்பொருட்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன. அதில் புளுட்டோவைப் போல அல்லது அதனைவிடவும் பெரிய விண்பொருட்கள் ஆயிரக்கணக்கில் இருக்கலாம் எனபது விண்ணியலாளர்களின் கருத்து. ஆனால் அதையும் தாண்டி இருக்கும் பிரதேசத்தில் பொதுவாக பெரிய விண்பொருட்கள் இருக்க வாய்ப்பில்லை என்பதைவிட எதுவும் கண்டறியப்படவில்லை என்பதே உண்மை.

ஆனால் 2003 இல் ஒரு புதிய விண்பொருள் ஒன்று புளுட்டோவையும் தாண்டி கைப்பர் பட்டிக்கும் வெளியே சூரியனைச் சுற்றிவருவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதற்கு செட்னா (Sedna) என்றும் பெயரிட்டனர். இது ஒருமுறை சூரியனைச் சுற்றிவர 11,400 வருடங்கள் எடுக்கிறது. எப்படி இந்த செட்னா மிகத்தொலைவில் சூரியனைச் சுற்றிவருகிறது என்று ஆய்வாளர்களால் தெளிவாகக் கூற முடியவில்லை. செட்னாவைப்போல வேறு விண்பொருட்களை கண்டறிந்தால் இதற்குப் பதில் சொல்வது இலகுவாக இருக்கும் என்று கருதிய ஆய்வாளர்கள் செட்னா போன்ற வேறு ஏதாவது தென்படுகிறதா என்று தேடினர். ஆனால் வேறு எந்தப் பொருளும் ஆய்வாளர்களின் கண்களுக்கு அகப்படவில்லை.

1024px-Sedna_orbit.svg
சேட்னாவின் சுற்றுப்பாதை சிவப்பில். ஊதா நிறத்தில் இருபது புளுட்டோவின் சுற்றுப்பாதை.

அதன் பின்னர் 2014 இல் மீண்டும் ஒரு புதிய கண்டுபிடிப்பு. செட்னாவைப் போன்ற இன்னுமொரு பொருள் கண்டறியப்பட்டது. அதுவும் ஆச்சரியகரமாக செட்னாவைப்போலவே அண்ணளவாக அதே சுற்றுப் பாதையை அதே கோணத்தில் கொண்டிருந்தது. இது ஆய்வாளர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

பல கோட்பாட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இது ஈர்ப்புவிசைக் குளறுபடியாக இருக்கலாம் என்று கருதினாலும், சில ஆய்வாளர்கள் நிச்சயம் இந்த விண்பொருட்களின் சுற்றுப் பாதைக்கு வேறு எதாவது ஒரு பெரிய கோள் போன்ற பொருள் காரணமாக இருக்கலாம் என்று கருதினர்.

ஆகவே புதிய ஒரு கோள் இருந்தால் இந்த விண்பொருட்களின் பயணப்பாதை எப்படி இருக்கும் என்று கணனியில் மாதிரிகளை உருவாக்கிப் பார்த்த போது, அது அவதானிப்போடு பொருந்துவது தெரியவந்தது. இதனால் நிச்சயம் ஒன்பதாவது கோள் ஒன்று இருக்கும் என்று இந்த ஆய்வைச் செய்த விண்ணியலாளர்கள் கருதுகின்றனர்.

இந்த ஆய்வின் முக்கிய ஆய்வாளர் பிரவுன் அடுத்த ஐந்து வருடங்களில் இந்தக் கோளை எப்படியாவது கண்டுபிடித்துவிட முடியும் என்று கூறுகிறார்.

தொழில்நுட்ப வளர்ச்சி மேலும் மேலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்துக்கொண்டே இருக்கறது. பொறுத்திருந்து பார்க்கலாம் ஒன்பதாவது கோள் எப்படி இருக்கும் என்று!

தகவல்: nytimes, Wikipedia, centauri-dreams


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.

https://www.facebook.com/parimaanam